வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, May 2, 2012

துளித்துளி நிலா : மன்னை பாசந்தி




பல கவிதைகள் இன்று சிஸரசிங் முறையிலே பிறக்கிறது. மேடையில் கவிதை வாசிக்க வேண்டும், வார மாத இதழ்கள் கொடுக்கும் தலைப்பில் எழுத வேண்டும் என்று தங்களை தாங்களே கட்டாயப்படுத்தி செயற்கை தனமாக கவிதை பிரசவித்து வருகின்றன. இயற்கையாக தங்களுக்குள் இருக்கும் கவிதையையும், அதற்காக வர வேண்டிய உணர்வையும் வருவதில்லை. மருந்துகள் எதுவும் இல்லாமல் வலியுடன் நரம்புகள் பின்னி பெடலெடுத்து சுப பிரசவத்தில் பிறக்கும் குழந்தைப் போல் ஒரு சில கவிதைகள் நம் வாழ்வோடு ஒட்டிக் கொள்கிறது. மன்னை பாசந்தி கவிதைகளும் அப்படிதான்.

செயற்கை தனமாக எழுத வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. அவர் எழுதிய ‘துளித்துளி நிலா’ சுப பிரசவக் குழந்தை போல தான். அதற்கு பின்னால் எவ்வளவோ வேதனை, வலி, தேடல் இருந்ததால் தான் அவருடைய நம் மனதில் ஒட்டிக் கொள்கிறது.


சொர்க்கம்
தெரிந்தது
மழலைச் சிரிப்பு

என்று குழந்தைகள் பற்றின தனது ஹைக்கூ தொகுப்பு நூலை தொடங்குகிறார்.

பல பக்கங்கள் உலக சம்பவங்களை பதிவு செய்யும் கவிதகள் நடுவில், மூன்று வரிகளில் உலகத்தை கேள்வி கேட்பது ஹைக்கூ கவிதைகள். இதோ மன்னை பாசந்தி நம் அரசுக்கு எதிராக கேட்கும் ஹைக்கூ கேள்விகள்.

உலகில் முதலிடம் இந்தியா
ஆனாலும் தலைக் குனிவு
ஊழல் !


*


கள் குடிக்காதீர்
கள்ளத்தனமாய் குடிக்காதீர்
தெருவெங்கும் டாஸ்மார்க்


*


அரசியல்வாதிகளின் சண்டை
அலறுகிறது
சமச்சீர் கல்வி


இவரின் கோபத்திற்கு கடவுள் கூட தப்பவில்லை.

கடவுளின் படைப்பில்
கலப்படம்
திருநங்கை.


நேரடியாக கருத்து சொல்லும் கவிதைகளை விட நகைச்சுவையாக இருக்கும் கவிதை மிக ஆபத்தாக இருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் உண்மையை உறைக்க வைக்கிறார்.


செல்லும் போச்சு
உயிரும் போச்சு
செல்போன் பேச்சு


*


நேரம் தவறாத
இல்லதரசிகள்
தொலைக்காட்சி தொடர்


ஹைக்கூ கவிதைகள் வார்த்தைகளை நம்பி இருப்பதில்லை. வார்த்தைகளற்ற மௌனமே கூட ஒரு நல்ல ஹைக்கூ தான்.

இரண்டு வரி இதழோடு மூன்றாவது வரி முத்தம் சேர்வது ஹைக்கூ. இரண்டு கையில் தவழ்ந்து வரும் குழந்தை மூன்றவதாக தந்தையின் விரலைப் பிடிப்பது ஹைக்கூ. இந்த இரண்டு பக்க விமர்சனங்களை படித்து விட்டு மூன்றவதாக மன்னை பாசந்தி நூலை வாங்கி படிப்பது ஹைக்கூ தான்.

நம்மை சுற்றி ஹைக்கூக்கள் நிறைந்து இருக்கின்றன. அதை கவனித்து பார்த்து தோண்டி எடுத்தால், ‘துளித்துளி நிலா’ ஹைக்கூ நூல் போல் எழுதலாம். கவனிக்காமல் போனால் இயந்திரங்களோடு இயந்திரமாக வாழலாம்.

***

நூல் விபரம் :
துளித்துளி நிலா
மன்னை பாசந்தி
பக்.32, விலை : ரூ.15/-
மின்னல் கலைக்கூடம் வெளியீடு
117, எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட், சென்னை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails