வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 29, 2012

அந்த மூன்று பெண்கள் - 7

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5 அத்தியாயம் 6

மாமா இன்று ஊரில் இல்லை. அவர் ஊரில் இல்லாத போது நான் அவருடைய புல்லட்டை பயன்படுத்தலாம். மாமா வண்டி எடுத்து பழகி கொள் என்று தான் சொல்வார். அம்மாவுக்கு தான் எப்போதும் பயம். நான் சைக்கிளில் சென்று வரும் வரை வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு இருப்பாள்.

முதல் தடவையாக புல்லட்டை கல்லூரிக்கு எடுத்து செல்வதால் நான் பரூக்கையும் என்னுடன் அழைத்து செல்ல நினைத்தேன். நேற்றே அவனிடம் நான் வந்து அழைத்து செல்ல போவதை சொல்லிவிட்டேன். எனக்காக அவன் காத்துக் கொண்டு இருப்பான். அம்மாவிடம் சொல்லிவிட்டு நான் புல்லட்டை எடுத்து கொண்டு பரூக் வீட்டுக்கு சென்றேன்.

பரூக் வாப்பா பாட்ஷா திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டு இருந்தார். என்னை பார்த்து சிரித்து, உள்ளே ஒரு பார்வை பார்த்தார்.

" பரூக் ! சந்திரு பேட்டா வந்தாச்சு. சீக்கிரம் வா....." என்று அவனை அழைத்தான்.

" உள்ள வா சந்திரு..." என்று சொல்லி திண்ணையில் உட்கார சொன்னார். " படிப்பு எல்லாம் எப்படி இருக்கு. பரூக் நல்லா படிக்கிறானா..." என்று தன் மகனை பற்றி என்னிடம் கேட்டார்.

ஒவ்வொரு பெற்றோர்க்கும் தங்கள் பிள்ளைகள் பற்றின ஏதாவது ஒரு கவலை வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் பெற்றோர்கள் வெவ்வேறு கவலைகளை மாறினாலும், 'கவலை' என்ற ஒரு விஷயத்தை மனதில் வைத்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதில் எந்த பெற்றோர்களும் விதி விளக்கல்ல.

" நல்லா படிக்கிறான்....!" என்றேன்.

" அவன பத்தின கவலை தான் எங்களுக்கு. அவனுக்கு ஒரு வழி பண்ணி வச்சிட்டா நான் சீக்கிரம் அல்லா கிட்ட போய்டுவேன். " என்று கவலை கலந்த குரலில் சொன்னார்.

" என்ன வாப்பா இப்படி பேசுறீங்க.. பரூக் நல்லா இருக்குறத பார்க்க தான் போறீங்க..." என்றேன்.

நாங்கள் பேசிக் கொண்டு இருக்கையில் பரூக் வெளியே வந்தான். 'போவோம்மா' என்றப்படி சைகை காட்டினான்.

" நாங்க கலம்புறோம் வாப்பா..." என்று இருவரும் சொல்லி விட்டு சென்றோம். பரூக்கின் அம்மா ஆயிஷா வெளியே வந்து " ஜாக்கிரதையா பார்த்து போங்கப்பா..." என்றார்.

நாங்கள் இருவரும் புல்லட்டில் சென்றோம். பரூக்கின் வாப்பா கடலூரில் அருகே மீன் வியாபாரம் செய்து கொண்டு இருந்தவர். வியாபாரத்தில் பெருத்த நஷ்டம் ஏற்படவே சிதம்பரத்திற்கு வந்தார். பரம்பரை வீடும், அதில் வரும் வாடகையில் தான் அவர்கள் குடும்பமே ஒடுகிறது. வியாபாரத்தில் தோல்வியுற்று பரூக்கின் அப்பா நொடிந்து போனதை பற்றி பலமுறை பரூக் என்னிடம் சொல்லியிருக்கிறான்.

" என்னடா சும்மா வர.... வாப்பா ஏதாச்சி தப்பா பேசினாறா....??" பரூக் கேட்டான்.

" சச்சே... அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. பாவம் அவர் கஷ்டத்த யார் கிட்டையாவது சொல்லனும். என் கிட்ட சொன்னாரு அவ்வளவு தான். இதில என்ன தப்புயிருக்கு..." என்றேன்.

" அப்போ எதுக்கு எதுவும் பேசாம்ம வர..." என்றான்.

" சில சமயம் உன்ன பார்த்தா பொறாமையா இருக்கு...." என்று என் மனதில் இருப்பதை கூறினேன்.

நான் சொன்னதை கேட்டு கோபப்படுவான் என்று நினைத்தேன். ஆனால், அவன் தன்னை அறியாமல் சிரித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

" எதுக்குடா சிரிக்குற.." என்று கேட்டேன்.

" என்னை பார்த்து பொறாமை படுற முதல் ஆள் நீ தான். அதான் சிரிச்சேன்" என்றான்.

" உங்க வாப்பா கஷ்டப்பட்டாளும் உங்க கூட இருக்காரு. நாங்க இவ்வளவு வசதியா இருந்தாலும் சின்ன வயசுல அப்பா என் கண் முன்னாடி செத்தது என்னால மறக்க முடியல்ல..." என்று என் சோகத்தை சொன்னேன்.

" சாரிடா... உன்ன கஷ்டப்படுத்தனும் சொல்லல..." என்று குரல் தாழ்த்தி பரூக் பேசினான்.

என்னால் இதற்கு மேல் பேச முடியவில்லை. இருவரும் பேசிக் கொண்டே புல்லட்டில் கல்லூரிக்கு வந்து விட்டோம். நாங்கள் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து நான் முதல் பார்த்த குடுமி வைத்த பையன் ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டு இருந்தான். நாங்கள் இருவரும் அவனை கண்டுக் கொள்ளாமல் வகுப்புக்கு சென்றோம்.

பேராசிரியர் பாலசுந்தர் வகுப்பு. என் கல்லூரியில் எனக்கு மிகவும் பிடித்த பேராசிரியர். அவர் வகுப்புக்கு தவறாமல் சென்று விடுவேன். அவரிடம் பாடத்தை தவிர மற்ற விஷயங்களை பேசுவது எனக்கு பிடிக்கும். அவ்வளவு தகவல்களையும் விரல் நுணியில் வைத்திருப்பார்.மொழிப் போரில் ஈடுப்பட்டவர் என்று ஒரு முறை பரூக் கூறியிருக்கிறான். அப்படி என்றால் இவர் தி.மு.கவை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்று அவர் வகுப்பில் பாடத்தில் இல்லாத ஒன்றை பற்றி பேச போவதாக சொன்னார். அப்படி என்ன சொல்ல போகிறார் என்ற ஆர்வத்துடன் அமர்ந்திருந்தேன்.

" நீங்கள் எத்தனை பேர் சிதம்பரம் நடராஜன் கோயில் சென்று இருக்கிறீர்கள் ? " என்று கேட்டார்.

நான் சிதம்பரத்திலே பிறந்து வளர்ந்தவன். வாரத்துக்கு ஒரு முறையாவது நடராஜன் கோயில்லுக்கு போகாமல் இருந்ததே இல்லை. ஒவ்வொரு மாணவர்கள் ஒவ்வொரு எண்ணிகையை சொல்ல என்னால் மட்டும் சரியாக சொல்ல முடியவில்லை.

" இத்தனை முறை சென்ற நீங்கள். அங்கு திருப்பாவை வாசித்து பார்த்திருப்பீர்களா...?" என்று கேட்டார்.



இதுவரை அதை பற்றி யோசிக்காத நான் அவர் சொன்ன பிறகு யோசித்து பார்த்தேன். ஆம்... நடராஜன் கோயிலில் தமிழ் திருப்பாவை யாரும் பாடி நான் பார்த்ததில்லை. "ஏன் அப்படி ?" என்று நான் கேட்கும் முன் அவரே பதில் கூறினார்.

" தமிழுக்கு நாம் கொடுக்கும் மாரியாதை அவ்வளவு தான். தமிழை தாய் மொழியாக கொண்ட மாநிலத்தில் பிறந்த நாம், ஏன் கோயிலில் சமஸ்கிரத்தில் அர்ச்சனை செய்யப்படுகிறது ஒரு முறையாவது யோசித்து பார்த்திருப்பீர்களா...? " என்று இன்னொரு கேள்வி கேட்டார்.

நான் இதுவரை யோசிக்காததை எல்லாம் இவர் சொல்லிக் கொண்டு இருந்தார். நம் மாநிலத்தில் தாய்மொழி தமிழ் என்றால் மற்ற மொழி அந்நிய மொழி தானே?? ஏன் சமஸ்கிரத்தில் அரச்சனை செய்ய வேண்டும். "நம் கடவுளுக்கு தமிழ் தெரியுதா என்ன...?" என்று எனக்குள் கேட்டு கொண்டேன்.

" தமிழை பேசி விட்டு தமிழை எதிர்க்கும் ஒரே இனம் தான் பார்ப்பன இனம். அவர்களுக்கு தெய்வ பாஷையான சமஸ்கிரத்தில் அரச்சனை செய்தால் தான் கடவுளுக்கு காது கேட்கும். மற்ற பாஷையில் அர்ச்சனை செய்தால் கடவுளுக்கு காது கேட்காதாம்" என்று பூஜை முறையை கேலி செய்தார்.

அண்ணாதுரை தான் கடவுள் இல்லை என்று சொல்பவர் என்று மாமா சொல்லியிருக்கிறார். இவரும் அதே மாதிரி சொல்ல வருகிறார் போல் தெரிந்தது.

" மாணவர்களே ! தமிழை பாடமாக கொண்ட நீங்கள். சமுதாயத்தில் பார்ப்பனர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்கள் சொல்லும் கடவுளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் " என்று சொன்னார்.

அவர் பேச பேச எனக்கு கேட்க வேண்டும் போல் இருந்தது. அவர் பேசுவதை கேட்டு யாராவது தலைமை பேராசிரியரிடம் பாலசுந்தர ஆசிரியரை பற்றி சொல்லிவிட்டால் நிலைமை என்ன ஆகும் என்று கவலை இல்லாமல் இருந்தார்.

" கடவுள் 'இல்லை' என்று சொல்பவன் 'இல்லை' என்ற ஒற்றை வார்த்தையில் நிறுத்திவிடுகிறான். 'கடவுள் இருக்கிறான்' என்று சொல்பவன் ஏன் உழைக்க வேண்டும். கடவுளே மூன்று வேலை உணவு வைத்துவிடுவாரே ! உழைத்தால் தான் உணவு என்று தெரிந்தவர்களுக்கு, வணங்கி வராத கடவுளுக்காக ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்" என்றார்.

இன்று ஒரு முடிவோடு தான் கல்லூரிக்கு வந்திருக்கிறார் என்று புரிக்கிறது. பார்ப்பனர்களையும், சமஸ்கிரத மொழியையும் இப்படி கடுமையாக சாடி பேசினார். அவர் சொன்ன பல விஷயங்கள் என்னை சிந்திக்க வைத்தது. ஒரு வேலை இதற்கு பேர் தான் 'பகுத்தறிவா' என்று நினைத்துக் கொண்டேன்.
" கடவுள் வணங்குபவன் கடவுள் எங்கே இருக்கிறார் என்று ஆன்மீக தேடலில் வாழ்க்கையை செலவு செய்கிறான். கடவுள் இல்லை என்று நினைப்பவன் 'இல்லை' என்று ஒரு சொல்லை சொல்லிவிட்டு தன் வாழ்க்கையில் இருக்கும் மற்ற வேலைகளை கவனிக்கிறான்." என்றார். தொடர்ந்து, " கடவுள் இல்லை என்று சொல்பவனை விட, கடவுள் இருக்கிறார் என்று சொல்பவன் தான் கடவுளை அதிகமாக அவமாணம் படுத்துகிறான்." என்று தன் பேச்சை தொடர்ந்து கொண்டே இருந்தார்.

ஒரு முறை 'கம்பராமாயணம்' பற்றி வகுப்பெடுக்கும் போது அதில் வரும் பாடலை எடுத்திருந்தார்.

'தாய் உரைகொண்டு தாதை உதவிய தரணிதன்னை,
தீவினை என்ன நீத்து, சிந்தனை, முகத்தில் தேக்கி,
போயினை என்றபோழ்து, புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ, தெரியின் அம்மா.

ராமனின் சிறப்புகளை மற்ற எல்லா இடத்திலும் கூறி, ராமனின் பெருமையை மிக ஆணித்தரமாக நிலைநாட்டி விட்டு, வெகு சுலபமாக, ஆயிரம் ராமருக்கு ஈடாகா என்ற ஒரு சொல்லில் பரதனின் குணத்தை குறிப்பால் உணர்த்திய பாடல். கம்பனின் பாடலை அழகான நெஞ்சில் பதியவைக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தது. அதானாலே அவரை எனக்கு அவரை பிடிக்கும். இதுவரை பிடித்ததை விட இன்று தான் அவரை எனக்கு அதிகமா பிடித்தது. எவ்வளவு விஷயங்கள் பேச்சிலே சிந்திக்க வைத்திருக்கிறார்.

" பேராசிரியர் எப்படி புரட்சிக்கரமாக பேசுகிறார் என்று நினைக்கிறீர்களா. இன்று முதல் நான் வேலையில் இருந்து ஓய்வு பெருகிறேன். இது தான் என் கடைசி வகுப்பு. இன்று ஒரு நாள் என் மனசாட்சிக்கு தகுந்தாற்போல் பாடம் எடுத்த திருப்தி உள்ளது" என்று இன்பம் கலந்தத சோகத்தில் பாலசுந்தரம் பேராசிரியர் சொன்னார்.

எவ்வளவு பெரிய பேராசிரியர். மிக பெரிய விஷயத்தை சர்வசாதாரனமாக சொல்லியிருக்கிறார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதில் ஈட்டி போல் விழுந்தது. இதுவரை இப்படி "ஒரு வகுப்பை ஏன் எடுத்ததில்லை. இதற்கு முன் ஒரு முறை கூட பார்ப்பனர்களை பற்றி பேசியதில்லை..." என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

" இது வரை பார்ப்பனர்களை பற்றி பேசாமல் அமைதியாக இருந்த நான், இப்போது இப்படி பேசுகிறேன் என்றால் எனக்கு கிடைக்க போகும் ஓய்வு தான். இனி எனக்கு வேலை விட்டு செல்ல வேண்டுமோ என்ற பயமில்லை." என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு சென்றார்.
இதுவரை பேராசிரியர் பாலசுந்தரத்துக்கு தன் வேலை ஒரு விலங்காக இருந்திருக்கிறது. அந்த விலங்கு உடைந்த சந்தோஷம் அவர் பேச்சி தெரிந்தது.

நான் அவரிடம் பேச வகுப்பை விட்டு வெளியே வந்தேன். தன் கொள்கை பரப்புவதில் மிக தீவிரமாக இருப்பதால், அவர் செல்லும் பாதையை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

பகுத்தறிவு பக்கம் என் மனம் செல்ல தொடங்கிய போது பெரிய இடி வந்து இறங்கியது. அது எனக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டிற்கே இடி போல் அமையும் செய்தி !

Tuesday, February 28, 2012

உலக சினிமா : The Japanese Wife

இணைய புரட்சி பிறந்த இந்த உலகத்தில் எந்த இடுக்கட்டில் இருக்கும் ஒருவருடன் நாம் தொடர்பு கொள்ள முடிகிறது. நட்பு கொள்ள முடிகிறது. காதல் செய்ய முடிகிறது. இணையம் மூலம் வாசனையை மட்டுமே நம்மால் உணர முடிவதில்லை. விரைவில் அதற்கும் வழி கிடைத்தாலும் வியப்போன்றுமில்லை. ‘இணையதளம்’ என்ற மிடியெட்டர் இருப்பதால் நேரில் பார்க்காமல் பரஸ்பர அன்பை பரிமாறிக் கொள்ள முடிகிறது. ஆனால், இணையம், தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் காதலை, அன்பை பரிமாறிக் கொள்ள உதவியது கடிதங்கள் மட்டும்.



இராணுவத்தில் நாட்டுக்கு வேலை செய்யும் கணவன் தன் மனைவிக்கு முத்தம் அனுப்பியது கடிதத்தில் தான். வெளியூரில் இருக்கும் ஒருவனின் கடிததிற்காக சொந்தபந்தங்கள் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது என்று சொல்லு அளவிற்கு நம் அறிவியல் வளர்ந்து விட்டது. நாம் அனைவரும் மறந்து விட்ட கடித போக்குவரத்து நினைவுப்படுத்தி அதன் மூலம் மெல்லிய காதலை சொல்லியிருக்கும் படம் " The Japanese Wife ".

ஜப்பானில் இருந்து தபாலில் சட்டர்ஜிக்கு பரிசு வருவதில் இருந்து படம் தொடர்கிறது. பரிசு பொருளை தன் அறையில் நிரப்பி ஜப்பானில் இருக்கும் தன் மனைவி மியகே எழுதிய கடிதத்தை வாசிக்கிறான். ஆசிரியர் பணி செய்யும் மியகே கடிதத்தில் தங்கள் எண்ணங்கள், கருத்துக்கள், இலக்கியம் என்று பரிமாரிக் கொள்கிறார்கள். பதினைந்து வருடங்களாக ஒருவரை ஒருவர் பார்க்கமால் கணவன், மனவியாக வாழ்ந்திருக்கிறார்கள். தங்கள் திருமண ஒப்பந்தத்தையும் கடிதம் மூலமே பரிமாரிக் கொள்கிறார்கள்.

பார்க்காமல் வளர்ந்த சட்டர்ஜியின் காதலுக்கு விதவை பெண் சந்தியா மூலம் சிறு சோதனை வருகிறது. சந்தியாவின் எட்டு வயது மகன் சட்டர்ஜியிடம் தந்தை பாசத்துடன் பழகுவதை சந்தியா பார்க்கிறாள். தன்னையும் அறியாமல் சட்டர்ஜி மீது காதல் கொள்கிறாள். ஆனால், சட்டர்ஜி பார்க்காத தன் மனைவிக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. புற்று நோயால் பாதிக்கப்பட்ட மியகே தன் பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு சிகிச்சைக்காக செல்கிறாள். மியாகேயின் புற்றுநோய்க்காக குணமாக உள்ளூர் மருத்துவரிடம் விசாக்கிறான் சட்டர்ஜி. நோயாளியை நேரில் பார்க்காமல் எந்த உதவியும் செய்ய முடியாது என்கிறார் மருத்துவர். வீட்டு திரும்பும் வழியில் புயல் மழையில் நனைகிறான் சட்டர்ஜி. கடும் காய்ச்சலில் பாதிக்கபட்ட சட்டர்ஜியை கிராமத்தில் இருந்து கல்கத்தா மருத்துவர்களிடம் அழைத்து சென்றால் குணப்படுத்தலாம் என்கிறார்கள். ஆனால், கடும் புயல், வெள்ளத்தின் காரணமாக கிராமத்தில் இருந்து யாரும் சட்டர்ஜியை அழைத்து செல்ல முன் வரவில்லை. சட்டர்ஜியும் இறக்கிறான்.

இறுதியில், மொட்டைத்தலையுடன் விதவை கோலத்தில் மியகே சட்டர்ஜியின் கிராமத்துக்கு வருகிறாள். சந்தியா மியகேவுக்கு சட்டர்ஜியின் அறையை காட்டுகிறாள். அறை முழுக்க தான் அனுப்பிய பரிசு பொருள் நிறம்பி இருப்பதை பார்ப்பதில் படம் முடிகிறது.


பெங்காலி எழுத்தாளர் குணால் போஸ் எழுதிய ” The Japanese Wife” சிறுகதை தொகுப்பில் இடம் பெற்ற சிறுகதையை திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் அபர்னா சென். எழுத்தாளர் குணால் போஸூம் ஒரு காட்சியில் தோன்றுகிறார். வங்கால இயக்குனர்களில் மிக குறிப்பிட வேண்டிய இயக்குனர் அபர்னா சென். முதல் முறையாக அடுத்தவர் கதைக்கு திரைக்கதை அமைத்து படம் எடுத்திருக்கிறார்.

பார்க்காமல் காதல் படமான ’காதல் கோட்டை’ என்ற தேசிய விருது படத்தை பார்த்த நமக்கு பெரிய பாதிப்பு ஏற்ப்படுத்தாது மிக முக்கிய காரணம். ஆனால், கதாநாயகன் பாத்திரத்தை தூக்கிப்பிடிப்பது போல் ரைமா சென்னை (சந்தியா பாத்திரம்) மணந்துக் கொள்ளாமல் பார்க்காத தன் மனைவிக்கு விஸ்வாசமாக இருக்கிறான். அதேப் போல், நாயகி அப்படி நடந்துக் கொள்கிறாளா என்பதை தெளிவாக காட்டவில்லை.

இந்த படம் நல்ல பொழுதுப் போக்கு படம் இல்லை என்றாலும், ஒரு கவிதை வடிவிலான படம் என்பதற்கு மாற்று கருத்து இல்லை.

குணால் பாசு எழுதிய "The Japanese Wife" சிறுகதை நூலை வாங்க... இங்கே அழுத்தவும்.

The Japanese Wife படத்தின் சி.டியை வாங்க...

Monday, February 27, 2012

அந்த மூன்று பெண்கள் - 6

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4, அத்தியாயம் 5

அப்படி இப்படி என்று மூன்று மாதங்கள் கல்லூரி வாழ்க்கை ஓடிவிட்டது.

கல்லூரி முடித்து விட்டு வீட்டுக்கு போகாமல் உணவகத்திற்கு சென்றேன். அம்மா கல்லா பெட்டியில் அமர்ந்திருந்தாள்.

"அம்மா...! மாமா எங்கே...?" என்றேன்.

" உள்ள சமையல் அறையில மாணிக்கம் மாமா கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு..."

என் சைக்கிளை நிறுத்தி விட்டு சமையல் அறைக்கு சென்றேன். அங்கு மாணிக்கம் மாமா ராமா மாமாவும்விடம் எதோ சொல்லி கொண்டு இருந்தார்.

" இங்க பாரு... நல்ல இடம். பாரு சீக்கிரம் முடிச்சிடு. புரியுதா..." என்று மாணிக்கம் மாமா சொல்ல ராமா மாமா தலையை தலையை ஆட்டினார்.

எனக்கு மனதில் பயம் வந்தது. இப்போது தான் கல்லூரியில் சேர்த்தார்கள் அதற்குள் எனக்கு திருமண பேச்சா...!! ஐயோ மாமாவை எதிர்த்து என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. மேல் படிப்பு படிப்பு படிக்க முடியாது என்ற சொன்னதற்கு கண் கலங்கி நின்றார். படிக்கும் எனக்கு திருமணம் வேண்டாம் என்றால், " நாங்க எல்லாம் பத்து, பதினைஞ்சு வயசுல தான் கல்யாணம் பண்ணிகிட்டோம்னு" அம்மா சொல்லுவாள். மாணிக்கம் மாமா கூடவே இருக்கிறார். மாமாவை ஊக்கப்படுத்து பேசவைப்பார். யாராவது எனக்கு சாதகமாக ஒருவர் பேசினால் தானே என்னால் எனக்கு நடக்க போகும் திருமணத்தை நிருத்த முடியும்.

என்ன செய்வது..? எப்படி எனக்கு நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்துவது ? என்று மனதில் சிந்தித்தப்படி சமையல் அறையை விட்டு வெளியே வந்தேன். நான் வந்து , சென்றதை மாணிக்கம் மாமாவும், ராமா மாமாவும் கவனிக்கவில்லை.

மாணிக்கம் மாமா வந்தாலே இப்படி தான். எதாவது என்னை யோசிக்க வைத்து விடுவார். ஆயிரம் கேள்விகளை மனதில் விதைத்து விட்டு சென்றுவிட்டார். நான் தான் சிந்தித்துக் கொண்டு குழம்புகிறேன்.

" என்னடா மாமாவ பார்த்தியா...?"

" இல்ல. மாணிக்கம் மாமா கிட்ட முக்கியமான விஷயம் பேசிட்டு இருக்காரு..." என்றேன்.

" எத பத்தி..?" என்று என்னிடமே அம்மா கேள்வி கேட்டாள்.

அம்மாவுக்கு தெரியாமல் மாமா எனக்கு சம்மந்தம் பார்க்கிறாரா...? நான் சிறுவன் என்று என்னிடம் கேட்காமல் இருக்கலாம். என் வாழ்க்கையை பற்றி அம்மாவிடம் பேசாமல் மாணிக்கம் மாமா நேராக ராமா மாமாவிடம் பேசிவிட்டாரா என்ன...? மாமா சம்மதித்து விட்டால் அம்மா சம்மதித்து விடுவார் என்று மாணிக்கம் மாமா நினைத்து விட்டாரோ என்னவோ...!!

எனக்கு என்னானது..? எனக்குள்ளே பல கேள்விகள் கேட்டு கொண்டு இருக்கிறேன். ஒரு கேள்வி கூட மாமாவிடம் கேட்க தைரியமில்லை.

ராமா மாமாவிடம் பேசிவிட்டு மாணிக்கம் மாமா வெளியே வந்தார். என்னை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு, அம்மாவிடம் "வரேன் தங்கச்சி..!" என்று சொல்லி சென்றார்.

எனக்கு அவர் கோபமாக இருந்தது. இன்று இரவு மாமா என்னிடம் என்ன சொல்ல போகிறார், நான் எப்படி சமாளிக்க போகிறேன் என்று தெரியவில்லை.

மாணிக்கம் மாமா சைக்கிள் எடுக்கும் போது திரும்பி ராமா மாமாவிடம் " ராமா ! நான் சொன்னத நல்ல யோசிச்சு பாரு. நல்ல இடம் விட்டுடாதே ! நாளைக்கு பாக்கலாம் " என்று சொல்லி சென்றுவிட்டார்.

" என்ன அண்ணே ! என்ன விஷயமா அவரு வந்திட்டு போறாரு..." என்று மாமாவிடம் கேட்டாள்.

" எல்லாம் நல்ல விஷயம் தான். வீட்டுக்கு போய் பேசலாம் " என்று சிரித்தப்படி சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் நுழைந்தார்.

அம்மாவுக்கு வயதாகிவிட்டது. அவர்கள் பேசுவதை வைத்து என் திருமணத்தை பற்றி பேசுகிறார்கள் என்று கூட யூகிக்க முடியவில்லை. எனக்கு வீட்டுக்கு போகவே பிடிக்கவில்லை. எனக்கு திருமணம் நடக்க கூடாது. அதே சமயம் மாமாவை எதிர்த்து பேசவும் கூடாது. இந்த இரண்டில் ஒன்று தான் சாத்தியம்.

நான் வீட்டுக்கு போகாமல் உணவகத்திலேயே இருந்தேன். இரவு வேலை. உணவகம் முட போகும் நேரம்.

" சந்திரு ! நீ அம்மாவ கூட்டிட்டு வீட்டுக்கு போ. நான் எல்லாத்தையும் பூட்டிட்டு வரேன் " என்றார்.

நான் பதில் சொல்வதற்கு முன்பே அம்மா கல்லா பெட்டியில் இருந்து எழுந்து உணவகம் சாவியை மாமாவிடம் கொடுத்தார்.

அம்மா சைக்கிள் எடுக்க சொல்வது போல் சைகை காட்ட, நான் சைக்கிள் எடுத்துக் கொண்டு வீட்டு வந்து விட்டேன். எப்போதும் கால தாமதமாக வரும் மாமா இன்று பார்த்து கொஞ்சம் சீக்கிரமாக வந்து விட்டார். சிரித்த முகத்தோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

" இந்திரா ! உன் கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்.." என்றார்.

நான் அப்படியே மெதுவாக படுக்கை அறைக்குள் சென்றேன். உடனே, மாமா " என்னடா உள்ள போற. இன்னும் சின்ன பையனா நீ. உனக்கும் குடும்ப பொருப்பு வரனும்" என்றார்.

சந்தேகமேயில்லை. என் திருமணத்தை பற்றி தான் பேச போகிறார். நான் எதுவும் தவறாக பேசாமல் இருக்கனும்.

" சாய்ந்திரம் மாணிக்கம் வந்தான்ல... ஒரு பழைய ஹோட்டல் விலைக்கு வருதான். முப்பதாயிரம் சொன்னான். வாங்குறியா கேட்டான். நான் உன்ன கேட்டு சொல்லுறதா சொல்லிட்டேன். என்னம்மா சொல்லுற" என்றார்.

என்னது ஹோட்டலா...? சாய்ந்திரம் நீங்க ஹோட்டல் வாங்குற பத்தியா பேசிட்டு இருந்தீங்க. அப்பா கடவுளே ! நான் இவ்வளவு நேரம் என்னனமோ யோசித்து என் நேரத்த வீணாக்கிட்டேனே !

" அண்ணே ! அவ்வளவு பணம் நமகிட்ட இருக்கா...?" என்றார்.

" பத்து வருஷம் மேல இந்த தொழில் பண்ணுறோம். அதுல வந்த லாபம் கொஞ்சம் சேர்த்து வச்சு பணம் இருபதாயிரம் இருக்கும்" என்றார்.

மாமா கிட்ட இவ்வளவு பணம் இருந்திருக்கா. தெரிந்திருந்தால் மோட்டார் கார் வாங்க சொல்லியிருப்பேனே...!

"வீட்டு செலவுக்கு நீங்க கொடுத்த பணம் கொஞ்சம் சேர்த்து வச்சு, இரண்டாயிரம் இருக்கும்" என்றாள்.

இது வரை மாமா செலவுக்கு கொடுத்த பணத்தை எதுவும் நான் சேர்த்து வைக்கவில்லை. என்னால் நம்பிக்கையான வார்த்தைகள் மட்டுமே சொல்ல முடிந்தன.

" பரவாயில்ல இந்திரா ! மீதி எட்டாயிரம் கடன் வாங்கிக்கலாம். மாணிக்கம் கடன் வாங்கி தரதா சொன்னான். " என்றார்.

மாமா சொல்லி முடித்ததும் அவர் முகத்தில் சந்தோஷத்தை அளவிட முடியாது. நான் தான் எனக்கு திருமணம் பேசுகிறார்கள் என்று நினைத்து புலம்பி கொண்டு, இப்போது அசடு வழிய நின்றுக் கொண்டு இருந்தேன்.

" என்னடா ஒரு மாதிரிய நிக்குற..." என்று என்னை பார்த்து கேட்டார்.

" நான் என்ன நினைத்தேன் என்று சொன்னால், நானே வம்பில் சென்று மாட்டி கொள்வது போல் இருக்கும்" என்று எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

"ஒண்ணுமில்ல மாமா. வகுப்புல சொன்ன பாடத்த பத்தி நினைச்சிட்டு இருக்கேன்" என்று சொல்லி சமாளித்தேன்.

" ஹோட்டல் வாங்குற விஷயமா நான் அங்க இங்க அலைய வேண்டியது இருக்கு. சாய்ந்திரமான வியாபாரத்த கவனிச்சுக்க " என்று சொல்லிவிட்டு அவர் படுக்க சென்று விட்டார்.

நல்ல வேலை நான் நினைத்தது போல் எந்த பிரச்சனையும் நடக்கவில்லை. நானும் நிம்மதியாக படுக்க சென்றேன். எனக்குள் என்னையும் அறியாமல் கல்யாண ஆசை வந்துவிட்டதோ ? அதனால் தான் இப்படி எல்லாம் சிந்திக்கிறேனா ?

இரண்டு மாமாவும் ஹோட்டலை வாங்க அங்கும் இங்கும் அழைந்தார். ஆனால், அவர்களுக்கு சொன்ன இடத்தில் பணம் கிடைக்கவில்லை. அப்போது தான் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

மாமாவிடம் சொன்னேன். " ஏன் மாமா ? நாம தான் ஹோட்டல் வாங்க போறோமே. பேசாம இப்ப இருக்குற கடைய வித்தா அதுல கொஞ்சம் பணம் வரும்ல.." என்றேன்.

இந்த யோசனை மாமாவுக்கு முன்பே வந்திருக்கிறது. முதல் முதல் தொடங்கிய தொழில். லாபத்தில் ஓடுவதை எதற்கு விக்க வேண்டும் என்று நினைத்தார். கேட்ட இடத்தில் பணம் கிடைக்காததால், வேறு வழியில்லாமல் உணவகத்தை வித்து ஹோட்டலை வாங்கினார்.

லாபத்தில் ஓடிய உணவகம் என்பதால் நல்ல விலைக்கு போனது. வந்த பணத்திலும், கையில் இருந்த பணத்திலும் ஹோட்டல் வாங்கிவிட்டோம். கையில் இருந்த கொஞ்ச பணத்தையும் வைத்து ஹோட்டலை புதுமை படுத்தினோம்.

ஹோட்டல் வேலை எல்லாம் நல்லப்படியாக முடிந்தது. என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்க வேண்டியதாக இருந்தது. 'ராமா உணவகம்' என்று நடத்தியதால் 'ஹோட்டல் ராமா ' என்று வைப்பது தான் சரியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், மாமா இதற்கு சம்மதிக்கவில்லை.

" நிறைய செலவு பண்ணியிருக்கோம். எல்லாரையும் கவர மாதிரி பேரு வை" என்றார்.

அவர் சொன்னவுடம் என் மனதில் ஒரு தோன்றியது. கண்டிப்பா இந்த பெயரை சொன்னால் மாமா மறுக்க மாட்டார். அவரால் மறுக்கவும் முடியாது.

" இன்னொரு பேரு இருக்கு சொல்லவா..."

" சொல்லு..."

" ஹோட்டல் அண்ணா..!" என்றேன்.

மாமா முகத்தில் எந்த யோசனையுமில்லை. அந்த பேர் தான் மதராஸ் மாநிலத்தையே ஆட்டி வைத்துக் கொண்டு இருக்கிறது. என்னை கட்டியணாஇத்து 'ஹோட்டல் அண்ணா' என்று பெயர் பலகைய தயார் செய்ய சொன்னார்.

புது ஹோட்டல் பெயர் பலகைக்கு பூ போட்டு அலங்காரம் செய்திருந்தோம். சாப்பிடும் அறையில் வண்ண வண்ண துணிகளை தொங்க விட்டுயிருந்தோம். 'வறுமை' என்ற வார்த்தை எங்கள் குடும்பத்தில் இருந்து மறைய தொடங்கியது. கொஞ்ச நாளில் மாமா புல்லட் ஒன்றை வாங்கினார். நானும் ஓட்டி பார்த்தேன். எனக்கு பிடித்திருந்தது.

மாமாவை பார்த்தால் எனக்கு பெருமையாக இருந்தது. எங்களை காப்பாற்ற ஒரு உணவகம் தொடங்கினார். இப்போது ஒரு ஹோட்டலுக்கே உரிமையாளராகிவிட்டார். இன்று சிதம்பரத்தில் சொல்லி கொள்ளும் அளவில் 'ஹோட்டல் அண்ணா' இருக்கிறது.

கல்லூரி முடித்து விட்டு ஹோட்டலுக்கு வந்தேன். மாமா அங்கு சாப்பிட வந்தவர்களுக்கு எல்லோருக்கும் இனிப்பை இலவசாமாக வழங்கினார். மாமாவுக்கு அதிக சந்தோசம் வந்தால் இனிப்பு வாங்கி வந்து தான் பார்த்திருக்கிறேன். இப்போது கொஞ்சம் வசதி வந்து விட்டதால் எல்லோருக்கு கொடுக்கிறார் போலும்..!

மாமா என்னை பார்த்ததும், மாமா என் வாயில் இனிப்பை தினித்தார். என்னால் சாப்பிட முடியாமல் சாப்பிட்டேன்.

" என்ன மாமா விஷயம்...?"

" ஊரே கொண்டாடிட்டு இருக்கு. என்ன விஷயம் தெரியல்ல..."

இன்று தீபாவளியுமில்லை, பொங்கலுமில்லை. எதற்காக இவ்வளவு சந்தோஷப்படுகிறார் என்று தெரியாமல் விழித்தேன்.

" அண்ணாதுரை தேர்தல்ல ஜெய்ச்சிட்டார். இப்போ அவர் தான் முதலமைச்சர்" என்றார். அவரே முதல்வர் ஆனது போல் எல்லோரிடமும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டார்.

Wednesday, February 22, 2012

அந்த மூன்று பெண்கள் - 5

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3,அத்தியாயம் 4

அண்ணாமலை பலகலைக்கழகத்தில் எனக்கு மாணவனாய் முதல் நாள் அனுபவம் சற்று வித்தியாசமாக இருந்தது. பள்ளிப்பருவத்தில் உடலில் காயம் பட்டாலும் மனதில் யாரையும் நான் வெறுத்துதில்லை. மாலை வரும் வரை எல்லோரும் மைதாணத்தில் விளையாடுவோம். மதம், ஜாதி என்னை தீண்டிப்பார்த்ததில்லை. இதற்கு முரண்பாடான அனுபவத்தை தான் பலகலைக்கழகத்தில் சந்தித்தேன்.

அண்ணாமலை கலைக்கல்லூரி எங்கள் பலகலைக்கழகத்தில் ஒரு பிரிவு. அங்கு இசை, வரலாறு, மொழி என்று பல பிரிவிகளுக்காக மாணவர்கள் படிக்க வசதியாக நூல்களும், ஆசிரியர்களும் இருக்கின்றனர். கல்லூரி வளாகத்தில் நுழைந்தவுடன் குடுமிப் போட்ட ஒருவனை பார்த்தேன். அவன் உருவத்தை பார்த்ததும் புரிந்துக் கொண்டேன் சிதம்பர தீட்சதர் குடும்பத்தை சேர்ந்தவன் என்று ! நடராஜர் கோயிலில் இவர்கள் வைத்தது தான் சட்டம். மூல கடவுளை பார்க்க சட்டையை கலட்டி கொண்டு செல்ல வேண்டும், பிரசாத்தை கொடுத்து விட்டு தட்சனை வாய் திறந்து அவர்களே கேட்பதும் இப்படி பல விஷயங்களை நான் பார்த்திருக்கிறேன். மாமா உணவகம் தொடங்கி இதுவரை குடுமி வைத்தவர்கள் யாரும் வந்து சாப்பிட்டதில்லை. இதற்கு எல்லாம அர்தம் இந்த கல்லூரியில் தான் எனக்கு புரிந்தது.

" முதல் பி.ஏ வரலாறு வகுப்பு எங்க தெரியுமோ...?" என்றான் அந்த குடுமி வைத்த மாணவன்.

" தெரியாது. நீங்க வரலாறு மாணவனா.." என்றேன்.

" அமா. நீங்க என்ன படிக்கிறேள் ? என்று கேட்டான்.

"பி.ஏ தமிழ்." என்றேன்.

என்னை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு சென்றான். 'தமிழ்' என்று தானே சொன்னேன். அதற்கு என்னை ஏன் இப்படி ஒரு முறைப்பு பார்த்தான் என்று புரியவில்லை.

கல்லூரி வளாகத்தை சுற்றி அங்காங்கே மரங்கள் இருந்ததால் நிழலில் நிற்க மிக சௌகர்யமாக இருந்தது. அப்போது ஒருவன் அவனே என்னிடம் வலிய வந்து பேசினான்.

" வணக்கம். என் பேரு பரூக்" என்றான்.

பெயரை வைத்து மதத்தை சொல்லும் நாட்டில் பிறந்து விட்டோம் என்று தோன்றியது. அவன் பெயர் என் மனதில் பதிவாகும் முன்பு அவன் மதம் என் மனதில் பதிவாகிவிட்டது. அவன் பெயர் சொன்ன பிறகு நானும் பதிலுக்கு என் பெயரை சொல்ல வேண்டும் என்று சற்று நேரம் கலிந்து தோன்றியது.

" என் பெரு சந்திரசேகர்." என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

" நீங்க பி.ஏ தமிழா..." என்றான்.

"ஆமா... உங்களுக்கு எப்படி தெரியும் !" என்று கேட்டே.

" நீங்க அந்த தீட்சதர் பையன் கிட்ட பேசுனத கேட்டேன். நானும் பி.ஏ தமிழ் தான்." என்றான்.

" ஓ.! நம்ப க்ளாஸ் எங்க இருக்கும்னு தெரியுமா."

" ம்.. தெரியும். வாங்க போவாம். க்ளாஸ்க்கு நேரமாச்சு." என்று பரூக் பேசி முடித்தவுடன் இருவரும் வகுப்பு சென்றோம்.

வகுப்பில் நுழைந்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கல்லூரிக்கு நுழைந்த போது குடுமி வைத்த மாணவர்கள் பல பேர் இருந்தார்கள். ஆனால், எங்கள் வகுப்பில் மட்டும் ஏன் குடுமி வைத்த ஒரு மாணவன் கூட இல்லை. அவர்களில் ஒருவனுக்கு கூடவா தமிழ் பிடிக்காமல் போனது. நான் யோசித்துக் கொண்டு இருக்கும் போது பேராசிரியர் வகுப்புக்குள் நுழைந்தார்.

" வணக்கம் மாணவமணிகளே...! என் பெயர் பாலசுந்தரம். உங்களுக்கு தமிழ் இலக்கியம் எடுக்க போகும் பேராசிரியர்." என்றார்.

எல்லோரும் அவர் சொல்வதை பார்த்துக் கொண்டு இருந்தோம்.

" நான் இந்த கல்லூரியில் பத்து வருடங்களாக பணியாற்றுகிறேன். இப்போது என்னை பற்றி இது போதும். இப்போழுது நீங்கள் ஒவ்வொருவராக எழுந்து உங்களை அறிமுகம் செய்துக் கொள்ளுங்கள்." என்றார்.

ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்து, அவர்கள் பெற்றோர் பெயரையும் சொன்னார்கள். நான் பரூக் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். இப்போது பரூக் முறை.

" என் பேரு பரூக். அப்பா பேரு பாட்ஷா. அம்மா பேரு ஆயிஷா..." என்றான்.

அடுத்து நான்.

" என் பேரு சந்திரசேகர். அப்பா பேரு நாதன். அம்மா பேரு இந்திராணி. அப்பா உயிரோட இல்லை." என்று சொல்லி முடித்தேன். அப்பா உயிருடன் இல்லை என்று ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை. சொல்லவேண்டும் என்று தோன்றியது. மற்றப்படி பரிதாபத்தை தேடிக் கொள்ள சொல்லவில்லை. நான் சொன்னது ஒருவிதத்தில் நல்லது தான். யாரும் என்னிடம் வந்து 'அப்பா என்ன செய்கிறார்' என்று கேட்க மாட்டார்கள்.

பேராசிரியர் பாலசுந்தரம் என்னை பரிதாபமாக பார்க்கவில்லை. அது மட்டும் என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது.

முதல் நாள் கல்லூரி முடிந்து வீட்டுக்கு சென்றேன். முதல் நாள் கல்லூரிக்கு சென்றதால் அம்மா மாமாவுடன் செல்லவில்லை வீட்டிலேயே இருந்தார். என் வருகைக்காக காத்திருந்தார். நான் வந்ததும்.. ஆரத்தி தட்டுன் வந்தார்.

"என்ன அம்மா... நான் என்ன சண்டைக்கா போய்ட்டு வரேன்..." என்று கேலியாக கேட்டேன்.

" நம்ப குடும்பத்துல யாரும் பட்டப்படிப்பு படிப்போம்னு நினைச்சு கூட பார்த்ததில்ல. நீ தான் முதல் தடவையா படிக்கிற. அதான்.." என்றார்.

" அம்மா !! இன்னைக்கு தான் முதல் நாள். பட்டம் வரத்துக்கு இன்னும் மூனு வருஷம் ஆகும்." என்றேன்.

" பட்டம் வரம்போது வரட்டும். என் பையன் பட்டப்படிப்பு படிக்கிறான். எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா..." என்று என்னை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டாள்.

அப்பா அம்மாவை விட்டு சென்று இருக்க கூடாது. அவர் உயிருடன் இருந்திருந்தால் மாமா இவ்வளவு கஷ்டம் ஏற்ப்பட்டு இருக்காது. அப்பாவுக்கு எதற்கு அவசரமாக கடவுளிடம் சென்றார் என்று தெரியவில்லை. அம்மா சொன்னது போல் கடவுள் தான் மாமா உருவத்தில் வந்து எங்களை இன்று வரை வாழவைக்கிறார்.

அம்மா முகத்தில் இவ்வளவு சந்தோஷம், பூரிப்பு நான் பார்த்ததேயில்லை.

இரவில் வேலையெல்லாம் முடிந்து மாமா உணவகத்தை சாத்தி விட்டு வீட்டுக்கு வந்தார். கையில் வரும் போதே இனிப்பு பலகாரங்கள் எடுத்து வந்தார். அவர் இனிப்போடு வருவார் என்று எனக்கு முன்பே தெரியும். காலையிலேயே இனிப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். முதல் நாள் வகுப்பு பரபரப்பில் நான் சீக்கிரம் என்று விட்டேன்.

" என்ன மருமகனே ! முதல் நாள் வகுப்பு எப்படி இருந்திச்சு" என்று கேட்டப்படி வாயில் இனிப்பை தினித்தார்.

"நல்ல போச்சு மாமா..." என்று இனிப்பை சாப்பிட்டு கொ ண்டே பேசினேன்.

"ஸ்நேகிகங்க யாராவது கிடைச்சாங்களா...?" என்று கேட்டார்.

" ம்... பரூக்னு ஒரு பையன்..." என்றேன்.

பெயரை கேட்டது அம்மா, " ஏன்டா ! பாய் பசங்க கிட்ட பேசுற. அவங்க அசைவம் சாப்பிடுறவங்க..." என்றார்.

அவர்கள் அசைவம் சாப்பிடுவதும், நான் அவர்களிடம் பேசுவதும் என்ன சம்மந்தம் என்று புரியவில்லை. நான் பேசுவதற்குள் மாமா, " மனுஷங்க தான் முக்கியம். நம்ப கடைக்கு பாய்ங்க சாப்பிட வந்தா விரட்டியா அடிக்கிறோம்." என்று எனக்கு சாதகமாக பேசினார்.

என் கையில் சாவியை கொடுத்து, "மருமகனே ! இனிமே நீ காலேஜ்க்கு சைக்கிள்ல தான் போறே..." என்று கொடுத்தார். மாமா புது சைக்கிள் வீட்டுக்கு எடுத்து வந்ததை அப்போது தான் பார்த்தேன். புது சைக்கிளை பார்த்த கொஞ்ச நேரத்தில் மாணிக்கம் மாமா என் மாமாவின் சைக்கிலை எடுத்து வந்தார்.

அவர் வாங்கி தந்த புது சைக்கிளில் எங்கள் தெருவை சுற்றி வந்தேன். என்னுடன் பயணம் செய்ய புது நண்பன் கிடைத்த சந்தோஷத்தில் புது சைக்கிளுக்கு முத்தம் கொடுத்தேன்.

சந்தோஷமாக சைக்கிள் வாங்கிக் கொடுத்த மாமா... என் வாழ்க்கையை திசை திருப்ப போகும் முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

Wednesday, February 15, 2012

அந்த மூன்று பெண்கள் - 4

அறிமுக அத்தியாயம், அத்தியாயம் 1, அத்தியாயம் 2, அத்தியாயம் 3

எங்கள் கடைக்கு வந்தவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டு இருந்தேன். மாமா உடல் சரியில்லாமல் இருக்கும் போது கடையை நான் பார்த்துக் கொண்ட அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.நான் இந்த வேலை செய்வதில் என் மாமாவுக்கு இஷ்டமில்லை தான். ஆனால், சொந்தக்காலில் நிற்கிறோம் என்ற சந்தோஷம் மனம் முழுக்க இருந்தது. பள்ளி படிப்பை முடித்து விட்டேன். இனி படிப்பு என்ற பேச்சுக்கே என் வாழ்க்கையில் இடம் இருக்காது. எங்கள் குடும்ப பொருளாதாரமும் அப்படி தான் இருந்தது. அம்மா கண்டிப்பாக மாமாவுக்கு உதவியாக இருக்க தான் சொல்லுவார் என்று எனக்கு நன்றாக தெரியும். அதனால் தான், அம்மா சொல்லும் முன்பே நானே இந்த வேலையை செய்ய தொடங்கினேன். ஆனால், மாமா தான் என்னை திட்டிக் கொண்டே இருப்பார்.

" படிக்கிற பையன்.. எதுக்குடா இந்த மாதிரி வேலை எல்லாம் பார்க்குற..." என்று கேட்டார்.

" இந்த வேலைக்கு என்ன குறைச்சல். இந்த வேலைய தான் நம்பி தான் நாம் தினமும் சாப்பிடுறோம். இத எப்படி என்னால செய்யாம இருக்க முடியும்..." பதில் அளித்தேன்.

மாமா எதுவும் பேசவில்லை. எதோ தனக்குள் எதோ பேசிக் கொண்டு இருக்கிறார் என்று மட்டும் புரிந்தது. பள்ளி படிப்பு முடித்த பிறகும் என்னை இன்னும் "படிக்கிற பையன்" என்று தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இதற்கு மேல் படிக்க என்ன இருக்கிறது. அப்படியே இருந்தாலும் படித்து விட்டு என்ன செய்ய போகிறேன். கடையில் இருந்தாலாவது நாலு காசு கையில் கிடைக்கும்.

என் பள்ளி வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளுமளவில் நண்பர்கள் என்று யாருமில்லை. பள்ளியை விட்டது வீடு, உணவகம் என்று தான் இருந்தேன். உண்மையை சொல்லுவதென்றால்... மாமா செலவு செய்தார் என்பதற்காக தான் பள்ளியில் ஒழுங்காக படித்தேன். மாமா, அம்மா எல்லோருக்கு உதவியாக இருக்க வேண்டும். இனி, படிப்புக்கு ஒரு முழுக்கு போட வேண்டும். ஆனால், மாமா மனதில் வேறு ஒரு சிந்தனை ஓடிக்கொண்டு இருப்பதை மாணிக்கம் மாமா சொன்ன பிறகு தான் தெரிந்தது.

" ராமா இருக்கானாம்மா...." என்று அம்மாவிடம் கேட்டப்படி மாணிக்கம் மாமா உள்ளே வந்தார்.

" உக்காருங்க அண்ணே... உள்ளே தான் இருக்காரு... " என்று சொல்லி விட்டு மாமாவை அழைக்க அம்மா உள்ளே சென்றார்.

நான் கல்லா பெட்டியும், சப்பளையும் சேர்த்து பார்த்துக் கொண்டேன். பல்கலைக்கழக மாணவர்கள் அதிகம் சாப்பிட வருவதால் எங்கள் உணவகத்திற்கு நல்ல லாபம் கிடைக்க தொடங்கியது. அதனால், சப்ளைக்கு என்று ஒருவனை வேலைக்கு வைத்திருந்தோம். மதியம் முடிந்து விட்டதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. சப்ளையை புது பையனிடம் ஒப்படைத்து விட்டு நான் கல்லா பெட்டியில் உட்கார்ந்து மாணிக்கம் மாமாவிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.

நான் அவரிடம் பேசி இரண்டாவது நிமிடத்தில் மாமா உள்ளே இருந்து வெளியே வந்தார். என்னை ஒரு முறைத்து பார்த்து விட்டு " என்ன மாணிக்கம் போலாம்மா....?" என்றார்.

" எல்லா பேசியாச்சு... சீக்கிரம் வேலை முடிச்சிடும்..." என்றப்படி இருவரும் வெளியே சென்றனர்.

வழக்கம் போல் மாணிக்கம் மாமா பேசுவது 'எனக்கு தலையும் புரியாமல், வாலும் புரியாமல் இருந்தது'. பெரியவர் பேசுவதை என்ன கேட்கும் பழக்கம் எனக்கில்லை. அதே சமயம் தெரிந்துக் கொள்ளாமல் இருந்தது தலையே வெடித்து விடும் போல் இருந்தது. ஒரு வேலை மாமா புது வியாபாரம் தொடங்க போறாரா..? நிச்சயமாக இருக்காது. அவர் அதிகம் பேராசை பிடிப்பவர் அல்ல. உணவகம் மூலம் கிடைக்கும் வருமானமே அவருக்கு போதுமானதாக இருந்தது.

மாமாவும், மாணிக்க மாமாவும் சேர்ந்து வேளியே சென்று விட்டனர். அவர்கள் என் முன் பேசியதால் என்னால் என்னவென்று தெரிந்துக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. மாணிக்கம் மாமா புதிர் போல் எதையும் பேசமாட்டார். நான் இருப்பதை உணர்ந்து ரொம்ப ஜாக்கிரதையாக பேசினார். உள்ளே சென்று அம்மாவிடம் கேட்டேன்.

" அம்மா...! மாமா என்ன விஷயமா வெளியே போய்யிருக்காரு..." என்று கேட்டேன்.

" இது வரைக்கும் எத்தன வாட்டி வெளியே போய்யிருக்காரு. இப்போ என்ன புதுசா கேக்குற..." என்று நான் கேட்ட கேள்விக்கு மறு கேள்வி கேட்டார்.

" மாணிக்கம் மாமா..! ரொம்ப முக்கியமான விஷயம் மாதிரி தெரிஞ்சது. அதான் கேட்டேன்." என்றேன். மாணிக்கம் மாமா என்றைக்கு தான் புதிரில்லாமல் பேசியிருக்கிறார் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

" வேலை முடிஞ்சதும். மாமாவே சொல்லுவாரு..." என்று அம்மா சொல்லிவிட்டு வேலையை கவனித்தார்.

"இது எனக்கு தெரியாதா.." மனதில் சொல்லிக் கொண்டு கல்லா பெட்டியில் உட்கார்ந்தேன். எதை முடித்து விட ராமா மாமாமும், மாணிக்க மாமாமும் சென்றார் என்று எனக்குள்ளே கேள்விக்கு பதில் தெரியவில்லை. மாமா வரும் நேரம். அவரிடமே கேட்டு விடலாம். எதற்காக நம் மூலையை சிரம்ப படுத்த வேண்டும்.

மாலை நேருங்கும் நேரத்தில் மாமா உணவகத்திற்கு வந்தார்.

" மருமகனே...! சந்தோஷமான விஷயம்...." என்று சிரித்தப்படி என்னை வாரிக்கட்டி பிடித்துக் கொண்டார்.

" என்ன மாமா. உங்க கல்யாணத்துக்கு பொண்ணு கிடைச்சிடுச்சா..." என்று கிண்டலாக கேட்டேன்.

" ஒத வாங்குவ. இந்த வயசுக்கு மேல எனக்கு கல்யாணமா...??" என்று நான் கிண்டல் செய்ததை உண்மையாக நினைத்து கோபப்பட்டார்.

" உங்களுக்கு என்ன மாமா குறைச்சல்..." என்று அவர் தலையில் பணிக்கடியை வைக்காதா குறை. நான் வைத்த பணிக்கட்டியை விட ஒரு பாராங்கல்லை என் தலையில் வைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை.

" இண்ணும் ஒரு மாசத்துல நீ காலேஜ் போணும். உன் பி.ஏ சீட் விஷயமா பார்த்து பேசிட்டு தான் வரேன்." என்றார்.

என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவர் பாட்டுக்கு முடிவு எடுத்து விட்டு அதற்கு நான் கட்டு படுவேன் என்ற முடிவை அவரே எடுத்து விட்டார். எவ்வளவு செலவு ஆனாலும் என்னை படிக்க வைப்பதில் ரொம்ப குறியாக இருந்தார்.

" என்ன மாமா... என்ன கேட்காம எதுக்கு முடிவு எடுத்தீங்க. எனக்கு படிக்க இஷ்டமில்ல...." என்றேன்.

மாமாவை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. அவருக்கு உதவியாக உணவகத்தை கவனிக்க வேண்டும் என்று நினைத்தேன். படிப்புக்காக நான் கல்லூரி சென்றால், என் படிப்பு முடியும் வரை அவர் மேலும் உழைக்க வேண்டியது இருக்கும்.

" அடிவாங்குவ. படிப்பு தான் ரொம்ப முக்கியம். நம்ப அண்ணாதுரைய பாரு. நல்ல படிச்சதுனால பெரிய ஆளா இருக்காரு. நீயும் படிச்சா அவர மாதிரி ஆகலாம்." என்றார்.

மாமாவுக்கு அரசியல் பிடிக்கவில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் அண்ணாதுரை அவர்களை ரொம்ப பிடிக்கும். அதுவும் படிப்பு என்று சொல்லிவிட்டால் போதும். அவரோடு ஒப்பிடாமல் இருக்க மாட்டார். அவர் படித்தார் என்பதற்காக என்னையும் படி என்கிறார். என் முடிவில் இருந்து நான் மாறுவதாக இல்லை.

" நான் மேல படிக்க போறதில்ல. என் முடிவுல நான் தீர்மாணமா இருக்கேன். என் வாழ்க்கையில் நான் தான் முடிவு எடுப்பேன். மத்தவங்க யாரும் முடிவு எடுக்க கூடாது" என்று கோபத்தில் கத்தினேன்.

ஒரு கனத்தில் மாமா சிலையாக நின்றார். மாமா எதுவும் பேசமுடியாமல் வாய்யடைத்து போனார். அம்மாவுக்கு கோபம் வந்து என்னை ஓங்கி 'பலீர்' என்று அரைந்தார். அம்மாவின் கோபத்தை பார்த்த போது தான் எவ்வளவு பெரிய தவறான வார்த்தையை பேசிவிட்டேன் என்று உணர்ந்தேன்.

அப்பாவுக்கு அப்பாவாக இருந்த வளர்த்தவரை பார்த்து " என் வாழ்க்கையில் மத்தவங்க யாரும் முடிவு எடுக்க கூடாது" எப்படி சொன்னேன் என்று என்னக்கே தெரியவில்லை. கோபத்தில் வார்த்தை அளவு மட்டுமல்ல வார்த்தைகளின் சக்தியும் தெரிவதில்லை. நான் தப்பாக பேசியிருக்கிறேன் என்று எனக்கு நன்றாக புரிந்தது.

மாமா கண்கள் கலங்கிப்படி மௌனமாக சமையல் அறைக்கு சென்றார். மாலை முடிந்து இரவு நெங்ருகுவதால் உணவகத்தில் கூட்டம் வர தொடங்கினர். நான் அவர்களை கவனிக்காமல் மாமாவிடம் மன்னிப்பு கேட்க சென்றேன்.

" மாமா... என்னை மன்னிச்சிடு மாமா. தெரியாம பேசிட்டேன்..." என்றேன்.

" நீங்க சரியாதான் பேசுனீங்க. உங்க வாழ்க்கையில எனக்கு என்ன உரிமை இருக்கு. முடிவு எடுக்க. நீங்க என்ன நான் பெத்த பிள்ளையா....?" என்று கண்கள் கழங்கிய படி பேசினார்.

சமையல் அறை எண்ணெயின் நடுவில் மாமாவில் வார்த்தை சேர்ந்து என்னை சுட்டது. நான் பேசிய வார்த்தை எவ்வளவு காயம்ப்படுத்தியிருந்தால் இப்படி ஒரு வார்த்தை அவர் பேசுவார். எனக்கு நல்ல நண்பர் என்று சொன்னால் அது 'என் மாமா' தான். உறவு என்று சொன்னால் அதுவும் அவர் தான். அவரை காயப்படுத்தியது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை.

" மாமா... வா... கூட்டம் அதிகமாயிடுச்சு... போவோம்..." என்று அவரை அழைத்தேன்.

" நீங்க போங்க... பெரிய மனுஷன் அயிட்டிங்க... போய் கவனிச்சிக்கோங்க... நான் இப்படியே ஒதுங்கி உக்காந்துக்கிறேன்.." என்றார்.

மாமாவுக்கு முதல் முறை 'ங்க' வார்த்தை என்று சொல்லும் போதே என் மீது கோபமாக இருப்பதை உணர முடிந்தது. மீண்டும், இரண்டாவது தடவையாக 'ங்க' என்று சொல்லும் போது எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. நான் தவறு செய்து விட்டேன் என்பதற்காக அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனார். எனக்கும் கோபம் வரும்.

" உன் பையன் பேசியிருந்தா நீ இப்படி பேசியிருப்பியா..." என்று மாமாவை பார்த்து கேட்டேன். மாமா ஒரு மாதிரியாக என்னை பார்த்தார்.

" எதோ சின்ன பையன் தெரியாம பேசிட்டேன். மன்னிக்காம... அவன கஷ்டப்படுத்துற மாதிரி பேசுறியே...." என்று நான் பேசிக் கொண்டு இருக்கும் போதே என் கண்கள் கலங்கின.

நான் அழுதால் மாமாவால் தாங்கிக் கொள்ள முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும். நான் கலங்குவதை பார்த்து, " சரி..சரி...விடு ! எதோ ரெண்டு பேரும் தெரியாமா பேசிட்டோம்." என்று என்னை சமாதானப்படுத்தினார்.

அம்மா சமையல் அறைக்கு வந்து கூட்டம் அதிகமாகி விட்டதாக் கூறினார். என்னிடம் பேசாமல் முறைத்தவாரு அம்மா நின்றார்.

" இந்திரா... வந்தவங்கள கவனி. நா மருமக கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்" என்று அம்மாவை வந்த வாடிக்கையாளர்களை கவனிக்க சொன்னார்.

அம்மா சென்றவுடன், "மருமகனே ! படிப்பு தான் உன்ன காப்பாத்தும். வியாபாரம் எல்லாம் எப்போ என்ன ஆகுமோ யாருக்கு தெரியும். எனக்காக படிடா...!" என்று மீண்டும் பழைய இடத்துக்கே வந்தார்.
இந்த முறை என்னால் அவரை எதிர்த்து பேச முடியவில்லை. அவருக்காக எதையும் செய்ய நான் தயாராக இருக்கும் போது, படிப்பது பெரிய கஷ்டமாக எனக்கு தெரியவில்லை.

" சரி மாமா ! உனக்காக நான் படிக்கிறேன்." என்றேன்.

மாமா முகத்தில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. என்னை தூக்கி கொண்டு உணவகத்தின் சமையல் அறையை சுற்றினார்.

" மருமகனே...பி.ஏ என்ன படிக்க போற....?" என்றார்.

மாமாவுக்கு அண்ணாதுரை மிகவும் பிடிக்கும் என்ற காரணத்தால் யோசிக்காமல் பதிலளித்தேன், " தமிழ்" என்று !.

Tuesday, February 14, 2012

கலாம் கண்ட கனவு - நூல் விமர்சனம்




தொகுப்பாசிரியர் : குகன்
ரூ.35, பக்கங்கள் : 64


அப்துல் கலாம் அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 45 கவிஞர்கள் இந்நூலில் கவிதை எழுதியுள்ளனர். ஒவ்வொரு கவிஞரின் முகவரியையும் கவிதையோடு தந்திருக்கும் முயற்சி பாராட்டுக்குறியது. அத்துடன் அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய சில குறிப்புகளையும் அவரது சிந்தனைகளையும் தந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



( நன்றி : நம் உரத்தசிந்தனை (பிப்,2012) இதழ் [பக்.79] )

நூல் வாங்க...

Friday, February 10, 2012

அந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 3

அறிமுக அத்தியாயம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2


பௌர்ணமி முழு நிலவு வானதில் பிரகாசமாக ஒலித்துக் கொண்டு இருந்தது.

இரவு எஸ்.எஸ்.எல்.சி பாடம் படித்து முடித்து விட்டு நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். உணவகத்தில் வேலை முடித்து விட்டு அம்மா நடந்தே வீட்டுக்கு வந்து விட்டார். தனக்கு உணவகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதால் முடித்து பிறகு தன் நண்பன் மாணிக்கத்தை பார்த்து விட்டு வருவதாக மாமா சொன்னார். நடு ஜாமத்தை நெருங்கியும் மாமா வீட்டுக்கு வரவில்லை.

அம்மா பயந்து போய் என்னை எழுப்பினார்.

"டேய் சந்திரு...! மாமா இவ்வளவு நேரம்மாகியும் வீட்டுக்கு வரல. போய் என்னனு பாருடா...." என்று பயம் கலந்த குரலில் சொன்னார்.

அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. வேறு மாதிரி இடத்துக்கு சென்று இருப்பார் என்று நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அதே சமயம் இவ்வளவு நேரம் வீட்டு வராமல் இருந்ததுமில்லை. ஒரு வேலை நான் வளர்ந்து விட்டேன் என்ற தைரியத்தில் வீட்டுக்கு காலதாமதமாக வருகிறாரோ என்று நினைக்க தோன்றியது.

"என்னடா....யோசிக்கிற...! போய் பாருடா..." என்று அதட்டி அம்மா கூறினாள்.

தூக்கக்கலக்கத்தில் சட்டையை மாட்டிக் கொண்டு இருந்தேன். சைக்கிளை நான் எடுத்து வந்து விட்டதால் நடந்து வருவதற்கு இவ்வளவு நேரம் ஆகியிருக்குமோ என்று யோசித்தேன். நடந்தே வந்திருந்தாலும் நடு ஜாமத்துக்கு முன் வந்திருக்கலாம். எனக்கு எதோ நடந்திருக்கும் என்று தோன்றியது.

திடீர் என்று கதவு "பட...பட...." தட்டும் சத்தம் கேட்டது. மாமா இவ்வளவு வேகமாக கதவு தட்டமாட்டார். அம்மாவுக்கு மேலும் பயம் அதிகமானது. பேய்யைப் பார்த்தது போல் அரண்டு போய் இருந்தார்.

" டேய் சந்திரு... கதவ திறக்காத... திருடனா இருக்க போறான்..." என்ற நடுங்கிய குரலில் அம்மா கூறினாள்.

" எம்மா நீ ஒண்ணு...! திருடன் கதவ தட்டி திருட வருவானா... சும்மா இரு...!!" என்று பேசியப்படி கதவை திறந்தேன். மாமாவின் நண்பர் மாணிக்கம் நின்றுக் கொண்டு இருந்தார். முகம் முழுக்க வேர்வை வழிய நின்று இருந்தார். மாணிக்கம் மாமாவும், ராமா மாமாவும் ரொம்ப நெருக்கமானவர்கள். மாமாவுக்கு உணவகம் வைப்பதற்கு அவர் தான் உதவி செய்தார்.

அவரை நான் மாணிக்கம் மாமா என்று அழைத்தாலும் 'புதிர் மாமா' என்று தான் என் மனதில் அழைப்பேன். எதையும் தெளிவாக சொல்ல மாட்டார். அவர் பேசினால் அதில் இருந்து கேள்வி கேட்காமல் இருக்காமல் இருக்க முடியாது. அவர் வந்து சென்றால், பல புதிர் கேள்விகள் நம் மனதில் தோன்றும். எதற்காக இந்த நேரத்தில் வந்தார் என்று புரியாமல் அம்மாவை அழைத்தேன்.

" அம்மா..! மாணிக்கம் மாமா வந்திருக்காரு. உள்ள வாங்க.....! அவரு எங்க...? உங்கள பார்க்க தானே வந்தாரு...."

எதுவும் பேசாமல் மூச்சு வாங்கி கொண்டு இருந்தார். அம்மா மெதுவாக நடந்து என் பக்கத்தில் வந்து நின்றார்.

" என்ன அண்ணே....! என்ன ஆச்சு....?" என்றார் அம்மா.

" உங்க அண்ணன... போலீஸ் புடிச்சிட்டு போச்சு....!" என்றார்.

எங்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. மாமா எந்த வம்பு தும்புக்கு போகாதவர். கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் யாராவது அதட்டி பேசினாலும், மிகவும் அமைதியாக பேச கூடியவர். சண்டை நடக்கும் இடத்தை பார்த்தால் ஒதுங்கி செல்பவர். அவரை எதற்காக கைது செய்ய வேண்டும். நான் நினைத்தது போல் அந்த மாதிரி இடத்துக்கு போய் இருப்பாறோ என்று தோன்றியது. நான் நினைத்து முடிப்பதற்குள் மாணிக்கம் மாமாவே பதில் கூறினார்.

" மொழி போராட்டத்துல ஈடுப்பட்டதா சொல்லி புடிச்சிருக்காங்க...." என்றார்.

எங்களால் நம்பவே முடியவில்லை. நாளிதழில் அரசியல் படிப்பாரே தவிர அரசியலில் ஈடுப்படுபவரில்லை. அரசியலை பற்றி பேசுவாரே தவிர, போராட்டங்களில் கலந்துக் கொள்பவரில்லை. அரசியலில் ஈடுப்படும் நண்பர்களும் இல்லை.

அம்மாவும், நானும் அவசர அவசர நடு ஜாமத்தில் காவல் நிலையத்திற்கு சென்றோம். அப்பா இறந்த போது அவர் உடலை ஒப்படைக்கும் போது ஒரு காவல் அதிகாரி அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் காவல் அதிகாரியை அம்மா சந்திக்கிறார். மாணிக்கம் மாமாவும் எங்களும் துணைக்கு வந்திருந்தார்.

காவல் நிலையத்தில் மொழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்திருந்தார்கள். அம்மா அருவருப்பாக கண்ணை முடியப்படி நடந்தார்.

மாணிக்கம் மாமா அங்கு இருந்த போலீஸ் அதிகாரியிடம்...."ஸார்...." என்றார்.

முறைத்தவாரு மாணிக்கத்தை பார்த்தார். மொழி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை அடித்த வெறியில் இருந்தார். எங்களுடன் அம்மா வந்திருப்பதை கவனித்த அந்த அதிகாரி " கொஞ்சம் இருங்க... " என்றார்.

தன் சகாக்களிடம் கைது செய்யப்பட்டவர்களை செல்லில் அடைக்க சொன்னார். அவரிடம் அடிப்படு, செல்லுக்கு அழைத்து சென்றவர்களில் ராமா மாமா இல்லை. நான் அவர்கள் அழைத்து சென்ற போராளிகளையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

அந்த அதிகாரி பார்ப்பதற்கு கறுப்பாக இருந்தார். மொழி போராட்டக்காரர்களை அடித்த வெறியில் இருந்து மீளவில்லை என்று அவர் கண்ணில் தெரிந்தது. மூக்கால் காக்கி பேன்ட் போட்டு கொண்டு கோபமான விழிகளுடன் எங்களிடம் பேச வந்தார்.

" என்ன விஷயம் சொல்லுங்க...." என்று கட்டை குரலில் அதிகாரி பேசினார்.

" எங்க அண்ணன... மொழி போராட்டத்துல கைது செஞ்சதா சொன்னாங்க. அவர கூப்பிட்டு போலாம்னு..." என்று அம்மா சொல்லி முடிப்பதற்குள் அந்த அதிகாரி " இது என்ன உங்க சொந்தக்கார வீடு நினைச்சியா.." என்று அதட்டியப்படி பேசினார்.

" எங்க அண்ணன அந்த மாதிரி போராட்டத்துக்கு போர ஆளு இல்லைங்க.... நீங்க வேணும் அவர கூப்பிட்டு விசாரிங்க..." என்றார்.

ஒரு பெண் தான் என்ன செய்ய வேண்டும் சொல்வதை நினைத்து அவருக்கு கோபம் அதிகரித்தது. ஆனால், அம்மாவின் விதவை கோலம், அரும்பு மீசை நின்ற என்னையும் ஒரு முறை உற்று பார்த்தார். எங்கள் வீட்டு பெரியவர் என் மாமாவாக தான் இருக்க வேண்டும் என்று சொல்லாமலே புரிந்துக் கொண்டார்.

" பேரு என்ன....?" என்று கேட்டார்.

"ரகுராமன்.....!" என்றாள்.

ஒரு காவல் அதிகாரியிடம் சொல்லி எங்க மாமாவை அழைத்து வர சொன்னார். தலையில் இரத்த காயமும், காலில் அடிப்பட்டு நடக்க முடியாமல் நொண்டி நொண்டி நடந்து வந்தார்.

" யோவ்..! வீட்டுல நீ ஒருத்தன் தான் ஆம்பலையா... எதுக்கு இந்த மாதிரி போராட்டத்துல கலந்துக்கர....?" என்று அந்த அதிகாரி கேட்டார்.

" நான் போராட்டத்துல கலந்துக்கலைங்க. அவங்க பத்து பேருக்கு சாப்பாடு சொல்லியிருந்தாங்க. அத கொடுக்க போகும் போது நானும் போராட்ட ஆளு நினைச்சு கைது பண்ணிட்டாங்க...."

" என்னது போராட்டத்துல கலந்துக்கலையா..." என்று வியந்தார்.

தன் அதிகாரிகளை அழைத்து பேசினார். மாமாவை கைது செய்யும் போது அவர் கையில் சாப்பாடு இருந்தை கூறினர். அவ்வளவு பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பொது மக்கள், போராட்டக்காரர்கள் என்று தனியாக எப்படி பார்ப்பது. எங்கோ தவறு நடந்துவிட்டது.

"எங்க கடை வச்சிருக்க " என்று கம்பீர குரலில் அந்த போலீஸ் அதிகாரி கேட்டார். தவறு செய்து விட்டோம் என்ற எந்த குற்றவுணர்வும் அந்த குரலில் தெரியவில்லை.

" நா பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல தான் கட வச்சிருக்கேன் " என்று பேசமுடியாமல் மாமா பேசினார்.

" சரி...! எங்கோ தப்பு நடந்திருக்கு. இதுல கையெழுத்து போட்டுட்டு போ " என்றார். இது போல் நடக்கும் போராட்ட இடங்களில் பார்த்தால் மீண்டும் கைது செய்வதாக மாமாவை அவர் எச்சரித்தார்.

அவர்கள் அடித்த அடியால் மாமாவால் நடக்கமுடியவில்லை. இந்த காயங்கள் சரியாகி மாமா இயல்பாக மாறுவதற்கு மூன்று மாதங்கள் மேல் ஆகும். மாமாவை மாணிக்கம் மாமா சைக்கிலில் வைத்து மிதித்து வந்தார். நான் அம்மாவை அழைத்து சைக்கிலில் வந்தேன்.

வீட்டுக்கு வந்தவுடன் அம்மா மாமாவுக்கு வெண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுத்தார். மாமா வலியில் கத்தினார். அவரால் வலியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாணிக்கம் மாமா காலையில் வந்து பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மூன்று மாதம் கடைக்கு விடுமுறை விட்டால் வாடிக்கையாளர்கள் எல்லாம் வேறு இடம் பார்க்க சென்று விடுவார்கள் என்ற பயம் மாமாவுக்கு இருந்தது. அம்மாவால் தனியாக அந்த உணவகத்தை கவனிக்க முடியாது. நான் தான் அம்மாவுக்கு துணையாக இருக்க வேண்டும். பள்ளி, உணவகம் என்று இரண்டும் மாற்றி மாற்றி கவனிக்க வேண்டும் வேறு யாருமில்லை.

" கவலப்படாத மாமா... நான் அம்மாவுக்கு துணையா எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்..." என்றேன்.

" டேய் மருமகனே..! எப்படி என் மனசுல நினைச்சத அப்படியே சொல்லுற...." வாயை மெதுவாக திறந்தப்படி பேசினார்.

" உங்கள பத்தி எனக்கு தெரியாதா. கொஞ்சம் நாள் தானே. நானும், அம்மாவும் பார்த்துக்குறோம். நீங்க நல்ல ஓய்வு எடுத்துக்கொங்க. " என்று சொல்லி மீண்டும் எதோ பேச வாயெடுத்தேன்.

மாமா என்னை பார்த்தப்படி படுத்திருந்தார்.

"ஒரு விஷயம். போலீஸ் உங்கள் புடிச்சதும் சொன்னவுடனே உங்க மேல எனக்கு ஒரு சந்தேகம் இருந்திச்சு....." என்றேன்.

"என்ன...??". புரியாமல் என்னை பார்த்தார்.

" நீங்க அந்த மாதிரி இடத்து போய் தான் உங்கள போலீஸ் புடிச்சிடுச்சோ நினைச்சேன். நல்ல வேலை அப்படி எதுவுமில்ல..."

"அடி... சின்ன பையன் மாதிரியா பேசுற...." என்று அந்த வலியிலும் சிரித்தப்படி என்னை செல்லமாக அடிக்க வந்தார்.

" எனக்கும் பதினஞ்சு வயசு ஆகுது. சின்ன பையன் இல்ல மாமா..." என்று சொல்லிவிட்டு தூங்க சென்றேன்.

காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது. சிறுவயதில் என்னை வைத்து சைக்கிலில் சென்றவர், இன்று இன்று அவருடன் சரிக்கு சமமாக பேசுகிறேன். நான் சின்ன பையன் இல்லை. எனக்கும் நல்லது, கெட்டது தெரிய ஆரம்பித்திருக்கிறது என்று மாமா புரிந்துக் கொண்டார். என் மேல் இருந்த நம்பிக்கையில் நிம்மதியாக கண் மூடி தூங்கினார்.

இவ்வளவு பாசமான இருக்கும் மனிதரிடம் நான் சண்டை போடும் சந்தர்ப்பம் வர போகிறது என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை.

Thursday, February 9, 2012

சுட்டும் விழி : கவிஞர் இரா.ரவி

கவிதை விரும்பாத வாசகன் கூட தன்னையும் அறியாமல் வாசிக்கும் கவிதை ஹைக்கூ கவிதையாக தான் இருக்கும். ஐந்து நோடிக்கு மேல் எடுத்துக் கொள்ளாத வாசிப்பு. ஒரு பக்க கட்டுரை ஏற்ப்படுத்தும் பாதிப்பு, நருக்கென்று கருத்து என்ற போன்ற பெருமை ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு. இன்று, ட்விட்டரில் பலர் 140 எழுத்துக்களில் தங்கள் கருத்தை சொல்ல முயற்சிக்கிறார்கள். ஆனால், நூற்றாண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் திருக்குறளிள் இரண்டடியில் சொல்லியிருக்கிறார். ஜப்பானில் மூன்றடியில் கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள்.



ஜப்பானில் தோன்றிய 'ஹைக்கூ' தமிழ் கவிதை சூழலில் பலர் முயற்சித்து வருகிறார்கள். தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் என்று பட்டியலிட்டால் அதில் கவிஞர் இரா.ரவி அவர்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும். அவர் எழுதிய எல்லா புத்தகங்களும் ஹைக்கூ கவிதையாக இருக்கும். அல்லது ஹைக்கூ பற்றிய கட்டுரை, விமர்சன நூலாக இருக்கும். ஹைக்கூ கவிதையில் தன் முழு கவனத்தை செலுத்தி வருபவர். அவர் எழுதிய 11வது நூல் தான் “சுட்டும் விழி”.

போதுவாக, நான் நூல் விமர்சனம் செலுத்தினால் அந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த வரிகளை குறிப்பிடுவேன். ஆனால், இந்த நூலில் எனக்கு பிடித்த கவிதையை குறிப்பிட சொன்னால் 64 பக்கங்கள் கொண்ட கவிதையில் 40 பக்கங்களுக்கான கவிதையை குறிப்பிட வேண்டியதாக இருக்கும். அந்த அளவுக்கு பல கவிதைகளில் நருக்கென்ற கருத்தோடு முடித்திருக்கிறார்.


உழைப்பாளியின் ரத்தம்
உறிஞ்சிக் குடிக்கும்
டாஸ்மார்க்
*
பன்னாட்டு நிறுவனங்களால்
கொள்ளை போனது
பச்சை வயல்
*
வேகமாக விற்கின்றது
நோய்பரப்பும் குளிர்பானம்
வருத்தத்தில் இளநீர்.
*
இயற்கையை அழித்து
செயற்கை மரங்கள்
நகரங்கள்


மேல் குறிப்பிட்ட கவிதைகளில், மூன்றாவது வரியில் இதயத்தை துழைக்கும் அம்பை ஒழித்து வைத்திருக்கிறதா அல்லது நம்மை குத்தும் குற்றவுணர்வா என்ற யோசிக்க வைக்கும் வரிகள்.

சமக்கால அரசியலை கேலி செய்யும் நாவலோ, சிறுகதையோ வருவது மிகவும் குறைவு. ஆனால், சமக்கால அரசியலை பகடி செய்யும் கவிதைகள் ஏராளமாக வந்துக் கொண்டு இருக்கிறது. குறிப்பாக கீழ் காணும் கவிதைகளை படித்து பாருங்கள்.

எண்ணங்களால் அன்று
எண்ணிக்கையால் இன்று
கூட்டனி !
*
திரும்புகின்றது
கற்காலம்
மின்தடை
*
காவிரி போல்
அரசியலானது
சமச்சீர் கல்வி
*
உயராத கூலி
உயரும் விலைவாசி
வேதனையில் ஏழைகள்.
**

இந்த புத்தகத்திற்கு “சுட்டும் விழி” என்ற தலைப்பு மிக பொருத்தாமாத அமைந்திருக்கிறது. காரணம், ஒவ்வொரு கவிதையும் நாம் படித்த முடித்த பின் நம்மை சுடாமல் இருப்பதில்லை.

மருத்துவ குறிப்பு சொல்லும் கவிதை,
மூளைச்சாவு
பயன்பட்டது
உறுப்புதானம்


ஈழ தமிழர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கும் கவிதை,
அணையப்போகும் விளக்கு
சுடர்விட்டெரியும்
இலங்கைக் கொடூரன்.


வரலாற்றை பதிய வைக்கும் கவிதை,
மூடநம்பிக்கை
முற்றுப்புள்ளியாக்கியது
ஈரோட்டு மை.


ஒரு கவிதை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு கவிதை நம்மை தாக்க தயாராக உள்ளது.

ஹைக்கூ கவிதைகளுக்கு தலைப்பு தேவையில்லை என்ற மரபில் இந்த புத்தகமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று கவிதைகள் சமூகத்தைப் பற்றியதாக இருந்தால், அடுத்த கவிதை 'ஈழம்' பற்றியதாக உள்ளது. இல்லை என்றால் 'காதல்' பற்றியதாக உள்ளது. சமூகம், அரசியல், காதல் என்று வகைப்படுத்தி கவிதைகளை வரிசைப்படுத்தியிருக்கலாம்.


கவிதை வாசிப்பு ஆர்வம் இல்லாத வாசகர்கள் வாசிக்க வைக்கும் கவிதை நூலாக இருக்கிறது "சுட்டும் விழி".

பக்.64, விலை. ரூ.40
ஜெயசித்ரா
21, வன்னியக் கோனார் சந்து,
வடக்கு மாசி வீதி, மதுரை – 625 001
செல் : 98421 93103

Wednesday, February 8, 2012

அந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 2

அறிமுக அத்தியாயம்
அத்தியாயம் 1

அப்பாவை தூக்கியப்படி நான்கு பேர் நடக்க.... நான் மாமாவுடன் முன்னே சென்றுக் கொண்டு இருந்தேன். அப்பாவின் உடல் கட்டை, வரட்டி, கற்புறம் என்று ஒவ்வொன்றாக போட்டு மறைத்தனர். என் கையில் எரியும் கட்டையை கொடுத்து அப்பா உடல் மீது எறிக்க சொன்னார். நானும் அப்படியே செய்தேன். இனி சைக்கிள் முன் உட்கார வைத்து என்னை யார் ஓட்டி செல்ல போகிறார்....?? இரவில் எனக்கு யார் கதை சொல்ல போகிறார் என்ற கவலையுடன் சுடுக்காட்டில் இருந்து வீட்டுக்கு வந்தேன்.

அப்பா இறந்துமூன்று மாதங்கள் ஆகிவிட்டது...

நான் பிடிவாதம் பிடிப்பதை விட்டு விட்டேன். பிடிவாதம் பிடித்தாலும் எனக்கு வாங்கி தர அப்பா தான் இல்லையே !

" கவலப்படாதம்மா.... உனக்கு நான் இருக்கேன்..." என்று ஆறுதல் கூறியவர் அம்மாவின் அண்ணன் ரகுராமன். எல்லோரும் அவரை 'ராமா' என்று அழைப்பார்கள். நான் அவரை 'ராம மாமா' என்று அழைப்பேன்.

அம்மாவுக்கு அப்பா பிரிவை மறந்து என்னை பற்றின கவலை தான் அவர்களுக்கு அதிகமாக இருந்தது. அன்பும், பாசம் எத்தனை உண்ணதமானது என்று என் மாமா ராமாவை பார்த்த பிறகு தான் தெரிந்துக் கொண்டேன்.

அம்மாவுக்கு ஏழு வயது இருக்கும் போது என் பாட்டி இறந்துவிட்டார். அன்று முதல் அம்மா தான் அவர் அப்பாவுக்கும், மாமாவுக்கும் சமைத்து போடுவார். அம்மாவிடம் இருந்து மாமா சமையல் கற்றுக் கொண்டார். அம்மாவிடம் கற்றுக் கொண்ட சமையல் தான் மாமாவுக்கு உதவியது.

ஒரு முறை மாமாவின் சமையலை சுவைத்த வெள்ளைக்கார துரை மாமாவை தன் ஆஸ்தான சமையல்காரனாக வைத்துக் கொண்டார். மாமாவும் அவருடன் வேலைக்கு சேர்ந்தார். வெள்ளைக்கார துரை வெளியூர் செல்லும் போதெல்லாம் மாமாவும் அவருடன் செல்ல வேண்டியதாக இருந்தது. விடுமுறை கிடைக்கும் போது தான் வீட்டுக்கு வருவார். வெள்ளைக்கார துரை நல்ல சம்பளம் தந்ததால் அம்மாவுக்கு நல்லப்படியாக திருமணம் செய்து வைத்தார். அம்மாவிடம் கற்ற சமையல் தான் தனக்கு சோறு போடுகிறது என்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவார்.

அம்மாவின் நிலைமையை கேட்டவுடன் தன் வேலையை விட்டு தான் சிதம்பரத்திற்கு வந்தார் என்று எங்களுக்கு பிறகு தான் தெரிந்தது. அம்மாவிடம் கற்ற சமையல், அவள் மேல் வைத்திருக்கும் பாசம் என்று எங்களுக்காக திருமணமே வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தார். பட்டினத்தில் இருந்து எங்களுடன் சிதம்பரத்தில் தங்கிவிட்டார்.

மாமா வாடி போயிருந்த அம்மாவிடம், " இந்திரா.... இன்னும் எத்தன நாளைக்கு தான் இப்படியே இருப்ப...." என்றார்.

"இல்லண்ணா... என் பயமே... எப்படி இவன படிக்கவச்சி வளர்க்க போறேனு தான்...?"

" கவலப்படதாம்மா... நான் உன் கூடவே இருக்கேன்ல...."

" என்னக்காக எவ்வளவு நாள் நீ கஷ்ட படுவேண்ணே... என் கல்யாணத்துக்காக கடன் வாங்கி இப்ப வேலை செஞ்சு அடைச்ச. நீயும், கல்யாணம் காச்சி பார்க்குற நேரம் பார்த்து இப்படி அயிடுச்சு. எனக்காக கல்யாணம் வேண்டாம் சொன்னா என்னால தாங்க முடியலைண்ணே..."

"விடும்மா... என் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்....". அம்மாவிடம் மாமா கற்ற சமையல் பாசம், நன்றியுணர்ச்சியாக வெளிப்பட்டது.

" என்னண்ணே இப்படி.. சொல்லுற.. ? உனக்கு இப்பவே முப்பது வயசு மேல ஆகுது.... எப்ப நீ கல்யாணம் பண்ணி குழந்த குட்டி எல்லாம்...." என்று இந்திரா இழுத்து சொன்னாள்.

" இப்ப அது முக்கியமில்ல. நான் பட்டினத்துல வேலைய விட்டேன். இங்க வேலைக்கு ஏதாச்சு பண்ணனும்." என்று நிருத்தி விட்டு என்னையே பார்த்தார்.

"என்ன சொல்லவந்து பாதியில நிருத்திட்ட...."

"ம்ம்ம்... ஒண்ணுமில்ல. இந்த காலேஜ் பக்கம் சாப்பாடு கட வைக்கலாம் இருக்கேன். அது விஷயமா ஒருத்தர பார்த்திட்டு வரேன்."

" கேக்றேன் தப்ப நினைக்காத... சாப்பாடு கட வைக்கிற அளவுக்கு பணம் இருக்கா..?"

"பணத்துக்கு என்ன கஷ்டம். பட்டினத்துல எத்தன ச்நேகிதங்க இருக்காங்க தெரியுமா... கவல படதா. நான் இருக்கேன். மனச தைரியமா வச்சிக்கோ..." என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

ராமா மாமா அம்மாவுக்கு கடவுள் போல் தெரிந்தார். அவர் இல்லை என்றால் அம்மா நிச்சயமாக தற்கொலை தான் செய்துக் கொண்டு இருப்பாள். அப்பாவை தவிர இந்த உலகம் தெரியாதவர். 'கடவுள் மனித உருவத்தில் வரும்' என்று அம்மாவிடம் அப்பா அடிக்கடி சொல்லுவார். அதை 'மாமா' உருவில் இன்று தான் பார்த்தேன்.

உணவகம் வைப்பதற்காக ஒரு மாதம் மேல் அலைந்தனர். அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பொறியியல் வளாகத்தில் உணவகம் வைக்க அனுமதிக்கிடைக்கவில்லை. பெரிய பெரிய மனிதர்களிடம் சென்று அனுமதி, உத்தரவு வாங்க அங்கு இங்கும் சென்று பார்த்தார். கையில் இருந்த பணம் தான் கரைந்தது. பலனேதுமில்லை.

நீண்ட நாள் பொருத்திருந்தார். கடைசியில் அவர் நண்பர் மாணிக்கத்தின் ஆலோசனை படி சிதம்பரம் பஸ் நிலையத்தில் அருகே உணவகம் தொடங்கினார். வீட்டில் இருந்து உணவகம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. சைக்கிள் மீதித்து செல்லும் தொலைவில் இருந்ததால் நாங்கள் கீழ வீதியிலே தங்கிவிட்டோம்.

என்னையும், அம்மாவையும் வைத்துக் கொண்டு சைக்கிள் மிதித்து ஓட்டுவார். என்னை பள்ளியில் விட்டு விட்டு அம்மாவை அழைத்துக் கொண்டு உணவகத்திற்கு செல்வார். இதுவரை வீட்டிலேயே இருந்த அம்மா, உணவகத்தில் சமைப்பதும், எச்சில் இலை எடுப்பதும் என்று மாமாவுக்கு உதவியாக இருந்தார். மாமா பல தடவை சொல்லியும் அம்மா கேட்கவில்லை.

"யாரோ இந்த வேலை செய்யுறதுக்கு நீ சம்பளம் தரத்துக்கு நா இந்த வேலைய செய்யுறேன்...." என்று அம்மா இந்த வேலை எல்லாம் செய்தார். இந்த வேலை செய்வதிலும் அம்மாவுக்கு ஒரு சந்தோஷம். அப்பா பிரிந்த சோகத்தை இயல்பாக திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்பாவை எனக்கு ராமா மாமாவை மிகவும் பிடிக்க தொடங்கியது. அம்மாவிடம் கேட்பதை விட மாமாவிடம் கேட்டால் கேட்டதை வாங்கி தருவார். அவர் சந்தோஷத்தில் இருந்தாலும் சரி, என்னை கேலி செய்வதாக இருந்தாலும் சரி, என்னை வார்த்தைக்கு வார்த்தை "மருமகனே.... " என்று அழைப்பார். என் மீது கோபமோ வருத்தமோ இருந்தால் ' வாங்க... போங்க..." என்று மரியாதையாக பேசுவார். அவர் என்னை அழைப்பதை வைத்தே அவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்று கணித்து விடுவேன்.

அவரிடம் பிடித்தது உடலை பராமரிப்பது. குண்டும் இல்லாமல், மிகவும் ஒல்லியாக இல்லாமல் தன் உடலை சரியாக வைத்துக் கொள்வார்.

எனக்கு அவரிடம் பிடிக்காதது அதிகம் வெத்தலை போடுவார். ஆனால், மற்றவர்கள் போல் கண்ட இடத்தில் துப்ப மாட்டார். அதற்கு என்று தனி பாத்திரம் கடையிலும், வீட்டிலும் இருக்கும். காய்கறி கடையில் பொருட்கள் வாங்கும் போது வெத்தலை போடமாட்டார்.

அப்பா இறந்த ஏழு வருடங்களில் மாமாவின் உலகம் உணவகம், காய்கறி கடை, சமையல், வீடு என்றே இயங்கிக் கொண்டு இருந்தது.

நாளிதழில் எதோ கட்டுரை படித்துக் கொண்டு இருந்தார்.

"என்ன படிக்குற மாமா...?"

"வாடா மருமகனே...! பள்ளிகூடம் முடிஞ்சிருசா...."

" முடிஞ்சதுனால தானே வீட்டுக்கு வந்தேன். என்ன படிக்குறேனு கேட்டேன். அதுக்கு பதில் சொல்லவே இல்ல..."

" சரிடா...பெரிய மனுஷா. அண்ணாதுரை எழுதின கட்டுரை ஒண்ணு படிச்சிட்டு இருக்கேன்..."

" எங்க கொடு... பார்ப்போம்..." என்று சொல்லி அந்த நாளிதழை வாங்கி படித்தேன்.

" இவரு கடவுள கிண்டல் பண்ணி எழுதியிருக்காரு. தப்பில்ல..." என்று வியப்புடன் கேட்டேன்.

"இவரு கடவுள் இல்லனு சொல்லுறவரு. அது தான் இவங்க பொழப்பு...".

" கடவுள் இல்லனும் சொல்லுறது பொழப்பு சொல்லுறீங்க. பாவம் அவங்க...! கடவுள் அவங்களுக்கு உதவலைனு தானே இல்லனு சொல்லுறாங்க. கடவுள் அவங்களுக்கு உதவி பண்ணா நம்ப போறாங்க..."

"வர... வர.. நீயும் அண்ணாதுரை மாதிரி பேசுற..."

" சும்மா சும்மா அவர் பேர சொல்லு றீங்க.. அவரு யாரு...??"

மாமா "ஏன்டா பேசினோம்? " என்று இருந்தார். அவர் சொல்லும் ஒவ்வொரு பதிலும் எனக்கு கேள்வியாக தான் பிறந்தது. ஒரு வேலை அண்ணாதுரை இப்படி தானோ...? மற்றவர் பதிலிருந்து கேள்வி கேட்பாரோ...? மாமா அண்ணாதுரை மாதிரி என்று சொன்னவுடன் அவரை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று தோண்றியது.

" பதில் பேசாம இருக்கீங்க...." என்று நச்சரித்தேன்.

" எனக்கு தெரிஞ்ச சொல்லுறேன். முன்னாடி பெரியார் கிட்ட இருந்தாரு. இப்போ தனியா தி.மு.கனு ஒரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு.ஏதோ அப்பபோ பத்திரிக்கையில இந்த மாதிரி எழுதுறாரு..." என்று ரத்தின சுருக்கமாக ஒரு சகாப்தம் படைக்க போவரைப் பற்றி சொன்னார்.

" என்ன மாமா...? இது கதையா...?" என்று இன்னொரு கேள்வியை கேட்டேன். மாமா முன் தலை கொஞ்சம் வழுக்கையாக இருக்கும். நான் கேட்கும் கேள்விகளில் முழு வழுக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதிறக்கில்லை.

"இல்ல ! இது கட்டுரை. ஏன் கேக்குற....?" கேட்டார்.

" ஒண்ணுமில்ல... முன்னுரை, விளக்கம், முடிவரை தலைப்பு போடாம எழுதியிருக்காரு. கட்டுரை எப்படி எழுதனும் அவருக்கு தெரியாதா... எங்க பள்ளிக்கூடத்துல இப்படி தான் சொல்லிக் கொடுத்தாங்க... " என்றேன்.

"அம்மா இந்திரா...கொஞ்சம் இங்க வாம்மா. இவன் கிட்ட என்னால பேசமுடியல்ல..." என்று அம்மாவை அழைத்தார். அம்மாவுக்கு பயந்து நான் உள்ளே ஒடிப்போய் எஸ்.எஸ்.எல்.சி பாட புத்தகத்தை எடுத்துப்படிக்க தொடங்கினேன்.

அடுத்த நாள் அவருக்கு ஒரு பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை தெரியாமல் சிரித்தப்படி மீண்டும் நாளிதழ் படிக்க தொடங்கினார்.

(தொடரும்..)

Tuesday, February 7, 2012

இரண்டு வாசகர் கடிதங்கள் !

தேதி : 28.1.12

பேரன்பின் நல்வீர் !

வணக்கம். தமிழினியன் வெளியிட்ட பொங்கல் மலரில் யோசனை மட்டுமல்ல, அறிவுக் கூர்மையான எண்ணங்களை கூறியதை அறிந்து மகிழ்ந்தேன். ”புத்தகங்கள் கொண்டாடப்பட வேண்டியவை” என்ற தலைப்பில் எழுதியவைப் பாராட்டிற்குறியது. சீர்காழி வட்ட நூலகத்தின் வாசகர் வட்டத்தலைவர் என்ற முறையில் தாங்கள் கூறிய கருத்துகளையே யான் வலியுறுத்திப் பேசுவேன்.

தொலைக்காட்சி ஊடகங்களால் புத்தகங்களைப் படிப்போர் குறைந்து வருகின்றனர். நல்ல எழுத்தாளர் படைப்புகளை வரவேற்று வணங்கிப் படிக்க வேண்டும். “உற்றார், உறவினர்கள் கொடுக்காத நம்பிக்கை ஒரு சுயமுன்னேற்றத்திற்கும் நல்வழிக்கும் புத்தகமே அளிக்கும் என்பதும் கடவுள் தீர்த்து வைக்க முடியாதத் தீர்வுகளுக்குப் புத்தகங்கள் தீரு உண்டு என்பது உண்மையின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள் !!

நன்றி,

அன்புடன்,
ஜெ.சண்முகம்
தென்பாதி – 609111
சீர்காழி.

**

தேதி : 24.1.12

மதிப்பிற்குரிய கவிஞர் மற்றும் பதிப்பாளர் குகன் அவர்களுக்கு,

என் புத்தகம் ஒன்றினை அனுப்பி உங்களது கருத்துக்களை கேட்டு இருந்தேன். எவ்வித தயக்கமின்றி உண்மையான விமர்சனத்தை என் கவிதைக்கும், எனக்கும் தந்தீர்கள். அதற்காக ஓர் மிகப் பெரிய நன்றி ! நன்றி !!

அதன் பின்னர், கைப்பேசியில் உரையாடும் போது ஓர் எழுத்தாளன் எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டும். எவ்வாறு எழுத வேண்டும், எந்த புத்தகங்களை படிக்க வேண்டுமென கூறினீர்கள். அது மட்டுமின்றி, எனக்காக தனிப்பட்ட குறிப்புகளை தந்தீர்கள். ஒரு நல்ல கவிஞனாய், பதிப்பாளனாய் உங்களைப் போன்று ஒரு சிறந்த மனிதரை பார்ப்பது மிகவும் அரிது. எனினும், நீங்கள் கூறிய அறிவுரைகள், சில அனுபவங்கள் உங்களின் உண்மையான மனதை மிகவும் அழகாக வெளிகாட்டுகிறது.

இதுமட்டுமின்றி, எனது கவிதையில் ஒரு கவிதை மட்டும் பெண்ணை குறிப்பிடுவதாக கூறினீர்கள். அது என் தவறல்ல பதிப்பதித்தாரின் தவறு, ஒரேயொரு எழுத்து மட்டும் மாறிவிட்டது.

உங்களிடம் உங்களது பதிப்பக புத்தகம் இரண்டை கேட்டேன். கூடிய விரையில் M.O. அனுப்பி பெற்றுக் கொள்கிறேன்.

”நமது நட்பு எப்போதும் தொடரட்டும்
வாழையடி வாழையாய்”


தோழமையுடன்,
”தாய்” சுரேஷ்
கடத்தூர்.

****

எனக்கு வந்த இரண்டு வாசகர் கடிதங்களை இங்கு குறிப்பிட்டதற்கு இரண்டு காரணம் உள்ளது. கடைசி காரணம் சுய விளம்பரம். முதல் காரணம், மின்னஞ்சல், செல்பேசி வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகத்தில் இன்னும் கடிதம் எழுதும் கலாச்சாரம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது என்பது தான்.

அதுவும்”தாய்” சுரேஷ்யின் கடிதம் சொல்லியாக வேண்டும். என் விமர்சன பதிவுக்கு பிறகு தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டு நன்றி தெரிவித்தார். அதன் பிறகு மூன்று முறை போனில் பேசியிருப்போம்.

ஏற்கனவே நன்றி சொல்லிய பிறகு எதற்கு கடிதத்தில் இன்னொரு நன்றி என்று கேட்ட போது, " நான் உங்களிடம் பேசிய எல்லா வார்த்தைகளும் உங்களுக்கு நினைவில் இருக்க போவதில்லை. ஆனால்,பல வருடம் கழித்து கடிதத்தை நீங்கள் பாதுகாத்து படித்தாலும் நான் உங்களிடம் புதிதாக பேசியது போல் இருக்கும்" என்றார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் தான் வாசகர் கடிதம் எழுத தொடங்கி எழுத்தாளனாக மாறியதை ஒரு முறை குறிப்பிட்டு இருந்தார். எழுத்துபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படியாக இருந்த வாசகர் கடிதம் நாற்பது வயது தாண்டியவர்கள் மட்டுமே பயன்ப்படுத்தி வருகிறார்கள். வலைப்பதிவுகளில் மட்டுமே "எதிர்வினை", ”பின்னூட்டம்” என்ற பெயரில் இளைய வாசகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

எழுத்தாளனுக்கு பின்னூட்டம், எதிர்வினை மின்னஞ்சலை விட ”வாசகர் கடிதம்” வாசகனை நேரில் சந்துக்கும் பிம்பத்தை கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த இரண்டு வாசகர் கடிதம் படித்த பிறகு, எனக்கு வந்த வாசகர் மின்னஞ்சலையும் பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்தி வைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

Monday, February 6, 2012

அந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 1

அறிமுக அத்தியாயம்

நீங்கள் இதுவரை என்னை ஆகாஷின் தாத்தாவாக, சிவகாமியின் கணவனாக, ரகுவின் தந்தையாக தான் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள். மனைவி, மகன், பேரன் எல்லாம் வாழ்க்கையின் இரண்டாவது பாதியில் வருபவர்கள். ஆனால், எல்லோருடைய வாழ்கையிலும் முதல் பாதியில் வருபவர்கள் முக்கியமான இருவர் இருக்கிறார்கள். அப்பா, அம்மா. என்னை மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த காரணமே இந்த இரண்டு பேர் தான்.

என் உள்ளூணர்விடம் பேச வந்த உங்களிடம் என்னை அறிமுகம் செய்யாமல் பேசுகிறேன். என் பெயரை உங்களிடம் சொல்லவில்லையே....!

என் பெயர் சந்திரசேகர். சுருக்கமாக 'சந்திரு' என்று அழைப்பார்கள்.

ஜனவரி 26, 1950 என்று சொன்னவுடன் எல்லோரும் குடியரசு தினம் என்று சொல்வீர்கள். நான் பிறந்த தினமும் இது தான்!! இந்தியாவில் ஜமிந்தார்கள், பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிந்து மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்த நாள்.

இந்தியாவின் உண்மையான ‘சுதந்திர தினம்’ இது தான் என்று பலர் கருதினர். ஆனால், இந்த உலகத்தில் இன்று தான் நான் சிறைப்பட்டேன். சிவந்த நிறம், மென்மையான தேகம், தூக்கம் வழிந்த கண்கள் என்று என் அம்மா நான் பிறந்த போது இருந்ததை பற்றி என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார்.

என் அப்பா பெயர் நாதன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர். என்னுடைய முதல் கதாநாயகன். சைக்கிளில் முன்னே வைத்துக் கொண்டு அவர் வேகமாக செல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். இரவு தூங்கும் போது ராட்ச கதைகள் சொல்லுவார். நான் ரசித்து கேட்பேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கதைகள் சொல்வததாக சொல்லி ஒரே மாதிரியான கதைகள் சொல்லுவார். இருந்தாலும் அதை கேட்டபின் நான் தூங்குவேன்.

என் அம்மா பெயர் இந்திரா ராணி. அப்பா செல்லமாக 'இந்திரா' என்று அழைப்பார். நானும், அப்பாவும் தான் அம்மாவுக்கு உலகம். திடீர் திடீர் என்று கோபம் வரும். மற்றப்படி மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். மனதில் இருப்பதை உடைத்து பேசிவிடுவார். அடுத்தவர்கள் மனம் புண்படுமே என்று நினைத்து பார்க்க மாட்டார். ஆனால், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தினமும் நினைப்பவர்.

அப்பா என்னை இரண்டு கையால் தூக்கி என்னோடு சேர்ந்து சுற்றி கீழே விடுவார். அவர் என்னை கீழே விட்டதும் இந்த உலகமே என்னை சுற்றுவது போல் இருக்கும். இதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா என்னை தூக்கி சுத்தும் போது திட்டுவாள். ஆனால், அப்பா பதிலுக்கு அம்மாவை திட்டி நான் பார்த்தில்லை.அம்மாவே கோபப்பட்டாலும் அப்பா பொறுமையுடன் இருப்பார். அப்பா முகம் கோபம் வந்தால் எப்படி இருக்கும் என்று நான் பார்த்ததேயில்லை.

நான் எது கேட்டாலும் அப்பா வாங்கி கொடுத்துவிடுவார். அப்படி அவர் மறுத்தால் பிடிவாதம் பிடித்து சுவரில் முட்டிக் கொள்வேன். நான் அப்படி செய்ய கூடாது என்பதற்காகவே கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்.

அப்பா வீட்டில் தேவையில்லாத காகிதங்களை கசக்கி உருண்டை செய்து, அதன் மேல் வெட்டிய பழைய சைக்கிள் ட்யூப்பை வைத்து பந்து செய்து கொடுப்பார். அந்த பந்தில் தான் நான் நண்பர்களோடு விளையாடுவேன். எவ்வளவு வேகமாக அந்த பந்து மேலே பட்டாலும் வலிக்காது. எனக்கு அடிப்பக்கூடாது என்பதற்காக அப்பா பொறுமையாக பந்து செய்துக் கொடுப்பார்.

எங்கள் வீடு சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அம்மன் கோயில் அருகில் இருந்தது. மாதம் ஐந்து ரூபாய் வாடகை. அப்பாவுக்கு ஐபது ரூபாய் சம்பளம்.

" இந்திரா... இந்திரா... பையன் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டானா...." என்று பரபரப்புடன் என் அப்பாவின் குரல்.

" இதோ வந்துட்டே இருக்கான்..." என் கை பிடித்து அம்மா அழைத்து வந்தாள்.

என்னை தாமரை பூ போல் சுமப்பது போல் சுமந்து மெதுவாக சைக்கிள் முன் அப்பா அமர வைத்தார். என் அப்பா சைக்கிள் பின்புறம் அம்மா அமர்ந்தப்படி வந்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் வழியாக தான் செல்வோம். அப்பா வண்டியை நிருத்தி விட்டு வெளியே இருந்தப்படி வணங்கி பிறகு தான் செல்வார். பல முறை அப்பா வெளியே இருந்து தான் வணங்கி இருக்கிறார். ஒரு முறை கூட என்னையும், அம்மாவையும் உள்ளே அழைத்து சென்றதில்லை. அவர் உள்ளே போகாததற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.

மூச்சு இறைக்க இறைக்க அப்பா வண்டி ஓட்டிக் கொண்டு வந்தார். அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்த அம்மா வீட்டுக்கு வேண்டிய காய்கறி எல்லாம் வாங்குவதற்கு கொஞ்ச தூரத்தில் இறங்கி, நடந்து செல்லுவதாக கூறினார். அப்பாவும் சிரித்தப்படி அம்மாவை இறக்கிவிட்டார்.

"பார்த்து வீட்டுக்கு போம்மா..." என்று அன்புடன் அம்மாவிடம் கூறினார்.

" சரிங்க...." என்றாள். அப்பாவும், அம்மாவும் இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அம்மா இறங்கியவுடன் அப்பாவுக்கு பெரிய பலமே வந்துவிட்டது. அப்பா சைக்கிளை வேகமாக மிதித்தார். அவர் வேகமாக செல்ல செல்ல எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் முகத்தில் சந்தோஷத்தை பார்த்த அப்பா இன்னும் வேகமாக ஓட்டினார். மேடு, பல்லங்களில் வண்டி செல்லும் எனக்கு வலித்தாலும் வேகம் ரொம்பவும் பிடித்திருந்தது. அவரின் வேகம் முன்னே இருந்த பெரிய பல்லத்தை பார்க்கவில்லை. சைக்கிள் சற்று நிலை தடுமாறியது. நான் முன் பக்கம் விழுவது போல் இருந்தேன். ஆனால், அப்பா என்னை தாங்கி பிடித்துக் கொண்டு விழுந்ததால் நான் அவர் மேல் விழுந்தேன்.

எனக்கு கையில் பலமான காயம் பட்டது. நாங்கள் விழுவதை பார்த்தும் இனிப்பை பார்த்த எறும்பு போல் எங்களை சுற்றி கூட்டம் கூடியது.

"பாவம் ! சின்ன பையன்"

"எதுக்கு சைக்கிள வேகம ஓட்டனும். இப்படி அடிப்படனும்..."

"யாராவது போய் உதவுங்கப்பா...?"

இப்படி பலர் பேசுவது என் காதில் கேட்டது. எல்லோரும் பேசுவதும், வேடிக்கை பார்ப்பதுமாக தான் இருந்தனர். அப்பாவை தட்டி தட்டி எழுப்பினேன். அவர் எழவில்லை. அப்போது தான் கவனித்தேன். விழும் போது அவர் தலையில் பின் மண்டை கல்லில் அடிப்பட்டிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நான் அழுதுக் கொண்டு அப்பாவை எழுப்ப பார்த்தேன். அவர் வீட்டில் தூங்குவது போல் அமைதியாக மயங்கி கிடந்தார்.

"பாவம் இரத்தம் எவ்வளவு போகுது பாரு...." என்று அப்பாவை தூக்கி சென்றவர் பரிதாபமாக சொன்னார்.

மருத்துவமனைக்கு சென்றதும், எனக்கு மருந்து கொடுத்து சிகிச்சை பார்த்தனர். அப்பாவுக்கு எதுவும் அவர்கள் செய்யவில்லை. எனக்கு பயமாக இருந்தது.

கொஞ்சம் நேரத்தில் கண்ணில் நீர் தழும்ப அம்மா என்னை நோக்கி வருதைவதை பார்த்தேன். என்னை வாரிக்கட்டி அணைத்துக் கொண்டார். உள்ளே அழைத்து சென்ற என் தந்தை வெளியே எடுத்து வந்தனர். அம்மா தன் தலை அப்பா மீது மோதி மோதி இடித்துக் கொண்டு அழுதார்.

அம்மா கத்தியப்படி "இனிமே நமக்கு யாரு இருக்கா..." என்ற சொன்னபோது தான் எனக்கு தெரிந்தது அப்பா விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என்று !

என் வாழ்க்கையையில் நான் பார்த்த முதல் மரணம் என் அப்பாவுடையது. மூக்கை பஞ்சால் அடைத்து, கை, கால் இரண்டையும் சிறு வெள்ளை துணியால் கட்டி, காதுகளை சுற்று துணியால் மூடி..... இப்படி என் அப்பாவை படுக்க வைத்தனர். அம்மா அழுகையை என்னால் போக்க முடியவில்லை.

இறப்பு என்றால் என்னவென்று தெரியாத வயது. அப்பா எழுப்ப பல முறை தட்டினேன். எனக்கு காகிதத்தில் பந்து செய்து தர சொன்னேன். எதுவும் அவர் காதில் விழவில்லை.

இனி எங்கள் வாழ்வு அவ்வளவு தான் என்ற பயம் அம்மாவை தொற்றிக் கொண்டது.

" கவலப்படாதம்மா.... உனக்கு நான் இருக்கேன்..." ஒரு குரல் கேட்டது.

வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி போட்டுக் கொண்டு ஒருவர் அம்மா அருகே நின்றார். தலையில் இரண்டு மூன்று வெள்ளை மூடி தெரிந்தால், பார்ப்பதற்கு கொஞ்ச இளமையாக தான் தெரிந்தார். இவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது.

Sunday, February 5, 2012

புதிய புத்தகம் பேசுது !!

பிணம் தின்னும் தேசம் - கருவை சு.சண்முகசுந்தரம்(நாகரத்னா பதிப்பகம் )

ராமேஸ்வரத்தை பூர்விகமாகக் கொண்ட கவிஞர். ஈழம் சார்ந்து குரல் கொடுப்பவர். அகதிகளின் துயரத்தையும், போர்ச் சூழலையும் பற்றி எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

தொகுப்பு: கிருஷ்ணபிரபு

நன்றி : புதிய புத்தகம் பேசுது !! (பக்கம் : 28)

Friday, February 3, 2012

உலக சினிமா : Bad Education

உண்மையான கல்வி என்பது என்ன ? அறியாமையை போக்க வேண்டும், சிந்தனையை தூண்ட வேண்டும், அறிவை வளர்க்க வேண்டும், நல்லது கேட்டது தெரிந்துக் கொள்ள வேண்டும். முதல்வராகி மேடையில் அமர்ந்தாலும் படிப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியர் வந்தால் தன்னை அறியாமல் எழுந்து நிற்கும் மரியாதை கொடுக்க தோன்றும். அந்த அளவிற்கு, வாழ்க்கையில் நம்முடனே பயனிக்கும் கல்வியை கற்று தரும் ஆசிரியர் மீது நாம் மரியாதை வைத்திருக்கிறோம்.

புனிதமான படிப்பை சொல்லி தரும் ஆசிரியர் கெட்டவராக அமைந்தால் அவனிடம் படிக்கும் மாணவர்களின் கதியை பற்றி சொல்லும் படம் தான் "Bad Education".

1980ல், என்ரிக் என்ற இளம் திரைப்பட இயக்குனர் தனது உதவியாளருடன் அடுத்த படத்திற்கான கதை விவாதித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது, ஒரு மேடை நடிகன் தன் கதையோடு என்ரிக்கை சந்திக்க வருகிறான். அந்த மேடை நடிகன், "உன்னுடன் படித்த பழைய நண்பன் இங்னசியோ" என்கிறான். என்ரிக் தன் பள்ளி நண்பனை பார்த்ததும் அடையாளம் கண்டுக் கொள்ள முடியவில்லை. காலம் இருவரின் உருவத்தை அப்படி மாற்றியிருக்கிறது. இங்னசியோ, தன்னை நாடக வட்டத்தில் "ஏன்ஜல்" என்று அழைப்பதாக கூறுகிறான். தன் கையில் இருக்கும் "தி விசிட்" என்ற கதையை கொடுத்து இதை அவனின் அடுத்த படத்துக்கு பயன்படுத்தி, தனக்கும் ஒரு பாத்திரம் தர வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுக்கிறான். அந்த கதை நம் பள்ளி நாட்களில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எழுதப்பட்ட கதை என்கிறான். என்ரிக் படித்து விட்டு தன் கருத்தையும், முடிவையும் சொல்லுவதாக சொல்கிறான்.



'தி விசிட்' கதை 1977ல் தொடங்குகிறது. இங்னசியோ, கதையில் தன் பெயரை “சாரா” என்று மாற்றி, திருநங்கையாக மாறி மேடையில் நடித்து வாழ்பவளாக எழுதியுள்ளான். ஒரு நாள் ஹோட்டலில் குடித்து வரும் இளைஞனிடம் உடலுறவு கொண்டு அவனிடம் இருக்கும் பணத்தை திருட முயற்சிக்கிறாள் சாரா. ஆனால், அந்த இளைஞன் தன் பள்ளி நாட்களின் நண்பன் என்ரிக் என்று தெரிந்ததும் திருடிய பணத்தை அங்கையே வைத்துவிடுகிறாள். தன் வாழ்க்கையை கதையாக எழுதி சாரா தன் பள்ளி பாதரியார் மனோலோவை சந்திக்கிறாள். சாரா பாதரியார் மனோலோவிடம் தன்னை அறிமுகப்படுத்தியதும் கதை பின்னோக்கி செல்கிறது.

1964ல், இனிமையான குரலில் இங்னசியோ பாடுவதுப் போல் தொடங்குகிறது. பாதரியார் தனது காம பார்வையை இங்னசியோ மீது வைத்திருந்தார். இங்னசியோவின் முதல் காதலும், நண்பனும் என்ரிக் தான். ஒரு நாள் என்ரிக்கும்,இங்னசியோவும் ஒன்றாக இருப்பதை பார்த்த பாதரியார் மனோலோ என்ரிக்கை பள்ளியில் விட்டு விரட்டுவதாக மிரட்டுகிறார். என்ரிக்கை காப்பாற்ற, இங்னசியோ பாதரியார் ஆசைக்கு இணங்கிறான். இருந்தும், பாதரியார் பொறாமை குணத்தால் என்ரிக் பள்ளியை விட்டு விரட்டப்படுகிறான்.

'தி விசிட்' கதையை படித்து முடித்த என்ரிக், அதை படமாக்க முடிவெடுக்கிறான். ஆனால், இங்னசியோ என்கிற ஏன்ஜல் 'சாரா' பாத்திரத்தை தான் நடிக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறான். என்ரிக் அதை மறுக்க, இங்னசியோ தன் கதையை தன்னுடன் எடுத்து செல்கிறான். என்ரிக் பள்ளிநாட்களில் தான் காதலித்த இங்னசியோவுக்கும், இப்போது இருக்கும் இங்னசியோவுக்கும் பல மாற்றங்கள் இருப்பதை உணர்கிறான். அவனைப் பற்றி விசாரிக்க கிராமத்தில் இருக்கும் இங்னசியோவின் அம்மாவை பார்க்க செல்கிறான். அங்கு தான் என்ரிக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. உண்மையான இங்னசியோ இறந்து நான்கு வருடமாகிறது. அவன் பெயரை சொல்லிக் கொண்டு வந்தவன் அவனின் சகோதரன் ‘ஜூஅன்’.

மீண்டும் நகரத்துக்கு வந்த என்ரிக், ஜூஅன்னுக்கு தன் படத்தில் வாய்ப்பு அளிப்பதாக சொல்லுகிறான். அதுவும் அவன் விருப்பமான 'சாரா' என்ற முக்கிய பாத்திரம் தருவதாக உறுதி அளிக்கிறான். இருவரும் கட்டி தழுவி உடலுறவு வைத்துக் கொள்கிறார்கள். என்ரிக் ஜூஅன் கொண்டு வந்த கதையில் சில மாற்றங்கள் செய்கிறான். இறுதிக் காட்சியில், பாதரியார் மனோலோவை பணத்திற்காக மிரட்டும் சாராவை தன் உதவியாளர் துணையோடு கொலை செய்வது போல் காட்சி எடுக்கிறார். காட்சி படமாக்கிய பிறகு, "சாரா"வாக நடித்த ஜூஅன் தன்னையும் அறியாமல் அழுகிறான்.

தன் அறைக்கு வரும் என்ரிக், பெரெங்கர் என்ற மனிதரை தன் அறையில் பார்க்கிறான். அவன் தான் தன் கதையில் வரும் பாதரியார் மனோலோ பாத்திரத்தின் உண்மையான உருவம். என்ரிக்கிடம் உண்மையை சொல்ல வந்திருப்பதாக பாதரியார் பெரெங்கர் சொல்லுகிறான். அவன் எடுத்த காட்சிக்கும், நடந்த உண்மைக்கு பெரிய தூரம் இல்லை என்பதை கூறுகிறான்.

திருநங்கையான இங்னசியோ தன் "தி விசிட்" கதையை வைத்து பாதரியார் பெரெங்கரை மிரட்டியிருக்கிறாள். அதற்கு பத்து லட்சம் பணம் தரவில்லை என்றால், அந்த கதையை புத்தகமாக கொண்டு வரப்போவதாக கூறுகிறாள். அவளை பார்க்க வந்த பெரெங்கர் அவளின் தம்பி ஜூஅன் மீது ஆசைக் கொள்கிறான். இருவரும் உறவும் வைத்துக் கொள்கிறார்கள். இங்னசியோ கேட்ட பணம் பாதரியார் பெரெங்கரால் தர முடியவில்லை. ஜூஅன்னுக்கும் பணம் வேண்டும். அதனால், இங்னசியோ உட்கொள்ளும் போதை மருந்தில் மேலும் போதை தரக்குடிய பொருளை சேர்க்கிறான் ஜூஅன். அதிக போதை மருந்து உண்டதால் இங்னசியோ இறக்கிறாள். இங்னசியோ இறந்ததும், ஜூஅன் பாதரியார் பெரெங்கரை விட்டு விலகி செல்கிறான். தன்னை தொடர்ந்தால் கொலை செய்வதாக மிரட்டுகிறான்.

இங்னசியோவுக்காக அவன் தம்பி ஜூஅனுக்கு வாய்ப்பு கொடுத்த என்ரிக்கு இந்த உண்மை அதிர்ச்சியாக இருந்தது. தன் வீட்டில் தங்கி இருந்த ஜூஅன்னை விரட்டி அடிக்கிறார் என்ரிக். வெளியே செல்லும் போது, ஜூஅன் இங்னசியோ இறக்கும் போது எழுதிய கடிதத்தை என்ரிக்கிடம் கொடுக்கிறான். அதில், " அன்புள்ள என்ரிக், எல்லாம் நலமாக முடிகிறது..." கடிதம் முடிப்பதற்குள் இறந்திருக்கிறாள் இங்னசியோ. அந்த கிதம் பார்த்ததும் கண்ணில் நீர் தழும்ப நிற்கிறான் என்ரிக்.

"என்ரிக் எடுத்த படம் மிக பெரிய வெற்றிப்பெறுகிறது"

"ஜூஅன் சகோதரனை கொன்ற குற்றவுணர்ச்சி இல்லாமல் பெரிய நடிகனாகிறான். ஆனால், இப்போது ஜூஅன் சின்னத்திரையில் வேலை செய்துக் கொண்டு இருக்கிறான்"

"பாதரியார் பெரெங்கர் ஜூஅன் தன்னுடன் வாழ வேண்டும் என்று அவனை பின் தொடர்ந்தே வாழ்க்கை முடிந்து இறக்கிறார்"

போன்ற வாசகங்கள் திரையில் ஓட படம் முடிகிறது.

நீங்கள் கலாச்சார காவலர்கள் என்றால் இந்த படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது. இதில், ஆபாசமாக நடிக்கும் பெண்கள் இல்லை. இன்னும் சொல்லபோனால் இந்த படத்தில் பெண்களே இல்லை. ஆணுக்கும், ஆணுக்கும் இருக்கும் காதல், காமத்தை தான் அதிகம் விவரிக்கிறது. ஆணுக்கும், ஆணுக்கும் இருக்கும் உடலுறவு காட்சியைக் மேலோட்டமாக தான் எடுத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் பெட்ரோ அல்மோடோவர். கிறிஸ்த்து மடத்தில் நடக்கும் பல உண்மைகளை இந்த படம் தோலுரித்துள்ளார்.

57வது கேன்ஸ் திரைப்பட விழா பலரது பாராட்டுகள் பெற்றதோடு இல்லாமல், அமெரிக்காவில் ஸ்பெயின் மொழி படங்களில் அதிக வசூல் செய்த Bad Education படம் என்பது குறிப்பிடதக்கது.

எத்தனையோ மாணவர்கள் ஆசிரியர் செய்யும் பாலியல் கொடுமைகளை பெற்றோர்களிடம் சொல்லவும் முடியாமல், படிப்பை கவனம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஓரின சேர்க்கையை எதிர்ப்பவர்கள் சிறுவர்கள் மீது நடத்தப்படும் பாலியல் வன்கொடுமையை ஏன் எதிர்த்து குரல் கொடுப்பதில்லை. கலாச்சாரத்தை காக்க நினைப்பவர்கள் அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கரை இல்லாத மிக வேதனையாக இருக்கிறது.

சிறுவர்/சிறுமிகள் மீது வன்கொடுமை செய்யும் ஆசிரியர்கள் தான் வன்முறை தூண்டிவிடும் ஆயுதங்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

Thursday, February 2, 2012

அந்த மூன்று பெண்கள் - அறிமுக அத்தியாயம்

கறுப்பு நிற சான்ட்ரோ கார் அண்ணா நகர் வழியாக சென்றுக் கொண்டு இருந்தது. ஆறுபது வயதில் ஒரு ஆணும், ஐம்பது வயதில் பெண்ணும் பிரயானம் செய்துக் கொண்டு இருந்தனர். முகத்தில் அதிக நிம்மதியும், மன அமைதியுடனே அந்த முதியவர் தெரிந்தார். உலகத்தில் நான் தான் அதிக சந்தோஷமுடன் வாழும் மனிதன் என்ற பெருமிதம் அவர் மனதில் நிறைந்து இருந்தது. இந்த நிமிடமே செத்தாலும் பரவாயில்லை. தன் வாழ்க்கையில் எல்லா கடமைகளை முடித்த சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.

காரின் ஜன்னல் வழியே தன் நினைவுகளை பரந்தப்படி அவர் வந்துக் கொண்டு இருந்தார். பக்கத்தில் இருப்பவர்கள் யாருடனும் பேசவில்லை. எப்படி தொடங்கிய தன் வாழ்க்கை இப்போது ஊரே பொறாமை படும் படி வாழ்க்கிறோம். இனி தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற ஆணவம் மெல்ல மெல்ல அவர் உள்ளத்தில் குடிப்புகத்தொடங்கியது.

கறுப்பு நிற சான்ட்ரோ ஒரு வீட்டுக்குள் மெதுவாக நுழைய, காரில் இருந்து அந்த முதியவனும், பெண்மணியும் இறங்கினர். அந்த முதியவனை பார்த்ததும் வீட்டில் இருந்து மூன்று வயது ஆண் குழந்தை ஆசையாக அவனை நோக்கி ஓடி வந்தது, அவனை "தா…த்தா...." என்றப்படி கட்டி அணைத்துக் கொண்டார்.

அந்த முதியவனும் சிறுவனை தூக்கியவாரு வீட்டுக்குள் நுழைந்தார். இவர்கள் வருகையை பார்த்து உள்ளே இருந்து எதிர்பார்த்த இருபத்தியைந்து வயது உள்ள ஒரு பெண் வெளியே வந்து " வாங்க மாமா.... வாங்க அத்தே... பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது.....?" என்றாள்.

அந்த முதியவர் பதில் எதுவும் பேசாமல் அமைதியாக சிரித்தார். அவருடன் வந்த அவனது மனைவி " நல்லா இருந்துச்சு.... ரகு வீட்டுல இல்ல...." என்று விசாரித்தாள்.

" அவரு வெளியே பொய்யிருக்காரு அத்தே.... உள்ள வாங்க...." என்று அழைத்தப்படி அவர்கள் கையில் இருந்த பெட்டியை வாங்கி கொண்டு உள்ளே வந்தாள்.

" ஆகாஷ் கண்ணு எப்படி இருக்க... பாட்டி, தாத்தா காண்ணோம்னு தேடுனியா..." என்று தன் கணவன் கையில் இருக்கும் பேரனை கொஞ்சினாள்.

சோர்ந்த நிலையில் அந்த முதியவர் தன் பேரனுடன் சோபாவில் அமர்ந்தார். வயதான பெண்ணும், அவள் மருமகளுடன் பேசியப்படி சமையல் அறைக்கு நுழைந்தாள்.

" சிவகாமி...! குடிக்க தண்ணி கொண்டு வாம்மா....." என்று தன் மனைவியை அழைத்தார்.

தன் கணவர் தண்ணீர் கேட்டப்போது அவருக்கு மருந்துக் கொண்டுக்க வேண்டும் என்ற நினைவே அப்போது தான் அவளுக்கு வந்தது. கையில் மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். அப்போது வெளியே அவர்கள் வீட்டு முன்பு ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் அவளுக்கு கேட்கிறது. வண்டி நிருத்தும் சத்தத்தை வைத்தே சிறுவன் ஆகாஷ் “அப்..பா வந்தாச்சு” என்று சொன்னான்.

ரகு வீட்டு மணி அடிக்கும் முன்பே சிவகாமி கதவை திறக்கிறாள். அம்மா, அப்பாவின் வரவை எதிர்பார்த்து தான் ரகு வீட்டுக்கு வந்தான்.

" வாம்மா.... ஊருல்ல ப்ரியா எப்படி இருக்கா...! புது இடம் அவளுக்கு புடிச்சிருக்கா..." என்று வந்தவுடன் தங்கையை பற்றி விசாரித்தான்.

" ஏன்டா... இரண்டு நாள் கழிச்சு ஊருல இருந்து வந்திருக்கேன். என்ன பத்தி ஏதாவது கேட்டியா... உனக்கும், உங்க அப்பாவுக்கும் ப்ரியா தான் முக்கியம்...." என்ற செல்லமாக தன் மகனை கடிந்துக் கொண்டாள் சிவகாமி.

" நீதான் அம்மா எனக்கு எல்லாமே... புதுசா கல்யாணம் ஆனவ... எப்படி இருக்கா கேட்டா அது தப்பா... இதுக்கு போய் கோபப்படுற..." என்று தன் அம்மாவை சமாதனப்படுத்தினான்.

" நம்ப புது மாப்பிள்ள என்ன சொன்னாரு..." என்றான்.

" அவருக்கு அண்ணா நகருல ஒரு வீடு வேணும்னு கேக்குறாரு... வாங்கி தரியா..." என்று ஏளனமாக கேட்டாள்.

" புதுசா வீடு என்னால வாங்கி தர முடியாது. வேணும்னா நம்ப வீட்ட எடுத்துக்க சொல்லு. நம்ப ப்ரியாவுக்காக நா வாடகை வீட்டுல கூட இருப்பேன்...." சிரித்தப்படி கூறினான்.

ரகு சொன்னது செயற்கைத்தனமாக தெரிந்தாலும், தன் தங்கை ப்ரியா மீது அதிக பாசமுடையவன். தங்கை மீது ரகு வைத்திருந்த பாசத்தை பார்த்து சிவகாமி மனதில் புரிப்படைந்தாள். தன் மகனிடம் பேசிக் கொண்டு இருந்ததில் தன் கணவனுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை அவள் மறந்துவிட்டாள்.

சிவகாமியின் கணவர் தன் கையை நெஞ்சில் வைத்தப்படி சோபாவில் சாய்ந்தார். ரகு, சிவகாமி அழைக்க கூட அவரால் குரல் எழுப்ப முடியவில்லை. அவரின் கண்கள் மெல்ல மெல்ல முடின. உதடுகள் பேச முடியாமல் தவித்தன. கால்கள் வழு இழந்து இருந்தன. இதய துடிப்பு மெதுவாக குறைய தொடங்கின.
ரகு தன் அம்மாவிடம் பேசியதில் தன் தந்தையை கவனிக்கவில்லை. அவளும் தன் கணவனை பற்றி யோசிக்கவில்லை. சமையல் அறையில் இருந்து ரகுவின் மனைவி வினிதா வெளியே வந்தாள்.

தன் மாமனார் பேச்சு, மூச்சு இல்லாமால் சோபாவில் மயங்கி கிடப்பதை பார்த்து" ஐயோ மாமா !! என்ன ஆச்சு.... ?" என்று அழறிய படி சோபாவை நோக்கி ஓடினாள்.

வினிதாவின் குரலை கேட்ட சிவகாமியும், ரகுவும் ஓடினர். தன் தந்தையின் நாடி துடிப்பு மெல்ல மெல்ல குறைந்துக் கொண்டு இருப்பதை ரகு உணர்ந்தான்.

திடு திடுவேன ஓடி செல்போனை எடுத்து தன் மருத்துவமனையில் இருந்து ஆம்பிலன்ஸ்யை வரவழைக்கிறான். ரகு போன் போட்ட பத்து நிமிடத்தில் சைரன் சத்ததுடன் அவன் வீட்டுக்கு முன் ஆம்புலன்ஸ் வந்து நின்றது. சிவகாமி கண்ணீர் தழும்ப தன் கணவனை பார்க்கிறாள்.

" வினிதா...! நீ அம்மாவையும், பையனையும் கார்ல கூட்டிட்டு வா. நா அப்பாவோட ஆம்பிலன்ஸ்ல போறேன்..." என்று கூறிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் வண்டியில் ஏறினான்.

தன் தந்தைக்கு வந்தது மாரடைப்பு என்று சிவகாமியிடம் ரகு சொல்லவில்லை. எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற பயம் கலந்த பதட்டத்துடன் ரகு வண்டியில் வந்துக் கொண்டு இருந்தான்.

தான் ஒரு டாக்டராக இருந்தாலும் தன் உறவுகள் என்று வந்தவுடன் படித்த படிப்பு உதவ முடிந்து முடியாமல் இருந்தது. மனம் பாமரன் போல பயம் சூழ்ந்துக் கொள்கிறது. அப்படி ஒரு நிலையில் தான் ரகு இருந்தான்.

ரகுவின் தந்தை ஐ.சி.யூவில் சேர்க்கப்பட்டு, ட்ரிப்ஸ் எத்தினர். ஒவ்வொரு இடத்திலும் ஒரு இயந்திரம் பொருத்தி இருந்தத. மருத்துவரான ரகு இது பழக்கம் என்றாலும் தன் தந்தைக்கு என்று வந்தவுடன் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனால் தன் தந்தையை இப்படி பார்க்க முடியவில்லை.
வேறு ஒரு மருத்துவரிடம் தன் தந்தையை கவனிக்க சொல்லி ஐ.சி.யூவில் இருந்து வெளியே வந்தான். அப்போது, சிவகாமியும், வினிதாவும் அவனை நோக்கி வருவதை பார்க்கிறான்.

"என்னடா...! அப்பாவுக்கு எப்படி இருக்கு ?".

" இப்ப தான் ட்ரிட்மென்ட் ஆரம்பிச்சிருக்காங்க... கொஞ்ச நேர கழிச்சு தான் எதையும் சொல்ல முடியும்..."

அவர்களின் நல்ல நேரம் பெரிய டாக்டர் ஐ.சி.யூவுக்கு வந்துக் கொண்டு இருந்தார்.

" ரகு ! இப்ப தான் நர்ஸ் உமா விஷயம் சொன்னாங்க... உங்க அப்பாவ அட்மிட் பண்ணியாச்சா... ".

" உள்ள தான் ஸார் இருக்காரு...."

"ரகு ! நீங்க மட்டும் என் கூட வாங்க....." என்று ரகுவை அழைத்து உள்ளே சென்றார்.

ரகுவின் தந்தையின் ரிப்போர்ட் ஒவ்வொன்றையும் பெரிய டாக்டர் புரட்டி பார்த்தார். இதற்கு முன்பு அவருக்கு மாரடைப்பு வந்ததில்லை. இது தான் முதல் முறை. அவன் தந்தையின் இதய துடிப்பு குறைந்துக் கொண்டு இருந்ததே தவிர, எந்த முன்னேற்றமும் அடையவில்லை. ரகுவின் தந்தை மரணத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருப்பதை உணர்ந்தார். பெரிய டாக்டர் முகத்தை பார்த்ததும் என்ன நிலைமை என்று யூகிக்க முடிந்தது.

" மிஸ்டர் ரகு...! ஐ யம் வெரி ஸாரி.... அஸ்யே டாக்டர். நா உங்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. இன்னும் இரண்டு மணி நேரம் தான் உங்க அப்பா உயிரோட இருப்பாரு." என்று பெரிய டாக்டர் சொல்ல சொல்ல ரகுவின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக கொட்டிக் கொண்டு இருந்தது. வெளியே அழுதுக் கொண்டு இருக்கும் அம்மாவுக்கு என்ன பதில் சொல்ல போகிறோம் என்று ஐ.சி.யூ அறையில் இருந்தப்படி அம்மாவை பார்த்தான்.

"ரகு ! கன்ட்ரோல் யுவர்செல்ப்... நீங்க இப்ப தான் தைரியமா இருக்கனும். உங்க அம்மாவுக்கு இப்ப நீங்க தான் ஆதரவு. டேக் கேர்..." என்று ஆறுதல் கூறி அந்த இடத்தை விட்டு பெரிய டாக்டர் நகர்ந்தார்.

தன் தந்தை கையை படித்தப்படி ரகு அழுதுக் கொண்டு இருந்தான்.

தன் கையை ரகு தான் பிடித்திருக்கிறான் என்று அவன் அப்பாவால் உணர முடிந்தது. அவர்கை ரகுவின் உப்பு கண்ணீரால் நனைந்தது.

ஒவ்வொரு மனிதன் இறக்கும் முன்பு இரண்டு மணி நேரம் தன் உள்ளூணர்வுடன் பேசிக் கொள்வானாம். தன்னை சுற்றி இருப்பவர்கள் அழுவதை பார்த்து ஏன் அழுகிறார்கள் என்று பேசிக் கொள்வார்களாம். தன்னுடம் பேசிக் கொண்டே மெல்ல மெல்ல உயிர் போகுமாம். இதை உணர்ந்து சொன்னவன் யாருமில்லை. கற்பனை என்று சொன்னாலும் உண்மை என்று நிருபிக்க ஆதாரமில்லை. ஒரு வேளை இது உண்மையாக இருந்தால் தன் தந்தை தன்னை பற்றி என்ன பேசுவார் என்று ரகு தனக்குள் கேட்டுக் கொண்டார்.

தன் தந்தை இரண்டு மணி நேரம் நிம்மதியாக இருக்கட்டும் என்று வெளியே வந்தான். இறக்க போகும் தந்தை பற்றி சொல்லி தன் அம்மாவின் நம்பிக்கை கொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவன் அம்மாவிடம் எதுவும் கூறவில்லை. சிவகாமியின் நம்பிக்கை இரண்டு மணி நேரமாவது உயிருடன் இருக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.

என் மகன் நினைத்தது உண்மை தான். ஒவ்வொரு மனிதன் இறக்கும் முன் தன் உள்ளூணர்வுடன் இரண்டு மணி நேரம் பேசிக் கொள்வான். தன் வாழ்நாளில் கடந்து வந்தவர்களை பற்றி நினைத்துக் கொள்வான். தன் பிரிவால் பாதிக்கப்படுபவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வான். இது வரை வாழ்ந்த நாளை இரண்டு மணி நேரத்திற்குள் நினைவோடையாக ஓட்டிக் கொள்வான். அப்படி தான் நானு என் நினைவோடையை ஓட்டப்போகிறேன். என் நினைவுகளை நீங்கள் எப்படி புரட்டி பார்த்தாலும் முக்கியமான மூன்று பேர் இருப்பார்கள். அந்த மூன்று பேர்களும் பெண்கள். அந்த மூன்று பெண்கள் தான் என்னை இதுவரை இயக்கியவர்கள். அவர்கள் தான் என்னை வாழ வைத்தவர்கள். நான் வாழ காரணமாக இருந்தவர்கள். இப்போது நான் சாக காரணமாக இருப்பவர்களும் அவர்கள் தான்.

அந்த மூன்று பெண்கள் தான் காரணம்
.”

(தொடரும்...)

LinkWithin

Related Posts with Thumbnails