வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 4, 2009

மன்னிச்சிடுங்கோ அண்ணா....

நாளைக்கு தேர்வு. இன்னும் நுழைவு சீட்டு வந்து அடையவில்லை. எப்படி தேர்வு எழுதுவேன் என்று புரியாமல் குழப்பத்தில் இருந்தேன். தேர்வுக்கு படிப்பதற்காக அலுவலக விடுமுறை போட்டு படித்து விட்டேன். இந்த சமயத்தில் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.

தேர்வுக்கு பணம் கட்ட கடைசி நாளுக்கு முந்தின நாள் ஒரு லேட்டர் வந்தது. 500 ரூபாய்க்கு டி.டி. எடுக்க வேண்டும் என்று இருந்தது. எப்படியோ அடித்து பிடித்து பணம் கட்டிவிட்டேன்.

அங்கு வேலை செய்யும் ராகவன் என்பவர் 350 ரூபாய்க்கு டி.டி எடுத்தால் போதும் என்றார். 'மார்க் ஷீட்' கடைசி ஆண்டு தான் கொடுப்பார்கள். அதனால் பணம் கட்ட வேண்டாம் என்றான். அவர் சொல்லுவதை நம்பி நானும் 350 ரூபாய்க்கு டி.டி., பார்ம் அனைத்தும் அங்கு இருக்கும் ஒரு பெட்டியில் போட்டேன்.

இன்னும் தேர்வுக்கு நுழைவு சீட்டு வராததால் நானும், என் நண்பன் பரத்தை அழைத்துக் கொண்டு நான் படிக்கும் திறந்த பல்கலைக்கழகத்திற்கு சென்றேன். சென்ற முறை டி.டி. எடுக்க சொன்ன ராகவன் ரொம்ப தீவிரமாக வேலை செய்துக் கொண்டு இருந்தார்.

"ஸார் ! என் பேரு தியாகு. இங்க 'M.B.A' எக்ஸாமுக்கு அப்ளை பண்ணேன். இன்னும் ஹால் டிக்கேட் வரல...." என்றேன்.

" உன் நம்பர் சொல்லு..." என்று உதாசினம் படுத்துவது போல் கேட்டான்.

" 583480...." என்ற என் என்னை சொன்னேன்.

" இரு வரேன் " என்று கூறி உள்ளே சென்றார் ராகவன்.

பதினைந்து நிமிடங்களாக ராகவன் எதோ தேடிக்க் கொண்டு இருந்தார்.

" என்ன தியாகு ? சீக்கிரம் வேல முடிஞ்சதும் வெளியே போலாம் சொல்லிதானே கூப்பிட்ட. வேலை முடியுற மாதிரி தெரியல...." என்று கேலியாக பரத் கேட்டான்.

" கொஞ்சம் வெயிட் பண்ணுடா..." என்றேன். இவனிடம் வண்டி இருப்பதால் போன் போட்டு வர வைத்தேன். வந்த வேலை முடியுற வரை எத்தன தடவை இப்படி கேட்க போறானோ என்று தோன்றியது. உள்ளே சென்ற ராகவன் தன் கையில் சில காகிதங்களோடு வந்தார். அதை பார்த்ததும் சற்று அதிர்ந்து விட்டேன்.

என் தேர்வுக்காக எடுத்த டி.டி., பார்ம் எல்லாம் இங்கேயே இருந்திருக்கிறது. தலைமை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பாமால் வைத்திருந்தனர்.

" என்ன ஸார்.... நான் கொடுத்த பார்மை அப்படியே கொடுக்குறீங்க...." என்று வியப்புடன் கேட்டேன்.

" பணம் கம்மியா கட்டியிருக்க... போய்ட்டு அடுத்த வாட்டி பணம் கட்டி எழுது...." என்று அலட்சியமாக சொன்னான்.

" நீங்க சொன்ன பணம் தான் டி.டி எடுத்து கொடுத்தேன். இப்போ நீங்களே இப்படி சொன்னா எப்படி....??" என்றேன்.

"நா சொன்னா உனக்கு அறிவு எங்க போச்சு. போ... போ. அடுத்த வருஷம் வந்து எழுது...." என்று பிச்சைக்காரனை விரட்டுவது போல் விரட்டினான்.

"யோவ்... கொஞ்சமாவது மரியாதையா பேசு. நான் நாளைக்கு எக்ஸாம் எழுதனும். இன்னும் என் பார்ம் இங்கையே வச்சிருக்க. அதுக்கு பதில் சொல்லு...." என்று கோபமாக பேசினேன்.

" அதான் சொல்லிட்டேன்ல. போடா...." என்றான்.

" டி.டி பின்னாடி என் போன் நம்பர் இருக்குல. பணம் கம்மியா இருந்தா போன் போட்டு சொல்ல வேண்டியது தானே..." என்றேன்.

" எனக்கு வேற வேலையில்ல... முதல்ல இடத்த காலிப்பண்ணு." என்று என்னை துரத்துவதிலே குறியாக இருந்தான்.

எனக்கு கோபம் தலைக்கேறியது. அவன் பார்ம் அனுப்பாமல் இருந்ததால் இனிமேல் இந்த வருடம் தேர்வு எழுத முடியாது என்பது உறுதியாகி விட்டது. ஆனால், அவன் மரியாதை இல்லாமல் பேசியது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. என் ஆதங்கத்தை கொட்டாமல் இருக்க முடியவில்லை.

" உன்னால ஒரு வருஷம் படிப்பு போச்சு. கேட்டா பொருப்பிலாம்ம பதில் சொல்லுற..." என்று நானும் அவனை மரியாதையில்லாமல் ஒருமையில் பேசினேன். என்னுடன் வந்த பரத் என்னை பேசாமல் தடுத்தான். பெரிய பிரச்சனை ஆனாலும் பரவாயில்லை என்று ஒரு முடிவோடு நான் இருந்தேன்.

" படிச்சவனா நீ. உன்னால முடிஞ்சது பண்ணிக்கோ...." என்று அலட்சியமாக பேசினான்.

அவன் மரியாதையில்லாமல் என்னை பேசியது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனை பற்றி புகார் கொடுக்க துணை மேலாளரிடம் சென்றேன்.

அலுவலக அறை பலகையில் 'ரங்காச்சாரி' என்று பெயர் இருந்தது.

உள்ளே சென்றவுடன் எனக்கு முன் ராகவன் அறையில் இருப்பதை பார்த்தேன். அவன் கண்டிப்பாக நடந்ததை கூறியிருப்பான்.

" வணக்கம் ஸார். நான் நாளைக்கு எக்ஸாம் எழுதனும். இன்னும் ஹால் டிக்கெட் வரல... " என்று என் பிரச்சனை சொல்ல தொடங்கினேன்.

" இனிமே ஒண்ணும் பண்ண முடியாது தம்பி. அடுத்த வருஷம் வந்து எழுதுங்க...." என்று அதே பதிலை கூறினார்.

" அது கூட பரவாயில்ல... உங்க ஸ்டாஃப் என்ன மரியாதையில்லாம பேசிட்டாரு. நான் யார் கிட்ட கம்ளேன்ட் பண்ணனும்..." என்றேன்.

" நான் தான் இவருக்கு சீனியர். என் கிட்ட சொல்லிடிங்கல கலம்புங்க...." என்று மீண்டும் அலட்சியமாக பதில் வந்தது.

எனக்கு வந்த கோபத்தில் அவனை அடித்து விடலாம் என்று இருந்தேன். அதற்குள், என் நண்பன் பரத் அறைக்குள் நுழைந்தான். அவன் முகத்தில் எதோ மாற்றம் தெரிந்தது.

"வணக்கம் அண்ணா ! இவர் என் ஸ்நேகிதர். எனக்காக தான் பேசிக்கிட்டு இருக்கார். எங்கள பார்த்து உங்க மனுஷ படிச்சவளா கேட்டா கோபம் வராம... என்ன அண்ணா பண்ண முடியும்." என்று அக்கிரகார பாஷை பின்னி எடுத்தான் பரத்.

" யோவ்... உனக்கு கொஞ்சமாவது அறிவுயிருக்கா... நம்ப மனுஷால்னு தெரிஞ்சும் இப்படியா பேசுறது. " என்று ராகவனை கடித்துக் கொட்டினார் ரஙச்சாரி.

" ஸாரிடா அம்பி... என்ன படிக்கிறே....." என்று மிக அக்கரையா கேட்டார்.

" MBA படிக்கிறேண்ணா...."

" இந்த வருஷம் எக்ஸாம் எழுத முடியாது. அடுத்த வருஷம் பேஷா படிச்சு எழுது... இனி நோக்கு இப்படி நடக்காம பார்த்திக்கிறேன்.

" சரிண்ணா... கொஞ்ச மரியாதையா பேச சொல்லுங்கோ.... அது போதும்" என்று கூறி என்னை அந்த அறையையில் இருந்து அளைத்து சென்றான்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான் சொன்னதை தான் என் நண்பன் பரத்தும் சொன்னான். எனக்கு கொடுக்காத மரியாதையை அவனுக்கு மட்டும் எப்படி கிடைத்தது என்று வியப்பாக இருந்தது.

வெளியே வந்தவுடன் பரத் தன் நெற்றியில் இருந்த நாமத்தை அழித்தான். இப்போது, " நேக்கு விஷயம் புரிந்திடுத்து....." என்று அவனிடம் சிரித்துக் கொண்டே சொன்னேன்.

------

யார் மனதை நோகும்படியான கதையில்லை. தொலைத்தூர கல்வி மூலம் MBA படிக்கும் என் நண்பருக்கு நடந்த சம்பவத்தை கற்பனை கலந்து எழுதியிருக்கிறேன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails