வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, August 27, 2014

சினிமா 1913 -2013 - 8. தமிழ் சினிமாவில் ஆரம்ப எழுத்தாளர்கள்

சென்ற மாதம் தொடருக்கு தொலைப்பேசி அழைத்து வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. எந்த காலத்திலும் “நடிகைகள்” பற்றி எழுதினால் அதிக வரவேற்பு இருக்கும் என்பதை தங்களின் பாராட்டு நிருபிக்கிறது.

அதில், ஒருவர் 1940,50 சினிமாவில் எழுதிய வசனக்கர்த்தா, பாடலாசிரியர்களை பற்றி சொல்லாமலே 60களில் இருக்கும் சினிமாவுக்கு செல்வதை குறையாக கூறினார்.

1940, 50 சினிமாவில் பிலிம் சுருள்கள் அழிந்த நிலையில் அந்த படங்களுக்கு பாட்டெழுதியவர்கள், வசனம் எழுதியவர்கள் குறிப்பு சேகரிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். பிரபலமான படங்களில் பாடல், வசனம் எழுதியவர்கள் விவரங்கள் மட்டுமே கிடைத்தது.

மலையாளப்படங்கள் இன்று விருதுகள் குவிக்கும் பல காரணங்களில் முக்கிய காரணம் கதை, வசனம் இயக்குனர்கள் எழுதுவதில்லை. அதற்கென்று தனி நபர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் அந்த பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் இயக்குனர்களே கதை, வசனம் எழுதிவிடுவதால் அதன் பிரிவுப் பற்றி யாரும் பெரிதாக நினைப்பதில்லை. கதை, வசனம் எழுத முடிந்தவர்களால் இயக்க முடியும் என்ற மாயை தோன்றிவிட்டது. எது சரி, தவறு என்று இயக்குனருக்கு எடுத்து சொல்லவும் யோசிக்கிறார்கள்.

அடுத்த மாதம் 60களில் வரும் சினிமாவை பார்ப்போம் என்று கூறி, இந்த மாதம் தமிழ் சினிமா ஆரம்பக்கால பாடலாசிரியர், வசனக்கர்த்தா பற்றி பார்ப்போம்.

பாபநாசன் சிவன்

தமிழ்ப்பட உலகில் பாகவதர், பி.யு.சின்னப்பா போன்றவர்கள் கொடிக்கட்டிப் பறந்த காலக்கட்டத்தில் அவர்களின் படங்களுக்கு பாடல் எழுதியவர் பாபநாசன் சிவன் அவர்கள். பல படங்களுக்கு இசை அமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். “தமிழ்நாட்டின் தியாகையா” என்று போற்றப்பட்ட இசை மேதை.

1933ல் “சீதா கல்யாணம்” என்ற தமிழ்ப்படத்திற்கு அவர் இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தியாகராஜர் அறிமுகமான “பவளக் கொடி” படத்திற்கும் இசை அமைத்தார். அடுத்து தமிழின் மெகா சூப்பர் ஹிட் படமான “சிந்தாமணி” க்கு பாடல் எழுதி இசையமைத்திருக்கிறார். இவர் பாடல் எழுதிய கையோடு, அதை எப்படி பாட வேண்டும் என்ற மெட்டையும் கொடுத்துவிடுவார்.

1933 முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் பணியாற்றியிருக்கிறார். பக்த குசேலா, குபேர குசேலா, தியாக பூமி போன்ற படங்களில் நடித்தும் இருக்கிறார். பாகவதர் நடித்த “அம்பிகாபதி”, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ் போன்ற படங்களுக்கு அவர் எழுதிய பாடல் காலத்தை வென்று இன்றும் இருக்கிறது. இவரின் நினைவாக மைலாப்பூர் சாந்தோம் பகுதியில் இருக்கும் ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொத்தமங்கலம் சுப்பு 




எஸ்.எஸ்.வாசனின் மிகவும் நம்பிக்கைக்குரியவர், ஜெமினி நிறுவனத்தின் மிகப் பெரிய தூண் என்று சொல்லக் குடியவர் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள்.

நடிகர், ’அவ்வையார்’ படத்தின் இயக்குனர் என்பதோடு இல்லாமல் காலத்தால் அழியாத “தில்லானா மோகனாம்பாள்” படத்தின் கதையை எழுதியவர் இவர். பத்திரிகைகளுக்கு கதை, கட்டுரை எழுதி வந்த கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் 1941ல் ஜெமினி தயாரித்த “தாசி அபரஞ்சி” என்ற படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி நடித்தார்.

அதன்பின் “மிஸ் மாலினி” படத்தை இயக்கி, அந்த படத்தில் எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார். 1953ல் ஜெமினியின் பிரமாண்டமான தயாரிப்பான “அவ்வையார்” படத்தை இயக்கி தமிழ் சினிமாவின் அழியா புகழ் பெற்றார்.

கவிஞர் கம்பதாசன்

1940களில் மிகப் பெரிய பாடல் ஆசிரியராக விளங்கியவர் கவிஞர் கம்பதாசன். ”வாமனாவதாரம்” என்ற படத்திற்கு ஏழு பாடல்கள் எழுதி தனது திரையுலகப் பயணத்தை தொடங்கினார்.

“ஞானசவுந்தரி” யில் இவர் எழுதிய “அருள் தாரும் தேவ மாதாவே” என்ற பாடலும், “அவன்” படத்தில் இடம் பெற்ற :கல்யாண ஊர்வலம் வரும்” போன்ற புகழ் பெற்றவை. தனது திருமண வாழ்க்கை முறிவால், மதுவுக்கு அடிமையாக்கி இறுதி வாழ்நாளில் மிகவும் சிரமப்பட்டு இறந்தார்.

நாஞ்சில் ராஜப்பா

பாகவதர் நடித்த “ராஜமுக்தி” படத்திற்கு வசன எழுதிய புதுமைபித்தன் உடல் நலம் குன்றி மரணம் அடைந்தார். அப்போது, மீதி வசனத்தை எழுதியவர் நாஞ்சில் ராஜப்பா அவர்கள்.

ஆரம்பக்காலங்களில் சில நாடகத்தை டைரக்ட் செய்து, அதில் முக்கிய பாத்திரத்தில் நாஞ்சில் ராஜப்பா நடித்து வந்தார். இவர் நடித்த “திருமழிசை ஆழ்வார்” நாடகம் சென்னையில் தொடர்ந்து ஒரு வருடம் மேல் நடந்தது. 1948ல் “சிட்டாடல் மூவிஸ்” திரைப்பட நிறுவனத்தின் முதல் படமான “ஞானசவுந்தரி” என்ற படத்தில் முதன் முதலாக கதை, வசனம் எழுதினார்.

இதய கீதம், மல்லிகா, விஜய புரி போன்ற 12 படங்களுக்கு கதை – வசனம் எழுதியிருக்கிறார். 1971ல் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது அரசு திரைப்படக் கல்லூரியின் துணை விரிவுரையாளராக நாஞ்சில் ராஜப்பா நியமிக்கப்பட்டார்.

ஏ.எஸ்.ஏ.சாமி

ஏ.எஸ்.ஏ.சாமி அழைக்கப்படும் ஆரோக்கிய சாமி தமிழ் சினிமாவின் மறக்க முடியாத இன்னொரு முகம். இவர் எழுதிய “பில்ஹணன்” என்ற வரலாற்று நாடகம் 40களில் திருச்சி வானொலி ரேடியோ நாடகமாக ஒலிபரப்பானது. இந்த நாடகத்தை டி.கே.சண்முகம் அவர்கள் மேடை நாடகமாக மாற்றி வெற்றிப் பெற செய்தார்.

இவரின் எழுத்து திறமையை வியந்த ஜூபிடர் பிக்சர்ஸார் தங்கள் படத்தின் கதை பிரிவுக்கு வேலைக்கு அழைத்தனர். பின்னர், அவர்களின் தயாரிப்பான மோகினி, அபிமன்யூ, ராஜகுமாரி போன்ற படங்களை இயக்கவும் வாய்ப்பளித்தனர்.

அறிஞர் அண்ணாவின் “வேலைக்காரி” கதையை திரைப்படமாக எடுத்த பெருமை இவருக்கு உண்டு. அதை தொடர்ந்து மர்மயோகி, துளிவிஷம், தங்கப்பதுமை, அரசிளங்குமரி, கற்புக்கரசி போன்ற இயக்கி இருக்கிறார்.

கலைஞர் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் போது ஏ.எஸ்.ஏ.சாமியிடம் உதவியாளராக பணியாற்றினார். தமிழக முதல்வர்களாக அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்ற மூன்று முதல்வர்களிடம் பண்யாற்றிய பெருமை இவருக்கு உண்டு.

நன்றி : நம் உரத்தசிந்தனை, ஆகஸ்ட், இதழ், 2014


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails