வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, July 16, 2015

பாகுபலி - திரை விமர்சனம்

பிரமிக்க வைக்கும் பிரமாண்டம். எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தியளவில் தன்னை முக்கியமான இயக்குனராக மாறியிருக்கிறார். ஒரு படத்தை இரண்டு பாகமாக வெளியீட்டு லாபம் சம்பாதிக்கும் உத்தியில் வெற்றிப் பெற்றுயிருக்கிறார். ( ரத்த சரித்திரம் 1, 2ல் ராம்கோபால் வர்மா சறுக்கிய இடம்). 

அடிமைப் பெண் + மஹாபாரதம் சேர்ந்த கலவை தான் கதை. சொதப்பல் திரைக்கதையான ‘மித்’ படத்தை அபாரமான ’ மஹதீரா’ வாக எடுத்தவருக்கு, அடிமைப் பெண் படத்தை ‘பாகுபலியாக’ எடுப்பதில் பெரிய விஷயமில்லை. 

இரண்டாம் பாகம் வரும் வரை இது முழுமையான திரைக்கதை இல்லை என்பதால் அதைப்பற்றி இங்கு பேச விரும்பவில்லை. 

படம் நன்றாக இருக்கிறது என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், எனக்கு தெலுங்கு படத்தை தமிழில் பார்த்த உணர்வு தான் ஏற்பட்டது. அதற்கு ஏற்றாற்போல் காட்சிகள். தூதுவன் ஒருவனை தேடும் இடத்தில் பாட்டு, பல இடங்கள் வசனங்கள் உதடு ஒட்டாமல் இருப்பது, கதாநாயகனை போர் வீரனாக காட்டுவதை விட சூப்பர் ஹீரோவாக காட்டும் முயற்சி... எல்லாம் ஐ.எஸ்.ஐ முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு படம் தான். இந்த படத்தை தெலுங்கில் பார்த்திருந்தால் அதிக பாதிப்பு இருந்திருக்கும். கண்டிப்பாக பாகுபலி-2 தெலுங்கில் தான் பார்க்க வேண்டும்.

‘நான் ஈ’யில் சந்தானத்துக்கு இரண்டு காட்சிகள் வைத்து, ’தமிழ் படம்’ என்று நம்ப வைத்த்திருப்பார். அந்தளவுக்கு அடிப்படை வித்தியாசத்தை கூட இதில் கொடுக்கவில்லை. சத்யராஜ் இருப்பதால் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். ஆனால், அவர் இரு மொழி நடிகனாகி நீண்ட நாட்களாகிறது. 

’மஹதீரா’வில் ராம் சரண் சண்டையின் போது இருக்கும் வீரம் பிரபாஸிடம் இல்லை என்றோ தோன்றுகிறது. ராம்சரண் ‘மஹதீரா’வில் நூறு பேரை வீழ்த்தும் போது ஏற்படுத்திய பிரமிப்பு பிரபாஸ் ஆயிரம் பேர் வீழ்த்தும் போது வரவில்லை. உடல்மொழியிலும், பேச்சிலும் இரண்டு பாத்திரத்திற்கும் பிரபாஸ் வித்தியாசமில்லை. 

மிர்ச்சி, ரேபுல், பில்லா போன்ற படங்களில் நடித்தது போலவே சாதாரனமாகவே நடித்துவிட்டார். 2.5 வருடம் தனது கால்ஷிட் கொடுத்து, உடலை மெருக்கேற்றியளவிற்கு ராஜாக் காலத்துக்கு கதைக்கு பிரபாஸ் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. 



பாகுபலிக்கு சரியான தேர்வு ராம்சரண் தான். ஒரு வேளை தமிழ், தெலுங்கு (இரு மொழி) படமாக முன்பே திட்டமிட்டிருந்தால் ‘நாகர்ஜூனா’ அல்லது ’சூர்யா’ சரியான தேர்வு. இவர்களில் 2.5 வருட கால்ஷிட் கிடைப்பது சிரமம் என்பது வேறு விஷயம். தெலுங்கில் எடுத்து முடித்த பிறகு இரு மொழிப்படம் என்று வணிகத்திற்காக விளம்பரம் செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது. 

போர்க்களத்தில் இருக்கும் வில்லனின் நடிப்பும் அப்படி தான். ’மஹதீரா’வில் ஸ்ரீஹரி ராம்சரண்னை கொல்ல நூறு பேரை அனுப்புவார். ஒரு கட்டத்தில் ராம்சரண் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்பார். தனது படை வீரர்கள் இறப்பதை விட ராம்சரணின் வீரத்தை ரசிப்பார். கண்ணிலும், குரலிலும் மனுஷன் பின்னியிருப்பார். இதில் முகத்தில் சாயம் பூசப்பட்ட எதிரி (சாய்குமார் என்ற நினைக்கிறேன்). ஒரே மாதிரியான முகபாவனை. தனது படை எதிரி படைகளை தும்சம் செய்யும் போது சரி, இரண்டு இளவரசர்கள் தன்னை தாக்க வரும் போது சரி ஒரே மாதிரியான முகப்பாவனை. கோபம், ஆவேசம், அச்சம் காட்ட வேண்டிய எதிரி பாத்திரத்தை முகத்தில் சாயம் பூசி நடிக்க வேண்டாம் என்று முடிவு கட்டிவிட்டார் என்று நினைக்கிறேன். 

டெக்கினிக்கலான விஷயத்தில் அதிகமாக கவனத்தை செலுத்தியதால் இப்படி ஏற்பட்டதா என்று தெரியவில்லை. சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் நடிப்பு பற்றி தனி பதிவாக சொல்ல வேண்டும். இந்த படத்தை முழுமையாக நடித்தவர்கள் இவர்கள் இரண்டு பேர் மட்டும் தான். 

அனுஷ்கா இரண்டாம் பாகத்தில் மிரட்டுவார் என்று நம்புகிறேன். ஆனால், அதற்கு முன் ’ருத்ரமாதேவி’ வந்துவிட்டால், ரசிகர் அனுஷ்காவை அந்த படத்தோடு தான் ஒப்பிடுவார்கள். ராஜமௌலிக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். 

எதிர்காலத்தில் பொன்னியின் செல்வன் (நாவல்), பானிபட் யுத்தம், வீர சிவாஜி போன்ற கதைகளை திரைப்படமாக எடுக்கும் நம்பிக்கையை ‘பாகுபலி’ கொடுத்திருக்கிறது. பல சரித்திரக்கதைகளுக்கு திரைக்கதை அமைக்கப்படலாம். அதற்கான வணிகமும் இருக்கிறது என்பதை ராஜமௌலி சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதற்காகவே அவரை வாழ்த்த வேண்டும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails