வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 22, 2013

RAW (4) : மாலத்தீவு ஆக்கிரமிப்பு

“நம் கொள்கை என்ன ? செய்துக் கொண்டு இருக்கும் காரியம் என்ன ?” 

 எதற்காக இந்த விஷப்பரிட்சையில் இறங்க வேண்டும் ? 

யாரை நம்பி ஒரு தீவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இவர் இறங்குகிறார். 

தீவை ஆக்கிரமிப்பு செய்தால், நாளை உலகம் நம் போராட்டத்தைப் பற்றி தவறாக பேசுமே ! இவர்களுக்கு ஆளும் ஆசையில் தான் போராட்ட குழு நடத்துகிறார்கள் என்று எல்லா பத்திரிக்கைகளும் எழுதுமே ! 

இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை மற்ற நாடுகள், தீவுக்கு ஆதரவாக வந்தால் நம்மால் சமாளிக்க முடியுமா ? 

- இப்படி பல கேள்விகள், விவாதங்கள் அந்தப் போராட்ட குழுக்களுக்குள் நடைப்பெற்றது. என்ன கேள்வி கேட்டாலும், யார் கேட்டாலும் மாலத்தீவின் ஆட்சியை கவிழ்த்து, ஆக்கிரமிக்கப் போவதில் உறுதியாக இருந்தார் உமா மகேஸ்வரன்.

உமா மகேஸ்வரன் ? எங்கோ ஈழப் போராட்டத்தில் கேள்விப்பட்ட பெயர் தெரிகிறதா ? சந்தேகம் வேண்டாம். புளோட் (PLOTE) போராட்டக் குழுவின் தலைவன் உமா மகேஸ்வரன் தான் மாலத்தீவில் கலகம் செய்து, ஆக்கிரமிக்க நினைத்தார்.

இலங்கை அரசுக்கு எதிராக போராட வேண்டிய ஈழப்போராளிகள் ஒரு தீவை ஆக்கிரமிக்க திட்டமிட்டது முரணாக தெரியலாம். தங்களை இரண்டாம் தர குடிமகன்களாக நடத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி, விடுதலைப் புலிகளிடம் இருந்து பிரிந்து, தனக்கென்று தனியாக ஒரு போராட்டக் குழுவை உருவாக்கியவர் தான் உமா மகேஸ்வரன். சிங்களர்களிடம் இருந்து தமிழ் மக்களை காப்பாற்ற நினைக்கும் தலைவன், எப்படி ஒரு தன்னாட்சி புரியும் தீவை ஆக்கிரமிக்க நினைக்கிறார் என்று அவர் கூட்டத்தில் இருப்பவர்களே கேள்வி கேட்டனர்.

மாலத்தீவை ஆக்கிரமித்தால், தங்கள் போராட்டம் உலகளவில் பேசப்படும், மற்ற நாடுகளின் நட்பு கிடைக்கும், தங்கள் ஆயுதங்களை சேகரித்து வைக்க தளமாக இருக்கும் என்று திடமாக நம்பினார் உமா மகேஸ்வரன்.

தங்கள் உரிமைக்காக தங்கள் எல்லைக்குள் தாக்குதல் நடத்தும் வரை தான் அவர்கள் போராளிகள். தங்களுக்கு சம்மந்தமே இல்லாத ஒரு இடத்தில், எல்லை தாண்டி தாக்குதல் நடத்தினால், அது தீவிரவாதம் என்று தான் சொல்வார்கள். உரிமைக்காக போராடுகிறோம் என்று சொன்னால் யார் நம்புவார்கள். இந்த உண்மை உமா மகேஸ்வரனுக்கு புரிந்ததா ? இல்லை அவருக்கு பின் பக்கத்தில் இருந்து ஆட்டி வைத்தவர்களுக்கு தெரிந்ததா ? என்று தெரியாது. மாலத்தீவில் ஆட்சி செய்தும் அப்துல் கயூம் கவிழ்க்க வேண்டும். அது தான் முடிவு என்றார்.

மாலத்தீவு. இலங்கைக்கு அருகில் இருக்கும் தீவு. இந்தியாவுடன் அதிக நெருக்கமில்லாத, பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கும் அப்துல் கயூம் ஆட்சி செய்கிறார். ஏற்கனவே, ஆட்சி செய்தவர்களை கவிழ்த்து, விரட்டி அடித்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையே வைத்து ஆட்சியை கவிழ்த்து விடலாம் என்று நினைத்தார் உமா மகேஸ்வரன்.

ஐ.பி.கே.எப் கண்காணிப்பில் இருந்து எப்படி கப்பலில் ஏறுவது ? இந்திய கடல் வழியாக தான் மாலத்தீவுக்கு செல்ல வேண்டும். இந்திய இராணுவம் நம்மை தாக்கினால் என்ன செய்வது ? உமா மகேஸ்வரனின் திட்டம் புளோட் குழுவுக்கே பைத்தியக்காரத்தனமாக தான் தெரிந்தது.

 “வழியில் எந்த பிரச்சனை வராது. நமக்கு உதவ பல நண்பர்கள் இருக்கிறார்கள். நம் போராட்டத்திற்கு ஒரு தனி தளம் வேண்டும். அதற்கு மாலத்தீவு தான் சரி. அதை அடைந்துவிட்டால், பிறகு இலங்கை அரசை ஆட்டிப்படைக்கவும், மற்ற நாடுகளின் உதவிக் கோரவும் வசதியாக இருக்கும்” என்றார்.

எந்த நம்பிக்கையில் உமா மகேஸ்வரன் இப்படி செய்கிறார் என்று கொஞ்சம் வியப்பாக தான் இருந்தது. ஆனால், உமா மகேஸ்வரன் சொல்லுவதுப் போல் நடந்துவிட்டால் மாலத்தீவில் இருந்தப்படி இலங்கை அரசுக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நினைத்தார்கள்.

1988 நவம்பர் 2… ‘அல் அகமத்’ என்ற போலிப் பெயர் கொண்ட கப்பலில், ப்ளோட் போராளிகள் ஆயுதங்களுடன் பிரயாணம் செய்தனர். வழியில் எந்த ஆபத்தும் இல்லை. தாக்குதல் நடத்த வழி வகுத்து தருவது போலவே சிறு பிரச்சனை இல்லாமல் மாலத்தீவை அடைந்தனர். அமைதியான சுற்றுலா பயணிகள் போலவே மாலத்தீவில் மேல் நகரத்துக்குள் நுழைந்தனர். இதற்கு முன், சுற்றுலா பயணிகள் போலவே சிலர் அங்கு இருந்ததால், அவர்களின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை விரைவாக நடந்தது.

வானொலி, விமான நிலையம் , தொலைக்காட்சி, அரசு கட்டிடங்கள் என்று ஒன்றன் பின் ஒன்றாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். முழுத் தீவும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டோம் என்று நினைத்த நேரத்தில் தான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. அதிபர் கயூம் அதிபர் மாளிகையில் இல்லை. அவரைக் கைது செய்யாமல் இந்தப் ஆக்கிரமிப்பு வெற்றி முழுமைப் பெறாது. அடுத்து எதைத் தாக்குவது என்ற குழப்பத்தில் வேறு இருந்தனர். அவர்களின் குழப்பம் தீருவதற்குள், அதிபர் கயூம் தான் தங்கியிருந்த இடத்தில் இருந்தே வானொலியில் சர்வதேச உதவிக் கேட்டார்.

உதவிக்கு அவர்களின் நட்பு நாடான பாகிஸ்தான் வரும் என்று நினைத்த அதிபருக்கு, இந்தியாவிடம் இருந்து உதவி கிடைத்தது. ரா உதவியுடன் 2000 பேர் கொண்ட இந்திய விமான வீரர்கள், கப்பல் படையினர்கள் மாலத்தீவுக்கு அனுப்பினார். 12 மணி நேரத்திற்குள், விமான நிலையம், வானொலி என்று போராட்டக்காரர்களிடம் இருந்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அதிபர் கயூம் மீட்கப்பட்டார். இந்தியாவின் இந்த மீட்பு பணிக்கு ‘ஆப்ரேஷன் காக்டஸ் (Operation Cactus) என்ற பெயரிட்டனர்.



இலங்கைக்காக விடுதலைப் புலிகள், புளோட் போன்ற போராட்ட அமைப்புகளைப் பற்றிய தகவல் சேகரித்து வைத்திருந்ததால், இந்திய இராணுவத்திற்கு ரா தகவல் கொடுப்பதில் பெரிய சிக்கல் இருக்கவில்லை. ரா உளவு அமைப்பின் உதவியில்லை என்றால், இவ்வளவு விரைவில் ஆக்கிரமிப்புக் ரர்களை இந்தியப்படையால் வெளியேற்றியிருக்க முடியாது.

உமா மகேஸ்வரனின் இந்த தாக்குதலுக்கு பின் புலமாக இருந்தது முன்னாள் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் நசீர் என்று அப்துல் கயூம் கூறினார். ( இரண்டு வருடத்திற்கு பிறகு, நசீர் மீது குற்றம் சுமத்தியற்கு வருத்தம் தெரிவித்தார்.)

இந்த தாக்குதலில் உமா மகேஸ்வரனுக்கு உதவியாக இலங்கையில் வசிக்கும் ‘அப்துல்லா’ என்ற மாலத்தீவு வியாபாரி பணமும், ஆயுதமும் கொடுத்ததாக கண்டறியப்பட்டது. 1988ல் 8.2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்து வந்த மாலத்தீவு 1989ல் 5.8 மில்லியனாக குறைத்துக் கொண்டது. அதுமட்டுமில்லாமல், இந்திய – மாலத்தீவு உறவு வலுவடைந்தது.

 “ நட்பு நாடுக்கு உதவக் கூடிய நல்ல வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது” என்று இராஜீவ் காந்தி பேசினார். ஆனால், மேலை நாட்டு ஊடகங்கள் இந்தியாவின் தலையீட்டை வேறு விதமாக விமர்சித்தது.

“ ஐ.பி.கே.எப் கண்காணிப்பில் இருக்கும் இலங்கையில் இருந்து எப்படி கலகக்காரர்கள் வெளியே வந்தார்கள். இந்தியாவுக்கு தெரியாமல் இவர்கள் வந்திருக்க முடியாது” என்றனர். மேலும், கலகக்காரர்கள் இந்தியாவுக்கு தெரியாமல் இந்திய கடல் பகுதி வழியாக எப்படி வந்திருக்க முடியும் ? என்று கேட்டனர். ரா உதவியுடன் தான் உமா மகேஸ்வரன் மாலத்தீவை ஆக்கிரமிக்க திட்டமிட்டார் போன்ற குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

“தெற்கு ஆசியாவின் தங்கள் கை ஓங்கியிருக்க இந்தியா நடத்திய சதியே “ என்றார்கள்.

இன்று வரை, கேள்விகளுக்கு இந்தியா மறுத்ததே தவிர அவர்கள் கேள்விக்கு இந்திய அரசோ, ரா உளவு நிறுவனமோ பதில் அளிக்கவில்லை.

ரா உளவு அமைப்பு தூண்டுதலால் உமா மகேஸ்வரன் மாலத்தீவு ஆக்கிரமிக்க நினைத்தாரோ அல்லது வேறு ஒருவர் தூண்டுதலில் உமா மேஸ்வரன் ஆக்கிரமிக்க நினைத்தாரோ என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. பின்னாளில், உமா மகேஸ்வரன் கொல்லப்பட்டப் போது விடுதலைப்புலிகள் உமாவை இந்தியாவின் கைக் கூலி என்று குற்றம் கூறியதும், மாலத்தீவின் ஆக்கிரமிப்பின் சந்தேகத்தை மேலும் வலுவூட்டியது. ரா தான் உமா மகேஸ்வரனை கொன்றது என்ற இன்னொரு சர்ச்சையும் உண்டு.

உளவுத்துறையில் எல்லாம் மர்மமான விஷயம். எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியாது. எல்லா யூகங்களுக்கும் உளவுத்துறை பதில் அளிக்காது. அதன் செயல்பாடு எப்போதுமே மர்மமாக இருக்கும்.

எது எப்படி இருந்தலும் இந்திய – மாலத்தீவு உறவு மலர்ந்ததற்கு ராவின் பங்கு மிக முக்கியம். அந்த அளவில் ரா உளவு நிறுவனத்திற்கு Operation Cactus மிக பெரிய வெற்றி என்பது குறிப்பிட தக்கது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails