வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, September 24, 2013

நேதாஜி உயிரோடு இருக்கிறார் !!

”நேதாஜி உயிரோடு இருக்கிறார்” என்று கல்கத்தாவில் இவர் பேசிவிட்டு சென்றுவிட்டார். ஆனால், நேருவுக்கு எவ்வளவு பெரிய தலைவலியாக இருந்திருக்கும் பேசியவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

நேதாஜி உயிருடன் இருப்பதை நேருவுக்கு தெரிந்திந்தும் அமைதியாக இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்களில் விமர்சனம் எழுந்தது. இரண்டாம் உலகப் போரின் குற்றவாளியான நேதாஜியை நேரு மறைக்கிறாரா என்ற சந்தேகம் உலக நாடுகளுக்கு வந்தால் இந்தியாவின் பெயர் கெட்டுவிடும் என்று நேரு பயந்தார். நேதாஜியின் அபிமானிகள் நேதாஜி உயிருடன் தான் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள். ‘இவர்’ பேசிய பேச்சு இன்னும் பரப்பரப்பு ஏற்படுத்தியது.

காரணம், ஒரு பொது கூட்டத்தில் “நேதாஜி பத்திரமாக இருக்கிறார். சீனா, திபெத் எல்லையோரமாக இருக்கிற சிக்காங் என்ற இடத்தில் இருக்கிறார். அவரைத் தேடித்தான் நான் போனேன். அவரை நேரடியாகச் சந்தித்தேன்” என்று பேசியிருந்தார். நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கை இன்னும் மேலும் வலுவடைந்தது.

நேரு நேதாஜி மரணத்தை பற்றிய செய்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்தார். அதனால், ஷா நவாஸ்கான் என்பவரின் தலைமையில் நேதாஜி மரணத்தை பற்றி விசாரிக்க ஒரு கமிஷனை அமைத்தார். அந்த கமிஷனில் அந்தமான் ஹை கமிஷனராக இருந்த மொய்தார, நேதாஜியின் மூத்த சகோதரர் சுரேஷ் சந்திரபோஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

கமிஷன் அமைத்ததும் முதன் முதலில் அழைத்தது ‘இவரை’ தான். அவரும் வந்தார்.

“நேதாஜி அவர்கள் உயிருடன் இருக்கிறாரா என்ற செய்தியை விசாரிக்க உங்களை அழைத்தோம்.”

“நேதாஜி பற்றிய உண்மையை அவ்வளவு எளிதில் உங்களால் வெளியே கொண்டு வர முடியாது. தற்போது பதவியிலிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணைக் கமிஷன் இருக்க வேண்டும். உலகம் முழுக்க எந்த இடத்துக்கும் வேண்டுமானாலும் போய் விசாரணை செய்யும் அதிகாரம் கமிஷனுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் தலையீடு இருக்கக் கூடாது,. அப்போதுதான் அது சாத்தியப்படும்”

இவர் கூறிய ஆலோசனை விசாரணை கமிஷன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

“அதைப் பற்றி எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நேதாஜியை பார்த்ததாக சொல்கிறீர்களே ! அவர் எங்கு இருக்கிறார் ? “ என்று கேட்டனர்.

அதற்கு அவர், “இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அமெரிக்க அரசு அறிவித்த போர் குற்றவாளி பட்டியலில் நேதாஜி பெயர் இருக்கிறதா ? அப்படி ஒரு வேளை அவர் பெயர் இருந்து, தலைமறைவாக இருக்கும் நேதாஜி, இந்தியாவுக்கு வந்தால் அவரை அந்த நாடுகளிடம் காப்பாற்ற இந்திய அரசு உறுதியாக இருக்குமா ?” என்று கேள்வி எழுப்பினார்.

”போர்க் குற்றவாளிகள் பட்டியல் பற்றி இந்த கமிஷனுக்குத் தெரியாது. இந்திய அரசின் சார்பாக கமிஷனால் எந்த உறுதிமொழியும் வழங்கும் அதிகாரமில்லை. ஒரு வார காலத்தில் பிரிட்டிஷ், அமெரிக்க அரசுகளிடம் விசாரித்து போர்க் குற்றவாளிப் பற்றிய பட்டியலை சொல்கிறோம்” என்று ஷா நவாஸ்கான் கூறினார்.

“ நல்லது. நீங்கள் கேட்டு சொல்லுங்கள். அதன் பிறகு எனது சாட்சியத்தைச் சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார்,

ஒரு வாரம் காலம் டெல்லியில் தங்கியிருந்தார். பிறகு, ஷா நவாஸ்கானே தொலைப்பேசியில் இவரை தொடர்பு கொண்டார்.

“நேதாஜியின் பெயர் உலகப் போர் குற்றவாளிகளின் பட்டியலில் இருக்கிறதா ? இல்லையா ? என்ற விவரத்தை அறிந்து கொள்ள முடியவில்லை.” என்றார்.

“அப்படி என்றால் என்னால் கமிஷனுக்கு முன்பாக சாட்சியம் அளிக்க முடியாது. மன்னிக்கவும்” என்று சொல்லி தொலைப்பேசி வைத்திவிட்டார்.

கமிஷனின் விசாரணைக்கு உதவவில்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த விஷயத்தை அப்படியே விடாமல் டெல்லி பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுத்தார்.

“நேதாஜி இறக்கவில்லை. உயிருடன் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருடன் இன்று வரை எனக்குத் தொடர்பு இருக்கிறது. இந்த விஷயத்தில் பிரதமருக்கு சந்தேகம் இருந்தால், அவரோ அல்லது அவருடைய பிரதிநிதியோ என்னுடன் வந்தால், நேதாஜி அவர்கள் இருக்கும் இடத்தை நான் அவரை அழைத்துப் போகிறேன்” என்றார்.

அடுத்த நாள் டெல்லி பத்திரிக்கைகளில் இவர் கொடுத்தப் பேட்டி தான் தலைப்பு செய்தியாக இருந்தது. “ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ என்ற ஆங்கில பத்திரிக்கை ‘இவருடைய’ புகைப்படத்தை போட்டு இந்த விஷயத்தை தலையங்கமாகவே எழுதினார்கள்.

” இவர் சொல்கிறபடி, நேரு ஒரு பிரதிநிதியை அனுப்பி, நேதாஜியைப் பற்றிய உண்மையை அறிந்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் நேதாஜி விஷயத்தில் நேருவுக்கு அக்கரையில்லை என்று மக்கள் நினைப்பார்கள்” என்று எழுதியிருந்தனர்.

முற்றுப் புள்ளி வைக்க நினைத்த விஷயத்திற்கு தொடர்கதை போல் தொடர்வது நேருவுக்கு பிடிக்கவில்லை. அதே சமயம், நேருவோ கமிஷனோ இவருடன் எந்த பிரநிதியையும் அனுப்பவில்லை. மற்ற சாட்சிகளை விசாரித்து கமிஷன் அறிக்கையை நேருவிடம் கொடுத்தனர்.

“நேதாஜி இறந்தது உண்மைதான்” என்ற அறிக்கையை பார்லிமெண்ட்டில் வைத்து நேரு நிறைவேற்றினார்.

நேதாஜி விவகாரம் அத்தோடு முடியவில்லை. இந்திர காந்தி பிரதமரானதும் இந்த விவகாரம் பூதமாக கிளம்பியது. “நவாஸ்கான் கமிஷன் அறிக்கை நம்ப முடியாத ஒன்று. பிரதமர் மீண்டும் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்” என்று 250 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து போட்டு கொடுத்தனர்.

1971ல் இந்திரா காந்தி கோஸ்வா கமிஷனை நியமித்தார். அப்போது முக்கிய சாட்சியாக அழைக்கப்பட்ட ’இவர்’ உயிருடன் இல்லை. இவர் கூறிய இருந்த சீனா, திபெத் என்று போகாமல் உள்ளூரில் இருந்தவர்களை விசாரித்து “நேதாஜி இறந்தது உண்மை’ என்ற அறிக்கையை சமர்பித்தனர். ஒரு வேளை இரண்டாம் உலகப் போரில் நேதாஜி தப்பித்து உயிருடன் இருந்தாலும் 1971 வாக்கில் முதுமைக்காரணமாக இறந்திருந்திருக்கலாம்.

இறந்ததாக நம்பப்பட்ட நேதாஜிப் பற்றியை விசாரணை நடத்த இவருடைய பேச்சு இருந்திருக்கிறது. முருகன் பக்தாரான இவர் பெரியாருடன் மேடையில் அரசியல் பிரச்சாரம் செய்திருக்கிறார். கட்சி தலைவராகவும் இருந்திருக்கிறார். நேதாஜி மீது கொண்ட அபிமானத்தில் ‘நேதாஜி’ என்ற பத்திரிக்கை தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். சட்டசபை தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் ஒரே சமயத்தில் வென்றுயிருக்கிறார்.

இன்று இவரை ஜாதி தலைவராக மாற்ற நினைத்தவர்களின் முயற்சிகள் தோல்வி அடைந்து தமிழகத்தின் தலைவராக இருக்கிறார். இன்றைய தேதி வரை அவரை நினைவுகூராமல் தமிழகத்தில் அரசியல் நடத்தமுடியாது .



அபாரமான பேச்சு திறமை, தெய்வ பக்தி, மக்கள் மீதான அக்கரை என்று பொன் போல் ஜோலிச்சவர். அவர் தான் பசும்பொம் முத்துராமலிங்க தேவர் அவர்கள்.

Friday, September 20, 2013

இயக்குனர் ராம் அவர்களுக்கு ஓர் கடிதம்

அன்புக்கினிய இயக்குனர் ராம் அவர்களுக்கு,

ஒரு படத்தின் வெற்றியை வருவாய் நிர்ணயம் செய்யும் சூழலில் காலத்தால் நினைவில் வைத்திருக்கக் கூடிய படைப்பை தந்துள்ளீர்கள். உங்களுக்கு என் ஆயிரம் பாராட்டுக்கள் !!

"தங்க மீன்கள்" படத்தை பார்த்ததும் என் வீட்டில் ஒரு செல்லம்மா இல்லையே என்ற வருத்தம் வந்தது. கல்யாணி மகள் மீது வைத்திருக்கும் பாசத்தை போல் நான் என் மகன் மீது வைத்திருக்கிறேனா என்ற சுய கேள்வி கேட்க வைத்தது. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனாராக உங்களுக்கு ஒரு இடம் இருக்கிறது என்பதில் சிறியதளவும் சந்தேகமில்லை.

உங்களின் முந்தைய படமான "கற்றது தமிழ்", தற்போதிய " தங்க மீன்கள் " படங்களில் நீங்கள் சொல்ல வந்த கருத்தில் ஒரு சிலவற்றை ஏற்றுக் கொண்டாலும், உங்கள் கருத்துக்கான திரைக்கதையா என்பதில் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

கற்றது தமிழ் 

ஒரே வயதில் இருக்கும் இரண்டு இளைஞர்கள். ஒருவன் மாதம் லட்ச ரூபாய் சம்பளம் வாங்குகிறான். இன்னொருவன் மாதம் நாலாயிரம் சம்பாதிக்கிறான். ஒரு பக்கத்தில் மட்டும் வளர்ச்சியில் கவனம் செலுத்தி, இன்னொரு பக்கத்தை உதாசினப்படுத்தினால் அது வீக்கமாக இருக்குமே தவிர வளர்ச்சியாக இருக்காது என்ற கருத்தை சொல்ல வந்திருப்பது புரிந்தது.

ஆனால், படத்தில் உங்கள் கருத்துக்கான காட்சிகளை இரண்டு, மூன்று வைத்து விட்டு, பிரபாகரனின் கொலைகள், மன வேதனை, விரக்தியை தான் அதிகம் காட்டியிருக்கிறீர்கள். சமூகத்தால் ஒருவன் பாதிக்கப்படுவதை நீங்கள் காட்டும் போது, அந்த ஒருவன் மட்டும் அதிக முன் நிறுத்தப்படுகிறான். அந்த சமூகம் தெரியவில்லை. படம் முடிந்து பார்வையாளன் சமூகத்தை பற்றிய கேள்வியை சுமப்பதற்கு பதிலாக, பிரபாகரன் என்ற மனநிலை பாதிக்கப்பட்டவனின் கதையாக பலர் எடுத்துக் கொண்டார்கள்.

தங்க மீன்கள் 

தனியார் கல்வி குழந்தைகளை குழந்தைகளாக இருக்கவிடுவதில்லை. குழந்தைக்கு எது ஆர்வமோ அதில் அவர்களை ஊக்கப்படுத்துவதில்லை. மதிப்பெண் எடுக்கும் இயந்திரமாக மாற்றி வருகிறார்கள். மதிப்பெண்கள் வைத்து அவர்களின் அறிவுத் திறமையை அளவிடுகிறார்கள். நீங்கள் சொல்ல வந்த கருத்து புரிந்தது.

ஆனால், பார்வையாளன் தனியார் பள்ளியில் இருக்கும் கல்வி முறையையோ அல்லது பண சுரண்டலோ சுமந்து செல்லவில்லை. மகளுக்காக வேறு மாநிலம் சென்று வேலை பார்க்கும் கல்யாணி, தந்தைக்கு தொந்தரவு தரக்கூடாது என்று திருடும் செல்லம்மா இருவருக்கும் இருக்கும் பாசத்தை சுமந்து செல்கிறார்கள். அப்பாக்களை இழந்த மகள்களும், புகுந்த வீட்டுக்கு சென்ற மகளை நினைக்கும் அப்பாக்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள். பிரிந்த உறவை நினைத்து பார்த்திருப்பார்கள்.அதே சமயம் கல்வித்துறையை பற்றிய உங்கள் கருத்து மறந்துப் போய்யிருப்பார்கள்.

உங்கள் கருத்துக்கான காட்சி படத்தில் இருந்தும், கதாபாத்திரங்கள் கருத்தை மறைத்து விடுகிறது அல்லது மறக்க வைக்கிறது. கருத்துக்களுக்கான அதிக காட்சிகள் வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டாம். ஆனால், உங்கள் கருத்தை மறக்க வைக்கும் அளவிற்கு காட்சிகள் இருக்க வேண்டாம் என்பது ஒரு பார்வையாளனான எனது விருப்பம்.

கோனார் நோட்ஸ் வைத்து படம் பார்பதற்கு, படம் பாடமல்ல... அது ஒரு வித்தியாசமான அனுபவம். அனுபவித்திருக்கிறேன். மற்றவர்களும் அனுபவித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல், எழுத்தாளராகவும் மின்ன வேண்டும் என்று விரும்புகிறேன்.

 வாழ்த்துக்களுடன் ஒரு சராசரி ரசிகன் ,
 குகன்

Thursday, September 12, 2013

வன்னி யுத்தம் - கடைசி நேரப் பயணம்

 ”ஈழம்”

இன்று வரை கனவு தேசமாகவே இருக்கிறது. உலக நாடுகளும் அதை கனவாகவே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. பணமோ, தங்கமோ இருக்கும் தேசமில்லை. ஆனால், இலங்கை பிரியக்கூடாது என்பதில் மட்டும் எல்லா நாடுகளும் ஒரே மாதிரியாக யோசிக்கிறது. ஆசிய நாடுகள் தங்கள் ஆயுதம் விற்க இலங்கையை நல்ல வியாபார தளமாக மாற்றிக் கொண்டது. அதில், இலங்கை அர்சு வெற்றிப் பெற்ற பிறகு, வேறு வியாபாரங்கள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

வன்னி யுத்தம் ஈழத்தை முன் வைத்து வந்த நூல் அல்ல... ஈழப் போராட்டத்தை பற்றின கடைசி நாட்களை பற்றியது. விடுதலைப் புலிகளை பற்றின விமர்சனங்கள், அலசல்கள் என்று சொல்லலாம். ஆனால், இதை எல்லாம் ஏற்றுக் கொண்டு, திருத்தி மீண்டும் போராட அவர்களால் முடியாது. 

ஈழப் போராட்டத்தை அங்கு இருக்கும் ஈழத் தமிழர்கள் எப்படி பார்த்தார்கள், போராட்டத்தில் அவர்களுக்குள் இருந்த வேறுபாடுகள் என்று பல விஷயங்கள் இந்த நூல் சொல்கிறது.



குறிப்பாக சில பகுதிகள்…..

“இந்த நூல் ஈழப் போராட்டம், விடுதலை, சுதந்திரம் போன்ற மந்திரச் சொற்கள் வறிய கூலிக் குடும்பங்களை சார்ந்த இளைஞர்களின் ஏற்படுத்திய தாக்கங்கள் மேட்டுக்குடி இளைஞர்களிடம் ஏற்படுத்தவில்லை ! அவர்கள் எப்போதும் மேட்டுக்குடியாகவும் அளும் வர்க்கமாக கருதிக் கொண்டார்கள் என்ற கருத்தை முன் வைக்கிறது.”

 அத்தியாயம் 6ல், மாமிச பொங்கல், பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொண்டாலும் சைவ வேளாளர், வன்னி மெட்டு குடியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசியல் விமர்சனங்களாக புலிகளுக்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்கள் இலங்கை இனவாத அரசுக்கு சாதகமாக அமைகிறது.”

தமிழ் தேசிய போராட்டங்களுக்கு சம்மந்தமான விமர்சனங்கள் கோட்பாடு ரீதியான தர்மங்களை மீற தாக்குதல்களாகவே இருக்கிறது. 

ஆரம்ப காலங்களில் சிறுவர் புலிகளில் இணைந்தார்கள். புலிகளும் ஏற்றுக் கொண்டார்கள். அதற்காக காரணத்தை பக், 59, அத்.9.

குழந்தை இராணுவம் பற்றி ஆரம்ப காலத்தில் புலிகளின் சிறுவர்கள் இருந்தார்கள். ஆனால், 18 வயது கீழ் புலிகளின் சேர்ப்பதில்லை என்று அவர்களுக்கு பின்பற்றினார்கள்.

வன்னியில் நல்லிரவில் ஒரு பெண் தனியாக நடக்கலாம். வேலையில்லா திண்டாட்டம் இல்லை, (பக்.52)

சிங்களவர்கள் தமிழர்கள் மீது எவ்வளவு வெறுப்புடன் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அத்தியாயம். 20ல் ஒரு பகுதி.

”காயத்துடன் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட சிங்கள வீரர்கள் யுத்த மரபுப்படி நன்றாக பார்த்துக் கொண்டார்கள். அந்த இராணுவ வீரனை அன்புடன் கவனித்துக்கு ஐயர் அவனிடம் ‘ ஒரு வேளை நான் உன் ஊருக்கு வந்தால், நீ உனக்கு என்ன தருவாய் ?” என்ற கேட்டதற்கு, “ நீ ஒரு தமிழன்; நீ என் ஊருக்கு வந்தால் உன்னை நான் சுடுவேன்’ என்று தனது வன்மத்துடன் பதில் சொன்னான். 

சகோதர இனத்தின் சோகங்களையும், கோரத்தனமாக மரணங்களையும், ஈழத்தின் அவலத்தையும் சிங்கள பட்டாசு சத்ததால் எவ்வளவு நாள் மறைக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

மனித நேயம் இறந்த மண்ணில் மனித உரிமையைப் பற்றி பேசப் போகும் காமன்வெல்த் மாநாடு….!!!

சிங்களர்கள் ஈழத்தில் நடத்தியது யுத்த வெறியல்ல, வர்த்தகத்தின் திமிர். காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது போல் தன் மீது இருக்கும் இனப்படுகொலை கரையை சிங்களவர்கள் துடைத்துவிடுவார்கள். வர்த்தக வாய்ப்பை பார்த்து வல்லரசு நாடுகளும் ஆதரவு தெரிவிக்க தொடங்கிவிடுவார்கள்.இறந்த தமிழர் உயிர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களாக இருக்கும்.

நூலை இணையத்தில் வாங்க.....

வன்னி யுத்தம்
ரூ.125. பக். 336
விகடன் பிரசுரம்

Friday, September 6, 2013

White Dog - 26 வருடங்கள் தடை செய்யப்பட்ட திரைப்படம்

தமிழ்நாட்டில், 'குற்றப்பத்திரிக்கை' திரைப்படம் அரசியல் காரணத்திற்காக தடை செய்தார்கள். 'விஸ்வரூபத்தை' மதத்தின் காரணமாக தடைச் செய்ய சொன்னார்கள். ’டாம் 999’ படத்தை தவறான கருத்தை கூறி, மக்களை அஞ்சக் கூடாது என்பதற்காக தடைச் செய்தனர். இன்னும், எத்தனையோ ஈழ தமிழர் அவலப்படங்கள் மக்கள் தெரிந்துக் கொள்ளமால் இருக்க தடைச் செய்யப்பட்டிருக்கிறது. அதேப் போல், அமெரிக்காவில் 'வெள்ளை நாய்' யை கறுப்பினத்தினர்களுக்கு எதிராக பயிற்சி அளிப்பதை தெரியாமல் இருக்க இந்த படத்தை தடை செய்திருக்கிறார்கள்.

காரில் செல்லும் போது ஜூலி என்ற நடிகை வெள்ளை நாய் மீது மோதிவிடுகிறாள். அந்த நாய்யை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வைத்தியம் பார்த்து, தன்னுடன் வைத்துக் கொள்கிறாள். அப்போது, அவள் வீட்டில் திருடன் நுழைய, அந்த வெள்ளை நாய் அவளை காப்பாற்ற, அந்த நாய் மீது அதிக பாசம் வைக்கிறாள். ஒரு நாள் அந்த வெள்ளை நாய் , நடு இரவில் சென்று ஒருவனை தாக்கி கொன்று விடுகிறது.



நாய் காணாமல் போனதாக நடிகை புகார் கொடுக்க, அந்த வீட்டை தேடி அதுவாக வந்து விடுகிறது. நாய்யை தன்னுடன் சினிமா ஷூட்டிங்க்கு அழைத்து செல்ல, அங்கு அவளுடன் நடிக்கும் நடிகையை தாக்குகிறது. அந்த ஜூலியின் காதலன் அவளிடம் அந்த நாய்க்கு எதோ கோளாறு இருக்கிறது, அதை கொன்று விட வேண்டும் என்கிறான். ஆனால், அவள் அவனிடம் இருந்து விலகி நாய்யை நாய் பயிற்சியாளரிடம் அழைத்து செல்கிறாள்.
பயிற்சியாளரான கருத்தரும் அந்த நாய்யை கொன்று விட சொல்கிறான். அங்கிருந்து கோபமாக ஜூலி நாய்யுடன் வெளியே வர, அப்போது அங்கு வேளை செய்பவனை தாக்குகிறது. அங்கு மிருகங்களுக்கு பயிற்சி அளிக்கும் கீஸ் என்ற கறுப்பர் “ இது வெள்ளை இன வெறி' நாய்” என்கிறான். ஆதாவது, கறுப்பர்களை மட்டும் தாக்க பயிற்சி அளிக்கப்பட்ட நாய்.

ஒரு நாய்யை குட்டியாக இருக்கும் போது, கறுப்பர்களை வைத்து அடிக்க வைத்து, கறுப்பர்கள் மீது வெறுப்பை வளர்த்து பய்ற்சி கொடுப்பார்கள். அந்த நாய் வளர்ந்ததும், கண்ணில் படும் கறுப்பர்களை தாக்கி சிறு வயதில் வாங்கிய அடியை பழி தீர்த்துக் கொள்ளும். இப்படி தான் ஒரு சாதான நாய்யை ‘வெள்ளை இன வெறி’ நாயாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை மாற்றுவது மிக கடினமான காரியம் என்று கீஸ் கூறுகிறான்.

ஆனால், ஜூலி தன் நாய்யை குணப்படுத்த எவ்வளவு பணம் செலவு செய்ய தயாராக இருப்பதாக கூறுகிறாள். நிற துவேஷமுள்ள நாய்யை மாற்றும் சவாலை விரும்பி ஏற்றுக் கொள்கிறான். மிருக விடுதியில் வைத்து அந்த நாய்க்கு பயிற்சி அளிக்கிறான். ஒரு நாள், அந்த நாய் மிருக விடுதியில் இருந்து தப்பித்து ஒருவனை கொன்று விடுகிறது. கீஸ் மயக்க உசிப்போட்டு அந்த வெள்ளை நாய்யை திரும்பி விடுதி கொண்டு வருகிறான். தனது தீராத முயற்சியால் நாய்யின் நிற துவேஷத்தை போக்குகிறான்.



ஜூலியை பாசமாக முத்தமிடுகிறது. ஆனால், வெள்ளை நிறத்தினரின் மீது வெறுப்பை வளர்த்துக் கொள்கிறது. கீஸில் பயிற்சியாளர் நண்பராக கருத்தரை தாக்க முயற்சிக்க, அந்த நாய்யை கீஸ் கொன்றுவிடுகிறான்.
கறுப்பர்களை தாக்கும் நாய்யின் தவறா ? அல்லது கறுப்பின மக்கள் மீது துவேஷத்தை வளர்த்த வெள்ளை நிற வெறியர்களின் தவறா ? என்ற நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். தவறு செய்தவர்கள் மனிதர்கள் தான்.இதில் இறந்தது மனிதனின் குப்பையை சுமந்த வெள்ளை நாய்.

உலகளவில் 1982ல் இந்த வெளிவந்தாலும், அமெரிக்காவில் வெள்ளை நிறத்தினற்கு எதிராக இருப்பதால் இந்தப் படம் தடை செய்ய பட்டது. அதிகாரப்பூர்வமாக டிசம்பர்,2008 ல் அமெரிக்காவில் இந்த படத்தில் டி.வி.டி கிடைக்க தொடங்கின. இருபத்தி ஆறு வருடங்களுக்கு மேல் ஒரு திரைப்படத்தை வல்லரசு அமெரிக்கா தடை செய்கிறது என்றால், இந்தியா இதில் பின்னோக்கி இருப்பதில் பெரிய ஆச்சரியமில்லை.

விஸ்வரூபத்தின் தடையை எதிர்த்தவர்கள், ஏன் மெட்ராஸ் கபே, தலைவா படத்தின் தடையை ஏன் எதிர்க்கவில்லை என்று பல கேள்விகள் வருகிறது. ‘விஸ்வரூபத்தின் தடை மதத்தின் அடிப்படையில் தடை செய்யப்பட்டது. மெட்ராஸ் கபே, தலைவா படங்களுக்கு தடை செய்யப்பட்டது அரசியல் காரணங்களுக்காக....!!

இங்கு மதத்தை விமர்சனம் செய்யும் இருக்கும் துணிச்சல் அரசியலை விமர்சனம் செய்வதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது. ஆளும் கட்சியின் கருத்துக்கு எதிராக படம் எடுத்தால் ‘தடை’ என்ற பாஸிசக் கொள்கையில் அரசு இயங்குகிறது.

குற்றப்பத்திரிக்கை, செங்கடல், காற்றுக்கென்ன வேளி போன்ற ஈழப்படங்களை தடை செய்தவர்கள், ‘மெட்ராஸ் கபே தடையை தவறு என்று சொல்கிறார்கள். இவர்கள் தமிழ் நாட்டில் தடை செய்த தமிழ் ஈழப்படங்களை வெளியிட்ட பிறகு , ‘மெட்ராஸ் கபே’ தாராளமாக தமிழ் நாட்டில் வெளியிடலாம். தமிழ் நாட்டில் தமிழ்படங்களுக்கு தடைப்பொடுபவர்கள், ‘டாம் 999, மெட்ராஸ் கபே மாற்று மொழி படங்களின் தடைகளை விமர்சனம் செய்ய தகுதியில்லை.

தமிழ் ஈழபடங்களுக்கு தடை விதித்தது நியாயம் என்றால், மெட்ராஸ் கபே படத்தின் நியாயமாக தான் பார்க்க வேண்டும். மெட்ராஸ் கபே வெளியாக வேண்டும் என்றால்,  தடை செய்யப்பட்ட எல்லா ஈழப்படங்களை வெளியிட்ட பிறகு ‘மெட்ராஸ் கபே’ வெளியிடலாம்.

ஆளும் கட்சியின் கருத்தை தான் சினிமாவில் சொல்ல வேண்டும் என்றால், இனிமேல் தேர்தல் வெற்றிப் பெறும் போது ‘சினிமா’ ஆளும் கட்சியின் சொத்து என்று அறிவித்துவிடலாம். எதிர் கருத்து இருப்பவர்கள் சினிமா பக்கமே வர மாட்டார்கள்.

இன்றும், அரசியல்வாதிகள் ‘சினிமாவை கண்டு பயப்படுவது இவர்கள் போடும் தடைகள் எடுத்துக் காட்டுகிறது. ஆனால், பெரியார், அம்பேத்கார் சொல்லி வராத விழிப்புணர்வு ஒரு திரைப்படத்தில் வந்துவிடவா போகிறது....?

LinkWithin

Related Posts with Thumbnails