வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, February 6, 2012

அந்த மூன்று பெண்கள் - அத்தியாயம் 1

அறிமுக அத்தியாயம்

நீங்கள் இதுவரை என்னை ஆகாஷின் தாத்தாவாக, சிவகாமியின் கணவனாக, ரகுவின் தந்தையாக தான் பார்த்துக் கொண்டு இருந்தீர்கள். மனைவி, மகன், பேரன் எல்லாம் வாழ்க்கையின் இரண்டாவது பாதியில் வருபவர்கள். ஆனால், எல்லோருடைய வாழ்கையிலும் முதல் பாதியில் வருபவர்கள் முக்கியமான இருவர் இருக்கிறார்கள். அப்பா, அம்மா. என்னை மட்டுமல்ல இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த காரணமே இந்த இரண்டு பேர் தான்.

என் உள்ளூணர்விடம் பேச வந்த உங்களிடம் என்னை அறிமுகம் செய்யாமல் பேசுகிறேன். என் பெயரை உங்களிடம் சொல்லவில்லையே....!

என் பெயர் சந்திரசேகர். சுருக்கமாக 'சந்திரு' என்று அழைப்பார்கள்.

ஜனவரி 26, 1950 என்று சொன்னவுடன் எல்லோரும் குடியரசு தினம் என்று சொல்வீர்கள். நான் பிறந்த தினமும் இது தான்!! இந்தியாவில் ஜமிந்தார்கள், பண்ணையார்கள் ஆதிக்கம் ஒழிந்து மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் அமலுக்கு வந்த நாள்.

இந்தியாவின் உண்மையான ‘சுதந்திர தினம்’ இது தான் என்று பலர் கருதினர். ஆனால், இந்த உலகத்தில் இன்று தான் நான் சிறைப்பட்டேன். சிவந்த நிறம், மென்மையான தேகம், தூக்கம் வழிந்த கண்கள் என்று என் அம்மா நான் பிறந்த போது இருந்ததை பற்றி என்னிடம் பல முறை சொல்லியிருக்கிறார்.

என் அப்பா பெயர் நாதன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர். என்னுடைய முதல் கதாநாயகன். சைக்கிளில் முன்னே வைத்துக் கொண்டு அவர் வேகமாக செல்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். இரவு தூங்கும் போது ராட்ச கதைகள் சொல்லுவார். நான் ரசித்து கேட்பேன். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கதைகள் சொல்வததாக சொல்லி ஒரே மாதிரியான கதைகள் சொல்லுவார். இருந்தாலும் அதை கேட்டபின் நான் தூங்குவேன்.

என் அம்மா பெயர் இந்திரா ராணி. அப்பா செல்லமாக 'இந்திரா' என்று அழைப்பார். நானும், அப்பாவும் தான் அம்மாவுக்கு உலகம். திடீர் திடீர் என்று கோபம் வரும். மற்றப்படி மனதில் எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். மனதில் இருப்பதை உடைத்து பேசிவிடுவார். அடுத்தவர்கள் மனம் புண்படுமே என்று நினைத்து பார்க்க மாட்டார். ஆனால், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று தினமும் நினைப்பவர்.

அப்பா என்னை இரண்டு கையால் தூக்கி என்னோடு சேர்ந்து சுற்றி கீழே விடுவார். அவர் என்னை கீழே விட்டதும் இந்த உலகமே என்னை சுற்றுவது போல் இருக்கும். இதுவும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அம்மா அப்பா என்னை தூக்கி சுத்தும் போது திட்டுவாள். ஆனால், அப்பா பதிலுக்கு அம்மாவை திட்டி நான் பார்த்தில்லை.அம்மாவே கோபப்பட்டாலும் அப்பா பொறுமையுடன் இருப்பார். அப்பா முகம் கோபம் வந்தால் எப்படி இருக்கும் என்று நான் பார்த்ததேயில்லை.

நான் எது கேட்டாலும் அப்பா வாங்கி கொடுத்துவிடுவார். அப்படி அவர் மறுத்தால் பிடிவாதம் பிடித்து சுவரில் முட்டிக் கொள்வேன். நான் அப்படி செய்ய கூடாது என்பதற்காகவே கேட்பதை எல்லாம் வாங்கி தருவார்.

அப்பா வீட்டில் தேவையில்லாத காகிதங்களை கசக்கி உருண்டை செய்து, அதன் மேல் வெட்டிய பழைய சைக்கிள் ட்யூப்பை வைத்து பந்து செய்து கொடுப்பார். அந்த பந்தில் தான் நான் நண்பர்களோடு விளையாடுவேன். எவ்வளவு வேகமாக அந்த பந்து மேலே பட்டாலும் வலிக்காது. எனக்கு அடிப்பக்கூடாது என்பதற்காக அப்பா பொறுமையாக பந்து செய்துக் கொடுப்பார்.

எங்கள் வீடு சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள அம்மன் கோயில் அருகில் இருந்தது. மாதம் ஐந்து ரூபாய் வாடகை. அப்பாவுக்கு ஐபது ரூபாய் சம்பளம்.

" இந்திரா... இந்திரா... பையன் பள்ளிக்கூடத்துக்கு கிளம்பிட்டானா...." என்று பரபரப்புடன் என் அப்பாவின் குரல்.

" இதோ வந்துட்டே இருக்கான்..." என் கை பிடித்து அம்மா அழைத்து வந்தாள்.

என்னை தாமரை பூ போல் சுமப்பது போல் சுமந்து மெதுவாக சைக்கிள் முன் அப்பா அமர வைத்தார். என் அப்பா சைக்கிள் பின்புறம் அம்மா அமர்ந்தப்படி வந்தார். சிதம்பரம் நடராஜர் கோயில் வழியாக தான் செல்வோம். அப்பா வண்டியை நிருத்தி விட்டு வெளியே இருந்தப்படி வணங்கி பிறகு தான் செல்வார். பல முறை அப்பா வெளியே இருந்து தான் வணங்கி இருக்கிறார். ஒரு முறை கூட என்னையும், அம்மாவையும் உள்ளே அழைத்து சென்றதில்லை. அவர் உள்ளே போகாததற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை.

மூச்சு இறைக்க இறைக்க அப்பா வண்டி ஓட்டிக் கொண்டு வந்தார். அப்பாவின் கஷ்டத்தை உணர்ந்த அம்மா வீட்டுக்கு வேண்டிய காய்கறி எல்லாம் வாங்குவதற்கு கொஞ்ச தூரத்தில் இறங்கி, நடந்து செல்லுவதாக கூறினார். அப்பாவும் சிரித்தப்படி அம்மாவை இறக்கிவிட்டார்.

"பார்த்து வீட்டுக்கு போம்மா..." என்று அன்புடன் அம்மாவிடம் கூறினார்.

" சரிங்க...." என்றாள். அப்பாவும், அம்மாவும் இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

அம்மா இறங்கியவுடன் அப்பாவுக்கு பெரிய பலமே வந்துவிட்டது. அப்பா சைக்கிளை வேகமாக மிதித்தார். அவர் வேகமாக செல்ல செல்ல எனக்கு சந்தோஷமாக இருந்தது. என் முகத்தில் சந்தோஷத்தை பார்த்த அப்பா இன்னும் வேகமாக ஓட்டினார். மேடு, பல்லங்களில் வண்டி செல்லும் எனக்கு வலித்தாலும் வேகம் ரொம்பவும் பிடித்திருந்தது. அவரின் வேகம் முன்னே இருந்த பெரிய பல்லத்தை பார்க்கவில்லை. சைக்கிள் சற்று நிலை தடுமாறியது. நான் முன் பக்கம் விழுவது போல் இருந்தேன். ஆனால், அப்பா என்னை தாங்கி பிடித்துக் கொண்டு விழுந்ததால் நான் அவர் மேல் விழுந்தேன்.

எனக்கு கையில் பலமான காயம் பட்டது. நாங்கள் விழுவதை பார்த்தும் இனிப்பை பார்த்த எறும்பு போல் எங்களை சுற்றி கூட்டம் கூடியது.

"பாவம் ! சின்ன பையன்"

"எதுக்கு சைக்கிள வேகம ஓட்டனும். இப்படி அடிப்படனும்..."

"யாராவது போய் உதவுங்கப்பா...?"

இப்படி பலர் பேசுவது என் காதில் கேட்டது. எல்லோரும் பேசுவதும், வேடிக்கை பார்ப்பதுமாக தான் இருந்தனர். அப்பாவை தட்டி தட்டி எழுப்பினேன். அவர் எழவில்லை. அப்போது தான் கவனித்தேன். விழும் போது அவர் தலையில் பின் மண்டை கல்லில் அடிப்பட்டிருக்கிறது. எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நான் அழுதுக் கொண்டு அப்பாவை எழுப்ப பார்த்தேன். அவர் வீட்டில் தூங்குவது போல் அமைதியாக மயங்கி கிடந்தார்.

"பாவம் இரத்தம் எவ்வளவு போகுது பாரு...." என்று அப்பாவை தூக்கி சென்றவர் பரிதாபமாக சொன்னார்.

மருத்துவமனைக்கு சென்றதும், எனக்கு மருந்து கொடுத்து சிகிச்சை பார்த்தனர். அப்பாவுக்கு எதுவும் அவர்கள் செய்யவில்லை. எனக்கு பயமாக இருந்தது.

கொஞ்சம் நேரத்தில் கண்ணில் நீர் தழும்ப அம்மா என்னை நோக்கி வருதைவதை பார்த்தேன். என்னை வாரிக்கட்டி அணைத்துக் கொண்டார். உள்ளே அழைத்து சென்ற என் தந்தை வெளியே எடுத்து வந்தனர். அம்மா தன் தலை அப்பா மீது மோதி மோதி இடித்துக் கொண்டு அழுதார்.

அம்மா கத்தியப்படி "இனிமே நமக்கு யாரு இருக்கா..." என்ற சொன்னபோது தான் எனக்கு தெரிந்தது அப்பா விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டார் என்று !

என் வாழ்க்கையையில் நான் பார்த்த முதல் மரணம் என் அப்பாவுடையது. மூக்கை பஞ்சால் அடைத்து, கை, கால் இரண்டையும் சிறு வெள்ளை துணியால் கட்டி, காதுகளை சுற்று துணியால் மூடி..... இப்படி என் அப்பாவை படுக்க வைத்தனர். அம்மா அழுகையை என்னால் போக்க முடியவில்லை.

இறப்பு என்றால் என்னவென்று தெரியாத வயது. அப்பா எழுப்ப பல முறை தட்டினேன். எனக்கு காகிதத்தில் பந்து செய்து தர சொன்னேன். எதுவும் அவர் காதில் விழவில்லை.

இனி எங்கள் வாழ்வு அவ்வளவு தான் என்ற பயம் அம்மாவை தொற்றிக் கொண்டது.

" கவலப்படாதம்மா.... உனக்கு நான் இருக்கேன்..." ஒரு குரல் கேட்டது.

வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி போட்டுக் கொண்டு ஒருவர் அம்மா அருகே நின்றார். தலையில் இரண்டு மூன்று வெள்ளை மூடி தெரிந்தால், பார்ப்பதற்கு கொஞ்ச இளமையாக தான் தெரிந்தார். இவரை எங்கோ பார்த்தது போல் இருந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails