வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, September 20, 2017

கமலின் தனி கட்சி ?

ஒரு காலத்தில் கமல் அரசியலுக்கு வருவார். கமல் தனிக் கட்சி தொடங்குவார் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏன் கமலுக்கு கூட இருந்திருக்காது. ஆனால், நடக்கும் நிகழ்வுகளில் பார்த்தால் கமல் அரசியலுக்கு வந்தால் அவர் தொடங்கும் கட்சியின் Agenda என்னவாக இருக்கும் என்பதில் இதை எழுதிகிறேன். முதல் Agenda. தேர்தலில் போட்டியிடும் கட்சியாக இருக்காது. அதாவது, அவர் தொடங்கும் கட்சி அரசியல் கட்சியாக இருக்காது. ஒரு இயக்கமாக இருக்கும். 

தேர்தல் அரசியலில் வராததற்கு எதற்காக கட்சி தொடங்க வேண்டும் ? என்ற கேள்வி வரலாம். 

இதே கேள்வியை பெரியாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் தந்த பதில், “தேர்தல் அரசியல் போட்டியிட்டால், நாம் யாரை எதிர்த்து பேசுகிறோமோ அவர்களோடு சமரசம் செய்துகொள்ள வேண்டியது இருக்கும். அதனால், தனது தி.க இயக்கம் தேர்தல் அரசியலில் போட்டியிடாது” என்றார். இன்று வரை, தி.கவினர் தேர்தலில் பிரச்சாரம் செய்தாலும் எந்த தேர்தலிலும் நேரடியாக போட்டியிட்டதில்லை. 

கமல் தனது பல பேட்டிகளில் இதை தான் குறிப்பிட்டுவருகிறார். “தமிழகத்தில் ஆளும் வர்க்கத்தை கேள்விக் கேட்கும் சக்தி வாய்ந்த இயக்கம் இல்லை. தமிழகத்தில் பெரியார் போன்ற தலைவர் இல்லை”. 


இரண்டாவது Agenda. மக்களை ஆளும் அதிகாரம் தேவையில்லை. மக்களோடு மக்களாக அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் அதிகாரம் தேவை. 

கமல் அரசியல் அதிகாரத்தை விரும்புபவராக தன்னை காட்டியதில்லை. மற்ற நடிகர்களை போல் தனது படத்தில் ஏழை பங்காளனாகவோ, நல்லவனாகவோ, உத்தப்புத்திரனாகவோ காட்டிக்கொண்டதில்லை. தனது சொந்த வாழ்க்கையை கூட திறந்தப் புத்தகமாகவே வாழ்ந்திருக்கிறார். கட்சி தொடங்கி முதல்வர் ஆசையெல்லாம் கமலுக்கு இருக்காது என்று நம்புகிறேன். 

கமல் தொடங்கும் இயக்கம் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்தால் அதை கேள்வி கேட்கும் முதல் குரலாக இருக்கும் என்று கூறலாம். இன்று பலர் தங்கள் அரசியல் அதிகார அதிருப்தியை சமூக வலைதளங்கள் எதோ ஒரு வகையில் பதிவு செய்துவருகிறார்கள். அதை ஒருங்கிணைக்கும் சக்தி ஒன்று தேவைப்படுகிறது. அதை கமல் மேற்கொள்ளலாம். 


மூன்றாவது Agenda. எப்போதும் கமல் சொல்வது தான். ஒரு இந்திய குடிமகனாக சரியாக வரி கட்ட வேண்டும். தேர்தலுக்கு ஓட்டுப் போட வேண்டும். 

கமல் தொடங்கவிருக்கும் இயக்கம் இதை முன்மொழியும். அதற்கானப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். 

கமல் தேர்தல் அரசியல் தவிர்த்து அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேட்கும் இயக்கமாக இருந்தால் பலர் அவருக்கு ஆதரவாக வருவார்கள். அவரும் தேர்தல் அரசியலில் குதிக்கும் கட்சியாக இருந்தால் பத்தோடு பதினொன்றாக தான் அவர் இருப்பார். 

** 

ஆக கமல் தொடங்கும் இயக்கம் (கட்சி அல்ல)….. ஆளும் கட்சி யாராக இருந்தாலும் (அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க இன்னும் பல) அவர்களை கேள்வி கேட்கும் மக்கள் குரலாக இருக்கும் இயக்கத்தை தான் தொடங்குவார் என்பது என் கணிப்பு. 

எல்லாவற்றிக்கும் மேலாக தேர்தல் அரசியலில் கோடிக்கணக்காக பணம் செலவு செய்ய வேண்டும். பொதுகூட்டம், பிரச்சாரம், போஸ்டர் என்று ஆயிரத்தெட்டு செலவுகள் இருக்கிறது. அதற்கு பல கோடிகள் தேவைப்படுகிறது.

கமல் அப்பழுக்கற்ற, 100% உண்மையான கலைஞன். கோடிக்கணக்கான பணம் கிடைத்தால் தேர்தலுக்கு செலவு செய்யமாட்டார். ’மருதநாயகம்’ படம் தான் எடுப்பார்.

Wednesday, September 13, 2017

Slow Video ( 2014 - Korean )

உலகமே வேகமாக சென்று கொண்டிருக்கும் போது நீங்கள் மட்டும் மெதுவாக செயல்பட்டால் உங்களை என்ன சொல்வார்கள் ? சோம்பேறி என்று சொல்லும். முன்னேற்றத்தில் அக்கரை இல்லாதவன் என்று விமர்சனம் செய்யும். இப்படி இருக்கும் போது ஒருவரின் பார்வை மெதுவாக இருந்தால் என்னவென்று சொல்வீர்கள்.

 என்னது… பார்வை மெதுவாக இருக்குமா ? புரியவில்லையா ? நீங்கள் ஒரு வீடியோவை Slow ( ¼) play செய்து பார்த்தால் எப்படி இருக்கும் ? ஒரு நொடிக்கு செல்ல வேண்டிய காட்சி நான்கு நோடிக்கு மெதுவாக செல்லும். வேகமாக செல்லும் 100 கிலோமீட்டர் வாகனம் 25 கி.மீ வேகத்தில் செல்வது போல் இருக்கும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் கிரிக்கெட் மேட்ச்சை Action Replay வேகத்தில் அவர்களின் பார்வை இருக்கும். 

இது சூப்பர் பவராச்சே !!! கிரிக்கெட் வீரனாக இருந்தால் எல்லா பந்துகளையும் சிக்ஸர் அடித்து தள்ளலாம். விரைவாக செல்லுவதை எதையும் நினைவில் வைத்துகொள்ளலாம். இப்படிப்பட்ட பார்வை கொண்டவன் தான் Slow Video படத்தின் நாயகன். ஆனால், அவனை சூப்பர் பவர் கொண்டவனாக படத்தில் காட்டவில்லை என்பது தான் திரைக்கதை.பார்க்கும் காட்சிகள் அனைத்தும் ‘Slow’ வாக தெரிவதால் பள்ளியில் ஜங்-பூவை ‘Slow Video’ என்று கேலி செய்கிறார்கள். அதனாலே அவனுக்கு பள்ளியில் நண்பர்கள் இல்லை. போங்-சூமி என்னும் சிறுமி மட்டும் அவனிடம் நல்ல தோழியாக பழகுகிறாள். அவளிடம் பழகும் போது அவன் பார்வைக்கு மெதுவாக நகர்வதால், அந்த மகிழ்ச்சியான பொழுதை அவனால் நினைவில் வைத்து வரைய முடிகிறது. அதை அவளுக்கு பரிசாக கொடுக்கிறான். நாளாக நாளாக போங்-சூமிக்கு அவனை பிடிக்காமல் போக அவளும் அவனை விட்டு பிரிகிறாள். 

இப்போது, ஜங்-பூ முப்பது வயது இளைஞனாக CCTV கண்ட்ரோல் செண்டரில் வேலை செய்கிறான். நகரத்தில் குற்றம் செய்து தப்பிக்கும் குற்றவாளிகளை CCTVவில் பார்த்து காவலர்களுக்கு தகவல் கொடுக்கும் வேலை. ஜங்-பூ பார்வைக்கு மெதுவாக காட்சி தெரிவதால் குற்றவாளிகள் எவ்வளவு வேகமாக வண்டியில் சென்றால் கூட அவன் பார்வைக்கு சீக்கிவிடுவார்கள். அவன் பார்வைக்கோளாறு அவனின் வேலைக்கு உதவியாக இருக்கிறது. 

ஒரு நாள் தனது பள்ளி தோழியான போங்-சூமியை CCTV காமிராவில் பார்க்கிறான். CCTVல் அவளை கண்காணிக்கிறான். பிறகு அவளை பின் தொடர்கிறான். அதன் பின் என்ன நடந்தது என்பது திரையில் பார்க்கவும்.

ஆரம்பக்காட்சியில் ஒரு பெண் ஸ்கர்ட் மேல பறக்க, அந்த பெண் ஸ்கர்ட்டை கால் வரை மூட சிறுவனான நாயகன் பார்வைக்கு அந்த காட்சி மெதுவாக தெரியும். சூப்பர் பவர் கொண்ட நாயகன் படம் , நகைச்சுவை படம் என்று எதிர்பார்த்தால், நமது எதிர்ப்பார்பை உடைக்கிறது. 

நாயகனுக்கு இருப்பது சூப்பர் பவர் அல்ல , பார்வைக் கோளாறு என்று அவர்கள் காட்டும் அடுத்த அடுத்த காட்சி நமக்கு உணர்த்துகிறது. அதனால், நாயகன் தனக்குள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துகொள்கிறான். மற்றவர்களிடம் உரையாடுவதை தவிர்க்கிறான். CCTVல் பார்த்த பாத்திரங்களோடு பழக்குகிறான், விளையாடுகிறான், பேசுகிறான். அவனுக்கென்று ஒரு தனி உலகம் உருவாக்கி கொள்ளும் தனிமை விரும்பியாக மாறுவதை நாம் பார்க்கும் போது அவன் மீது இரக்கம் பிறக்கிறது. 

ஆரம்பக்காட்சியில் நாயகிக்கு தெரியாமல் அவளை பின்தொடருவது போல், இறுதுக்காட்சியில் நாயகனுக்கு தெரியாமல் நாயகி பின் தொடரும் காட்சிகள் அழகான காதல் காட்சியாக இருக்கிறது. 

திரைக்கதை எந்த விஷயத்தை தூக்கிப்பிடித்து காட்டுகிறதோ அந்த விஷயம் தான் பார்வையாளன் மனதில் பதியும். பார்வை பிரச்சனையை சூப்பர் பவராக காட்டமால், ஒரு மாற்று திறனாளிக்கு இருக்கும் தாழ்வுமான்மையை காட்டும் போது அந்த சூப்பர் பவரில் இருக்கும் வலி புரிகிறது. இதுப்போன்ற வலிகளை Spiderman, Superman படங்களின் நாயகர்களை பார்த்திருப்போம். ஆனால், அடுத்த அடுத்த Action காட்சிகள் நாயகனின் வலியை நமக்கு புரியாமல் இருக்கும். 

மற்றவர்கள் போல் இயல்பாக இல்லாமல் இருப்பது வரம் அல்ல… சாபம் என்பதை தான் நாயகன் பாத்திரம் காட்டுகிறது. அதை விட மிக முக்கியமான விஷயம், இந்த உலகத்தில் நாம் என்வாக இருந்தாலும் நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் நம்மை நேசித்துகொண்டு தான் இருப்பார்கள் என்பதை இந்தப்படம் உணர்த்துகிறது. 

ஒரு நல்ல Feel good love story படம். அவசியம் பார்க்கவும்.

Sunday, August 27, 2017

விவேகம் - இணைய வன்மத்திற்கு ஒரு எதிர்விணை

படம் ரொம்ப ஸ்லோவா போகுதா ? இல்லைங்க. 

அஜீத் கேவலமா நடிச்சிருக்காரா ? இல்லைங்க. 

ரொம்ப அதிகமா உழைச்சிருக்காரு. பாட்டு நல்லா இல்லையா ? சூப்பர் சொல்ல முடியாது. ஒகே ரகம் தான். 

வேறு என்ன தான் பிரச்சனை. ஆரம்பக்காட்சியில் காஜல் அகர்வால் வரும் இரண்டு காட்சியை தவிர்த்து மற்ற எல்லாக் காட்சியில் யாராவது துப்பாக்கியால் சுட்டு கொண்டே இருக்கிறார்கள். கண்ணு வலிக்குது.

அப்படியா ! இது அக்ஷன் படம். உளவாளி படம் என்றால் அப்படிதான் இருக்கும். ஜெம்ஸ்பாண்ட் படங்கள் இப்படி தான். டூ பீஸ்ஸில் நடிகைகள் வராதது உங்களுக்கு வருத்தமாக இருக்கலாம். 

வேறு என்ன பிரச்சனை ? சண்டைக் காட்சியில் லாஜிக் இல்லை. அது எம்.ஜி.ஆர், ரஜினி படங்களில் இருந்து தொடரும் பிரச்சனை. ஒரு படத்தில் மாற்ற முடியாது… அடுத்தது என்ன ? 

யோவ் ! படம் மொக்க அவ்வளவு தான். விடுவியா ?? 

அடப்பாவிங்களா !!! மொக்கப்படம் சொல்லுறது ஒரு நியாயமான விஷயம் கூட சொல்ல முடியல. எப்படிடா மொக்கனு சொல்லுறீங்க…? அதுவும், படம் அஜீத் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது எல்லாம் ‘ரொம்ப ஓவர்’ மட்டுமல்ல. வன்மம். 100% அஜீத் ரசிகர்களுக்கு பிடிக்கும். 

**படத்தில் கலாய்க்க இரண்டு விஷயம் தான் என் கண்ணில் பட்டது. ஒன்று அஜீத்தின் Introduction. தனி மனிதனாக தாக்குதல் நடத்திவிட்டு பல ஆயிர அடி நீர் வீழ்ச்சியில் குதித்து தப்பிப்பது. அதேப் போல் செர்பியா மாஃபியா கூட்டத்தின் நடுவில் தனிமனிதனாக தாக்குதல் நடத்துவது. 

இரண்டாவது, க்ளைமாக்ஸ் பாடல். தெலுங்கு பட பாணியில் நாயகன் – வில்லன் சண்டையின் போது நாயகி பாடுவது மிக பழைய ஸ்டைல். 

மற்ற லாஜிக் பிழைகள் எல்லாம் படத்தின் அக்ஷன் மெஜிக்கில் உங்களால் கவனிக்க முடியாது. 

திரைக்கதையில் ஏதாவது பிரச்சனையா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை. அடுத்தக் காட்சி என்னவென்று உங்களால் யூகிக்க முடிந்ததா? நாயகன், வில்லன் Cat & Mouse விளையாட்டு எவ்வளவோ வந்துவிட்டது. அந்தப்படங்களில் பல விஷயங்களை நீங்கள் யூகித்திருப்பீர்கள். இப்படி Technologyயை பயன்படுத்தி இதை செய்யப்போகிறான் என்று விவேகம் பார்க்கும் போது உங்களால் யூகிக்க முடிந்ததா ? 

ஒரு காட்சி முடிந்து என்ன நடந்தது என்று நாம் உணர்வதற்கு அடுத்தக் காட்சியின் வேகம் தொடங்கிவிடுகிறது. ’தம்’ அடிக்கக்கூட உங்களால் வெளியே செல்ல முடியாத அளவுக்கு வேகமாக செல்கிறது. 

** 

கபாலி போன்று ரூ.2000 டிக்கெட் விற்பனை செய்யவில்லை. சாதி அரசியலை பேசவில்லை. நடிகைகள் யாரும் அரைகுறை ஆடையில்லோ, ஐட்டம் பாடலோ இல்லை. 100% அக்ஷன் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். இருந்தும் விவேகம் எதிரான இணைய கருத்துகளை இரண்டு விதமாக நான் பார்க்கிறேன். 

ஒன்று. சிறுத்தை சிவா மீது மற்ற இயக்குனர்கள் / உதவி இயக்குனர்களின் பொறாமை. ‘Collection King’ அஜீத்தின் கால்ஷீட் Wholesaleஆக வாங்கி வைத்திருப்பதால் அவர் மீது பொறாமை இருப்பது இயல்பே !! இவர்கள் யாரும் அஜீத்தின் உழைப்பை கூறவில்லை. சிறுத்தை சிவாவை விட்டு வாருங்கள் அஜீத் என்று அட்வைஸ் தான் கொடுக்கிறார்கள். 

இரண்டாவது. படம் ஒரு சிலருக்கு புரியவில்லை. Hacking, Satellite, 900m Sniper, Morse code Communication, Secret Society என்று ஒன்றன்பின் ஒன்றாக திரைக்கதை அடுக்கிக்கொண்டே போகிறது. பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதற்குள் அடுத்த காட்சியின் வேகம் எடுத்துகொள்கிறது. 

தொய்வில்லாத ஒரு திரைக்கதையை எப்படி ’மொக்கை’ என்று உங்களால் சொல்ல முடிகிறது? அஜீத் நடித்த ஆழ்வார், அஞ்சநேயா போன்ற மொக்கப்படங்களை பார்த்து வருத்தப்பட்டிருக்கிறேன். அவர் நடித்த பல கமர்ஷியல் படங்களை ரசித்திருக்கிறேன். பில்லா – 2 தவிர்த்து வேறு எந்த அஜீத் படத்தை குறித்தும் நான் எழுதியதில்லை. தேவை ஏற்பட்டதுமில்லை. இணைய வன்மத்திற்காக இந்தக்கட்டுரை எழுதுகிறேன். 

விவேக் ஒப்ராய், காஜல் அகர்வாஜ், அக்ஷரா போன்றவர்கள் நடித்திருப்பது மூலம் அஜீத் தனக்கான ஹிந்திப்பட மார்க்கெட் உருவாக்கி இருக்கிறார். அதற்காக பல காட்சிகள் உருவாக்கியிருப்பது புரிகிறது. இதுவும் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். இது அஜீத்தின் பிழையல்ல... அடுத்தக்கட்ட முயற்சி செய்தாமல் வேடிக்கை பார்ப்பவர்களின் பிழை. 

’விவேகம்’ தமிழில் வந்த ஆங்கில அக்ஷன் படம். உங்கள் வன்மத்தை பலியாகும் படமல்ல.

Thursday, August 24, 2017

ஒரு கதை இரண்டு திரைக்கதை !!

A Hard Day ( 2014) - Directed by Kim Seong-hun
The Chronicles of Evil ( 2015) - Directed by Beak Woon-hak 

Produced by Jang Won-seok

Language : Korean

 Kim Seong-hun என்ற இயக்குனர் தயாரிப்பாளர் Jang Won-seokயை சந்திக்கிறார். “ஒரு காவல் அதிகாரி சந்தர்ப்பவசத்தால் ஒருவனை கொன்றுவிடுகிறான். தன்னை காப்பாற்றிக் கொள்ள இறந்தவனின் உடலை மறைக்கிறான். அடுத்த நாள், அவனை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு அந்த காவல் அதிகாரியிடம் வருகிறது.” என்று தனது கதையின் ஒன் லைன்னை சொல்கிறார். 

கதைப் பிடித்துப் போக ”A Hard Day” படத்தை தயாரிக்க Jang Won-seok ஒத்துக்கொள்கிறார். படம் வெளியாகி சக்கைப் போடு போடுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான வசூலை கொடுக்கிறது. 

அடுத்த வருடம், இயக்குனர் Beak Woon-hak தயாரிப்பாளர் Jang Won-seok யிடம் தனது கதையை சொல்கிறார். “ஒரு காவல் அதிகாரி சந்தர்ப்பவசத்தால் ஒருவனை கொலை செய்கிறான். தன்னை காப்பாற்றிக் கொள்ள இறந்தவனின் உடலில் இருக்கும் தடயத்தை அழித்து அந்த இடத்தை விட்டு நகர்கிறான். அடுத்த நாள், இறந்தவனின் உடல் மக்கள் பொது வந்து செல்லும் இடத்தில் தொங்கவிட்டிருப்பதை பார்க்கிறார்கள். அந்த கொலையை கண்டுப்பிடிக்கும் பொறுப்பு அந்த காவல் அதிகாரியிடம் வருகிறது.” என்று தனது கதையை சொல்கிறார். 

நியாயமாக கதையை கேட்ட Jang Won-seokக்கு கோபம் வர வேண்டும். “நான் தயாரித்த படத்தின் கதையை மறுப்படியும் என் கிட்டையே சொல்றீயா ?” என்று அடித்து விரட்டியிருக்க வேண்டும். தனது Kim Seong-hun சொல்லி காப்புரிமை வழக்கு போட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி அவர் செய்யவில்லை. The Chronicles of Evil (2015) படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுக்கிறார். இந்தப்படமும் வசூலை அள்ளி குவித்தது. ஒரே கதையோடு வந்த இரண்டு இயக்குனருக்கும் வாய்ப்பு கொடுத்து, இரண்டையும் வெற்றிப்படமாக மாற்றினார் தயாரிப்பாளர் Jang Won-seok. இரண்டு படத்தின் ஒன் – லைன் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதன் திரைக்கதை கையாண்ட விதமும் வேறு விதமாக இருந்தது. 

இரண்டும் த்ரில்லர் படம் தான். நாயகனை மிரட்டும் வில்லன் பாத்திரமும் ஒரே மாதிரியான பொருப்பில் தான் இருக்கிறார்கள். பார்வையாளனுக்கு இரண்டும் ஒன்று போல் இல்லாத திரைக்கதை தான் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. 


A Hard Day கதை இது தான். 

நாயகன் நேர்மையற்ற காவல் அதிகாரி. தன் அம்மாவின் மரண செய்தி அறிந்து காரை வேகமாக ஓட்டிவருகின்றான். அந்தச் சமயத்தில் அவனது அலுவலகத்தில் லஞ்சம் வாங்கியதற்காக விசாரணை நடக்கிறது. அவனது மனைவி விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாள். தனது வாழ்க்கையில் இன்று தான் ’கெட்ட நாள்’ என்று நினைத்து வேகமாக வண்டி ஓட்டும் போது ஒருவன் மீது இடித்துவிட, அவன் இறக்கிறான். 

ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனை. இப்போது, விபத்தில் ஒருவன் இறந்திருக்கிறான். மேலும் பிரச்சனையை தவிர்க்கவும், தன்னை காப்பாற்றிக் கொள்ளவும் இறந்த உடலை மறைக்கிறான். அம்மாவுக்கு இறுதி மரியாதை எல்லாம் செலுத்தி, மீண்டும் வேலைக்கு செல்கிறான். அப்போது, அவனது மேலாளர் ஒரு புகைப்படம் கொடுத்து “இவன் ஒரு சமூக விரோதி. அவனை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும்.” என்கிறார். அந்தப் புகைப்படத்தில் இருப்பது தனது காரில் அடிப்பட்டு இறந்தவன். 

அப்போது, அவனுக்கு அலைப்பேசி அழைப்பு வருகிறது. ”இறந்தவனை நீ தான் ஒழித்து வைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியும். அவனை என் முன்னால் நிறுத்தினால். நீ பிழைத்தாய்” என்று மிரட்டுகிறது. அங்கிருந்து படம் வேகமாக பயணிக்கிறது. 

இறந்த உடலை எப்படி மறைத்தான் ? தன்னை மிரட்டுவது யார் ? இருட்டில் நடந்த விபத்து எப்படி காவலர்கள் கண்டிப்பிடிக்கிறார்கள் ? என்பது தான் திரைக்கதை. * 

The Chronicles of Evil கதை. 

காவல்துறையில் பெரிய பதவி அடையப் போகும் நாயகன். அதற்கான சிபாரிசு பட்டியலில் முதல் பெயராக அவன் பெயர் இருக்கிறது. அதுவரை பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று மேலாளர் அறிவுரை கூறியிருக்கிறார். 

தன் வெற்றியை தனது டீம்மோடு பார்ட்டியை கொண்டாடிவிட்டு வீடு திரும்ப ஒரு டாக்ஸியில் ஏறுகிறான். அப்போது, அந்த டாக்ஸி டிரைவர் ஊருக்கு வெளியில் அவனை கொலை செய்ய முயற்சிக்க, தற்காப்புக்கு டாக்ஸி டிரைவரை கொன்றுவிடுகிறான். இதை வெளியே சொன்னால் தனது பதவி உயர்வுக்கு தடையாக இருக்குமோ என்று நினைக்கிறான். தடயத்தை அழித்துவிட்டு தனது வீட்டுக்கு வருகிறான். 

அடுத்த நாள், இறந்தவனின் உடல் பொது இடத்தில் க்ரேனில் தொங்கியிருப்பதை மக்கள் பார்த்து அலறுகிறார்கள். காவல்துறையினருக்கு பெருத்த அவமானமாக இருக்கிறது. காரணம், உடல் தொங்கிகொண்டிருப்பது தலைமை காவலர் அலுவலகத்தில் அருகில். கொலையை கண்டிப்பிடிக்க நாயகனிடமே ஒப்படைக்கப்படுகிறது. 

ஊர் வெளியில் இருந்த உடல் எப்படி பொது இடத்தில் தொங்கவிட்டனர் ? தன் பதவி உயர்வை காப்பாற்றிக் கொள்ள தனது குழு துப்பறிவதை எப்படி தடுக்கிறான்? அதற்கான சாட்சியை எப்படி அழிக்கறான் ? என்பது தான் திரைக்கதை. 

இரண்டும் கதை ஒன்றாக இருந்தாலும், A Hard Day படத்தில் நாயகன் அச்சத்தில் நடுங்குகிறான். The Chronicles of Evil படத்தில் நாயகன் குற்றவுணர்வில் தவிக்கிறான். 

இரண்டு படத்திலும் த்ரில்லருக்கு எந்த விதமாக குறையும் வைக்கவில்லை. இரண்டும் சீட் நுணியில் அமர வைக்கும். திரைக்கதையின் வேகம் உங்களை பார்க்க வைக்கும். பாராட்ட வைக்கும். நீங்கள் இயக்குனராக இருந்தால் தமிழிலுக்கு ஏற்றவாரு திரைக்கதை எழுதி இயக்க வைக்கும். 

Must Watch Movie !!!!!!!!

Friday, August 11, 2017

House of the Disappeared ( 2013 - Thriller / Korean )

Direction : Lim Dae-woong 
Language : Korean 
Year : 2013 

வாழ்க்கை முடிந்தப்பிறகும், தள்ளாத வயதிலும் நாம் பாசம் வைத்த மனிதர்களை மறப்பதில்லை. அவர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் அன்பும் குறைவதில்லை. அப்படி நாம் அன்பு செலுத்திய ஒருவர் என்னவானார் தெரியாமல் இருக்கும் போது அவர்களின் நலன் குறித்தும், இருப்பை குறித்தும் தெரிந்துக் கொள்ள வேண்டும் அக்கரை இருக்கும். அதுவே, ஒரு தாய் மகன் மீது இருக்கும் அன்பென்றால் மற்றவர்களை விட பத்து மடங்கு அக்கரையும், பரிதவிப்பும் இருக்கும். அப்படி தன் கண்முன்னால் மறைந்த மகனை ஆபத்து நிறைந்த அமானுஷ்ய வீட்டில் ஒரு தாயின் தேடல் தான் படத்தின் கதை.

ஆரம்பக் காட்சியில் மயக்கநிலையில் இருந்து ஒரு பெண் விழிக்கிறாள். சிதரப்பட்ட கண்ணாடி துண்டை எடுத்துக்கொண்டு வீட்டின் கீழ் பகுதிக்கு அவள் செல்ல, அங்கு தன் கணவன் கொலையானதை பார்க்கிறாள். அஞ்சியப்படி அவளது மகன் கதவருகே நிற்க, கொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் அவளது மகனை இழுத்துச் சென்று கதவை மூடிக்கொள்கிறது. தன் மகனை காப்பாற்ற அவள் கதவை திறக்கும் போது அங்கு பாறை மட்டுமே இருக்கிறது. கணவனை கொலை செய்த காரணத்திற்காக அவள் கைது செய்யப்படுகிறாள். 25 வருடங்கள் கழித்து கூன் விழுந்த கிழவியாக மீண்டும் அதே வீட்டுக்கு வருகிறாள். அமானுஷ்யம் நிறைந்த அந்த வீட்டில் தனது மகன் இன்னும் உயிருடன் இருக்கிறான் என்று நம்புகிறாள். அப்போது அவளிடம் பேட்டிக்காண்பதற்காக ஒரு பாதரியார் வர, அவரிடம் நடந்ததை கூறுகிறாள். இரவு நேரத்தில் அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்திகள் அவளை வெளியே போகச் சொல்லியும் வெளியேறாமல் தனது மகனை தேடுகிறாள். 

அந்த வீட்டில் இருக்கும் அமானுஷ்ய விஷயங்களுக்கு காரணத்தை பாதரியார் கண்டுப்பிடிக்க, கடந்தகாலப் பாத்திரங்கள் நிகழ்காலப் பாத்திரங்கள் ஒன்று சேர்ந்து நம்மை குழப்பாமல் தெளிவான செண்டிமென்ட் காட்சியோடு படம் முடிகிறது. 

ஒரு வட்டத்தில் எது தொடக்கம், எது முடிவு என்று சொல்ல முடியாதோ அதுப்போலவே திரைக்கதை அமைந்திருக்கிறது. எந்த இடத்தில் எந்த பாத்திரங்கள் கொண்டு படம் தொடங்கியதோ அதே இடத்தில் படம் முடிகிறது. இது தான் படத்தின் தொடக்கக் காட்சி என்று காட்டப்பட்டாலும், கதையின் தொடக்கம் இது தான் என்று உங்களால் சொல்ல முடியாது. அப்படி அழகிய வட்டமான திரைக்கதை. 

பாதிப்படத்திற்கு மேல் வயதான பெண்மணி அந்த வீட்டில் தனது மகனை தேடுவதாக இருக்கிறது. எண்பது சதவீதம் ஒரே வீட்டை சுற்றி தான் படம் நகர்கிறது. பார்வையாளனுக்கு கொஞ்சம் கூட சலிப்பு தட்டவில்லை. ஒவ்வொரு காட்சியின் போது நமக்கு திகிலூட்டும் வகையிலாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதையை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. இப்படி திகிலூட்டும் காட்சிகளோடு ஒரு செண்டிமெண்ட் கலந்தப்படத்தை பார்த்ததில்லை. 

இந்தப்படத்தை குறித்து இன்னும் எழுதினால் படத்தின் ஸ்வரஸ்யம் குறைந்துவிடும். கண்டிப்பாக பார்க்க வேண்டியப் படம்.

Wednesday, August 9, 2017

Soredake (That's It) ( 2015 - Japanese movie )

2015 சிங்கப்பூர் திரைப்பட விழாவுக்கு தேர்வானப் படம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக இந்தப் படம் பார்த்தேன். மோசமான படம் என்று சொல்ல முடியாது. படம் முழுக்க கதாநாயகன் ஓடிக்கொண்டிருக்கிறார். கெமிரா நாயகனை விட வேகமாக ஓடுகிறது. 

நிஜ வாழ்க்கை / கனவு வாழ்க்கை என்று அவ்வப்போது காட்சிகள் மாறுகிறது. மரணத்திற்கு பிறகும் கனவு வாழ்கிறது போன்ற குழப்பமான பல விஷயங்கள் வந்து போகிறது. இறுதிக்காட்சி ஆக்ஷன் காட்சியும் வீடியோ கேம் பார்ப்பது போன்ற உணர்வே ஏற்படுத்துகிறது. எவ்வளவு தான் Sub-title உதவி இருந்தாலும் படத்தோடு ஒட்டமுடியாமல் இருந்தது. மொத்தத்தில் டெக்னிக்கலாக இந்தப்படம் பார்க்கும் போது கடுப்படிக்கக் கூடியப்படமாக தான் எனக்கு இருந்தது. 

அப்படியிருந்தும், இந்தப் படத்தை பற்றி குறிப்பிட முக்கியக் காரணம் இருக்கிறது. அதன் கதை. நமக்கு அந்நியமான தோன்றும் இந்தப்படத்தின் கதை, அக்டோபர் 1 பிறகு நமக்கு நெருக்கமான கதையாக மாறப்போகிறது. Underground Gangல் கொத்தடிமையாக நடத்தப்படுகிறான் நாயகன். அங்கிருந்து தப்பிக்க முடிந்தாலும் அவன் அதற்கான முயற்சி செய்யவில்லை. காரணம், தன் பிறப்பு சம்மந்தமான அனைத்து சான்றிதழும் அந்த கூட்டத்தின் தலைவனிடம் இருக்கிறது. அந்த சான்றிதழ் இல்லாமல் வெளியே போனால் அவனால் சராசரி வாழ்க்கை கூட வாழ முடியாது. தனது சான்றிதழை தேடும் முயற்சியில் அந்த கூட்டத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் தகவல் அடங்கிய ஹார்ட் டிஸ்க் கிடைக்கிறது. அப்போது, அந்த கூட்டத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் நட்பும் கிடைக்கிறது. அவர்களுக்குள் காதலும் மலர்கிறது. 

இருவரும் அந்தக் கூட்டத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் அவர்களுக்கு தெரியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள். தன்னுடைய சான்றிதழ் மட்டும் கிடைத்துவிட்டால், தனக்கு கிடைத்த ஹார்ட் டிஸ்க் உதவியோடு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வேன் என்று தனது காதலியிடம் கூறுகிறான். ஆனால், இந்த சமயத்தில் இருவரும் கூட்டத்தின் தலைவனிடம் மாட்டிக் கொள்ள, அவர்களுக்கு ஏற்ப்படும் நிலையை torrent மூலம் காணுங்கள். 

இது என்ன பெரிய கதை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால், அடுத்த வருடம் இந்தப்படத்தை பார்ப்பவர்கள் தமிழில் எடுப்பார் என்று சொல்லலாம். நாயகி இந்த இடத்தை விட்டு செல்லலாம் என்று சொல்லும் போது, “நம்முடைய பிறப்பு சான்றிதழ் இல்லாமல் வெளியே சென்றால் உயிர் இருந்தும் பிணம் போன்றவர்கள்” என்பான். அவளுடைய காதலை விட, தன்னுடைய உயிரை விட, தன் அடையாளமான சான்றிதழ் அவனுக்கு முக்கியமாக இருந்தது. தன்னுடைய அடையாளத்தை பெறாமல் ஆபத்தான இடத்தை விட்டு செல்லக் கூடாது என்பதில் நாயகன் உறுதியாக இருப்பான். 

படம் பார்க்கும் போது அபத்தமாக தெரிந்ததால் எனக்கு இந்தப்படம் ஈர்க்கவில்லை. ஆனால், மரண சான்றிதழ் பெறுவதற்கு ’ஆதார் எண்’ கட்டாயமாக்க பட்டதில் இதுப் போன்ற வாழ்க்கையை நாளை நாம் வாழப்போகிறோம் என்று எண்ணம் வந்ததில், இந்தப்படம் மிக முக்கியத்துவம் பெற்றது. 

வலிமைப்படைத்தவனிடம் சாமான்யனின் ஆதார்-கார்ட் மாட்டிக்கொண்டால், அந்த சாமான்யனால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாமல் போகும். வேலைக்கு செல்ல முடியாது. வங்கி கணக்கு தொடங்க முடியாது. இறந்தாலும் மயாணத்தில் அனுமதி கிடையாது. அப்படிப்பட்ட ஆதார் கார்ட்டை எதிரியிடம் கொடுத்துவிட்டு எங்கு சென்று நிம்மதியாக வாழ முடியும் ? 

ஒரு பிணத்தை அடக்கம் செய்யும் போது தவறுதலாகவோ / வேண்டுமென்றே உங்கள் ஆதார்-எண் கொடுத்து அடக்கம் செய்யப்பட்டால், நீங்கள் உயிருடன் இருந்தும் இறந்ததற்கு சமம். நீங்கள் உயிருடன் இருக்குறீர்கள் என்பதை எதை கொண்டு நிருபனம் செய்வீர்கள் ? 

ஆதார் கார்ட் மூலம் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்று எதிர்ப்பு தெரிவிப்பது ஒரு புறம் இருக்கட்டும். நமது ஆதார் எண்ணை கலவாடி தவறாக பயன்படுத்தும் சம்பவங்கள் நடக்கவிருப்பதை எப்படி தடுக்கப்போகிறார்கள்? ஒருவனின் ஆதார் எண்ணை தெரிந்து கொண்டு அவனுக்கு எதிரான பல சிக்கலில் மாட்டிவிடும் சம்பவங்கள் நடக்கலாம். உங்களுக்கு எதிரான குற்றத்தில் ஜோடனை செய்து மாட்டிவிடலாம். 

முன்பு ரேஷன் கார்ட்டை அடமானம் வைத்து பணம் பெறுவது போல், எதிர்காலத்தில் ஆதார் எண்ணை அடமானம் வைத்து பணம் பெறும் சம்பவம் நடக்கும். இதை எப்படி தடுப்பார்கள் ? 

இதற்கான சட்டங்களும், நடவடிக்கைகளும் நடக்கும் வரை ’That’s it’ படத்தில் வரும் நாயகன் போல் தனது அடையாளத்தை பரிகொடுத்து அதற்காக போராடும் கதை இந்தியாவில் நடக்கவிருப்பதை தடுக்க முடியாது. 

Tuesday, July 11, 2017

A Violent Prosecuter ( 2016) (Crime movie – Korean )

தமிழில் நல்லப்படங்கள் வரும் போது அந்த கருத்தை உடைப்பதற்காகவே ”இது கொரியன் படத்தின் காப்பி” என்று விமர்சனம் வரும். கொரியன் படத்தை எப்படி தமிழில் காப்பி அடித்தார்கள் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே அந்தப்படத்தை பார்ப்பார்கள். இப்படி, உலகத்தை தன் பக்கம் பார்க்க வைக்கும் கொரிய சினிமா மட்டும் சொந்தமாக சிந்திக்கிறார்களா என்றால் இல்லை என்று சொல்லலாம். அதற்கு சிறந்த உதாரணம் ”A Violent Prosecuter”. ஏறக்குறைய ஆங்கிலத்தில் வெளியான ’The Shawshank Redemption’ பாதிப்பில் எடுக்கப்பட்ட படம். ஆரம்பக் காட்சியில் பறவைகள் சரணாயமான இடத்தை அழித்து கார்ப்ரேட் கட்டிடம் கட்டும் நிறுவனத்திற்கு எதிராக போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்புகிறார்கள். அவர்களை தடுத்து காவலர்கள் கார்ப்ரேட் நிறுவனத்திற்கு பாதுகாப்பு கொடுக்கிறது. அப்போது ஒரு சிலர் போராட்டக்காரர்கள் உடையில் உள்ளே நுழைந்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்த, பதிலுக்கு காவலர்களும் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைக்கிறது. 

மறு நாள் எல்லா ஊடகங்களும் காவலர்களை தாக்கியப் போராட்டக்காரர்களை குறித்து செய்தி ஒளிப்பரப்பாகிறது. போராட்டக்காரர்களுக்கு எதிராக அரசு தரப்பில் வழக்கு நடத்த ப்யூன் ஜே-வூக் நியமிக்கப்படுகிறான். அவன் இயல்பிலே கோபமாக நடந்து கொள்பவன். க்ளைட் என்று பார்க்காமல் கோபத்தை காட்ட தயங்காதவன். 

வழக்குக்காக கைது செய்யப்பட்ட போராட்டக்காரன் ஒருவனை விசாரிக்க தனது பாதுகாப்பில் வைத்திருக்கிறான். தனது வழக்கமான பாணியில் அவனை விசாரிக்கிறான். எந்த உண்மையும் சொல்லாத போராட்டக்காரன் அடுத்த நாள் இறக்கிறான். அவனது மரணத்திற்கு ப்யூன் தான் காரணம் என்று கைது செய்யப்பட்டு பதினைந்து வருட சிறை தண்டனை கிடைக்கிறது. 

சிறையில் அடைக்கப்படும் ப்யூன் ஜே-வூக் தனது சட்ட ஆலோசனையின் மூலம் சில அதிகாரிகளுக்கு உதவ, அவனுக்கு சிறையில் பல சலுகைகளும், நண்பர்களும் கிடைக்கிறார்கள். ஐந்து வருடம் கழித்து அந்த சிறையில் சி-வோன் என்பவன் அடைக்கப்படுகிறான். பறவைகளை குறித்து அவன் பேசும் வார்த்தைகள், தனது பாதுகாப்பில் இருந்து இறந்தவனின் வார்த்தைகளும் ஒன்றாய் இருக்க பியூன் சி-வோனின் உதவியை நாடுகிறான். 

போராட்டக் கூட்டத்தில் குழப்பம் விளைவிக்க கார்ப்ரேட் நிறுவனம் பயிற்சி கொடுத்ததை, அதற்காக தங்களை தயார்ப்படுத்தியதையும் சி-வோன் கூறுகிறான். இதற்கு பின்னால் கார்ப்ரேட் மூளை மட்டுமல்ல, அவனது சீனியர் வக்கீல் சூழ்ச்சியும் இருக்கிறது என்பதை ப்யூன் தெரிந்து கொள்கிறான். 

ப்யூன் சிறையில் இருந்த ஐந்து வருடக்காலத்தில் குழப்பத்தை விளைவித்த கார்ப்ரேட் நிறுவனம் நகரத்தின் முக்கியமான நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. அவனது சீனியர் வக்கீல் விருப்ப ஓய்வு பெற்று அரசியல் களத்தில் குதித்து தேர்தலை சந்திக்கும் முக்கிய வேட்பாளராக இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறையில் இருந்தப்படி சி-வோன் உதவியோடு ப்யூன் தனது வக்கில் மூளையைக் கொண்டு எப்படி வெளியே வருகிறான் என்பது தான் மீதி கதை. 

ஆரம்பச் சிறைக்காட்சிகளும், சிறை வார்டனிடம் நல்லப் பெயர் எடுக்கும் காட்சியை பார்க்கும் போது ஆங்கிலப்படமான் ’ The Shawshank Redemption’ உங்கள் நினைவுக்கு வரலாம். அதேப் போல் தன் மீது இருக்கும் கொலைப்பழியை நீக்குவதற்கு சிறையில் இருப்பவனின் உதவியை நாடுவதையும் நினைவுக்கு வரும். 

The Shawshank Redemption பாதிப்பு பல இடங்களில் தெரிந்தாலும் 2016ல் தென் கொரியாவில் வெளியான பட வசூலில் A Violent Prosecuter இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சிறந்த கமர்ஷியல் படமாக இந்தப்படம் விளங்குகிறது. 

இனிமே கொரியன் காரன் காப்பி அடிக்கமாட்டான் என்று யாராவது சொல்லுவீங்களா ?

Thursday, July 6, 2017

Sairat (2016 – Marathi )

ஏறக்குறைய பேஸ்புக்கில் இருக்கும் அனைத்து சினிமா பிரியர்களுமே இந்தப்படத்தை குறித்து எழுதிவிட்டார்கள். ( என்னுடைய பதிவு எத்தனையாவது பதிவு என்று தெரியவில்லை. ) 

படத்தின் பாதிப்பிலிருந்து மீள வேண்டும் என்றால் இதைக் குறித்து பகிர்ந்துகொண்டால் மட்டுமே மீள முடியும். அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப்படம். 

முதல் பாதி முழுக்க சாதாரண கல்லூரி காதல் படம் போல் நகர்கிறது. அவர்களின் காதல் பெற்றோர்களுக்கு தெரிய வர, வழக்கமான காதலர்கள் ஊரைவிட்டு ஓடிப்போகிறார்கள். ஆந்திராவில் ரோட்டுக்கடை அம்மாவிடம் அடைக்களமாகிறார்கள். அதன்பின் அவர்கள் வாழும் வாழ்க்கையும், இறுதி முடிவும் அனைவரையும் இந்தப்படம் பேச வைத்திருக்கிறது. ஜாலியான கமர்ஷியல் படமாக தொடங்கி, கொஞ்சம் எதார்த்தப்படமாக நகர்ந்து, முகத்தில் அறையும் அரசியல் படத்தின் முடிவாக முடிகிறது. எல்லாத்தரப்பினருக்கு திருப்தி தரும்படியான ஒரு காதல் காவியமாக திரைக்கதை அமைத்திருப்பதால் இந்தப்படம் வெற்றிப்பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். 

ஒட்டுமொத்தப்படத்தை தூக்கி நிறுத்துவது படத்தின் நாயகி தான். பொதுவாக, காதல் கதையென்றால் ஆண் பாத்திரம் முன்னிருத்தப்படும். காதலி அழும்போது ஆறுதல் சொல்லும் வீர ஆண்மகனைத் தான் சினிமா காட்டியிருக்கிறது. ’சைரட்’ படத்தில் காதலனைக் காப்பாற்றும் வீரமகளாக காட்டியிருக்கிறார்கள். 

முதல் பாதியில் தனது காதலை நாயகனுக்கு தெரியப்படுத்துவதும், அண்ணனின் புல்லட் ஓட்டுவதும், காதலனை தாக்கும் அடியாட்களிடம் இருந்து காப்பாற்றுவதும், காவல் நிலையத்தில் ‘நான் தான் அவனை கடத்தினேன்’ என்று கத்தும்போதும் காதலில் பெண்ணுக்கு இவ்வளவு துணிச்சல் இருக்குமா என்று வியக்கும் அளவிற்கு இருக்கிறது. கதைப்படி அதிகார வர்க்க சாதியில் பிறந்தப் பெண்ணாக காட்டப்படுவத்தால் தைரியமானப் பெண் என்று நினைத்தால், பிற்பாதியில் காதல் கணவனின் குணமாற்றத்தில் தடுமாறும் சராசரிப் பெண்ணாகவும் நடித்திருக்கிறார். நல்ல நிலைமைக்கு வரும் போது கணவனை தனக்கு பின் இருக்கையில் அமர வைத்து வண்டி ஓட்டும்போது குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தப் பெண்ணாகவும் காட்டுகிறார். (இவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கக்கூடாது என்பது என்பது என் ஆவா !!) 


ஏதார்த்த இளைஞனாகவும், பிறகு சந்தேகப்படும் கணவனாகவும் நாயகன். தமிழ் சினிமாவின் நாயகிப் போல் காதலியின் காதல் பார்வையில் வேட்கப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கும் பாத்திரம். 

முதல் பாதி முழுக்க காதல், மோதல், செண்டிமெண்ட். இரண்டாம் பாதி முழுக்க வீட்டை விட்டு ஓடிவந்தால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்கிறது. பல பிரச்சனையில் இருந்து மீண்டு சந்தோஷமாக வாழும் வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்படும் முடிவு… நமக்கு தெரிந்த அரசியலாக மாறுகிறது. 

கமர்ஷியல் படம் போல் தான் இருந்தாலும், சில காட்சியில் நடந்துக் கொண்டிருக்கும் அரசியல் முகத்தை கிழிக்கிறார் இயக்குனர். பூங்காவில் காதலர்களை தண்டிப்பதாக இருக்கும், இறுதிக்காட்சியும் ஒரு அரசியல் படத்திற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஓடி வந்த காதலர்கள் சமூகத்தில் என்ன பிரச்சனை சந்திப்பார்கள், அவர்களது குடும்பம் எப்படி பாதிக்கப்படும் என்பதையும் இந்தப் படம் காட்டுகிறது. 

சைரட் 100 கோடிக்கு மேல் வசூலான முதல் மராத்திப் படம். கன்னடத்திலும் ரீ-மேக்கில் இதில் நடித்த நாயகி தான் கன்னடத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார். ஹிந்தி ரீ-மேக் உரிமையை கரன் ஜோஹர் வாங்கியிருக்கிறார். 

உண்மையில் வேற்றுமொழிப் படத்தை பார்க்கிறோம் என்ற உணர்வே வராதப்படம். தமிழ் நாட்டில் நடக்கக்கூடிய ஒரு சம்பவமாக தான் இந்தப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியலையும் பேசுகிறது. இதேக் கதையில் பல தமிழ் படம் வேறு வேறுவிதமாக வந்திருந்தாலும், இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு எதுவும் ஏற்படுத்தில்லை. 

அவசியம் பார்க்க வேண்டியப்படம்.

Wednesday, July 5, 2017

அஜ்வா – சரவணன் சந்திரன்

நபிகள் நாயகம் உண்ட பழத்தின் பெயரான ‘அஜ்வா’ பெயர் தாங்கி நாவல் பழமாக வந்திருக்கிறது. 

சென்னை புத்தகக் கண்காட்சியில் பல வாசக நண்பர்களிடம் ஜீவ கரிகாலன் “அஜ்வா” நாவலை பற்றி சொல்லும் போது எனக்கும் அந்த நாவலை படிக்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் ‘அஜ்வா’ வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 


போதை மருந்து உட்கொள்பவனும், அவனை சுற்றி நடக்கும் உலகமான கதையில் நம்மை அறியாமல் போதை மருந்து மீது விருப்பத்தை வளர வைக்கிறார். போதை மருந்துக்கும், குடிப் போதைக்கும் கொடுக்கும் ஒப்பீடு ரசிக்க முடிகிறது. ஆனால், கருத்தளவில் என்னால் ஏற்க முடியவில்லை. 

”எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக பெருதன்மையுடன் நடந்துகொள்வதும் பழிவாங்கும் உணர்ச்சிதான்.” இப்படி பல இடங்களில் பாத்திரங்கள் பேசும் வசனம் போதை மருந்தை உண்பதற்கான பல நியாயங்களை கற்பிக்கிறது. 

குறிப்பாக 16வது அத்தியாயத்தில் கிண்டி சமாதியில் போதை மாஃபியா எப்படி இயங்குகிறது சொல்கிறார். 

80களில் சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” குடிப்போதையில் பாதிக்கப்பட்ட தியாகு பாத்திரத்தை பேசியதோ, போதை மருந்தால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கையை பேசுவதில் “அஜ்வா” முக்கிய நாவலாக திகழ்கிறது. 

வாழ்த்துகள் சரவணன் சந்திரன் !! 

இணையத்தில் வாங்க...

Friday, June 30, 2017

அண்ணன் எஸ்.வி.சேகருக்கு திறந்த மடல் !!

மதிப்புக்குரிய அண்ணன் எஸ்.வி.சேகர் அவர்களுக்கு, 

சிறு வயதில் உங்கள் நகைச்சுவையால் ஈர்க்கப்பட்ட ரசிகனின் மடல். தங்களின் அரசியல் பார்வை என் பார்வைக்கும் ஒத்துப்போகாத காலத்தில் கூட தங்களின் நாடகத்தை வாணி மஹால், ராணி சீதை ஹாலில் காசுக் கொடுத்துப்பார்த்திருக்கிறேன். ஆனால், சமிபக்காலமாக தங்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சி சார்பாக பேசுவதாக நினைத்து தங்களின் சாதியை தூக்கிப்பிடித்து கட்சிக்கு துரோகம் செய்வதாக எனக்குப்படுகிறது. அதனால் திறந்த மடலை உங்களுக்கு எழுதுகிறேன். * 

1. 

’ஒரு முறை உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பிராமண இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கையே இருந்துவிடுங்கள். இந்தியா வராதீர்கள். பிராமணர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது’ என்று சொன்னீர்கள். இதே கருத்தை அமீர்கான் வேறு மாதிரியாக முன் வைத்தப்போது ஊடகம் அவரை வறுத்தெடுத்தது. ஆனால், தாங்கள் சார்ந்த பா.ஜ.க கட்சிக்கு எதிரான கருத்து என்று கூட பார்க்காமல் கூறியிருக்குறீர்கள். இதை யாரும் கண்டுக்கொள்ளவில்லை. 

 2. 

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பல பிரச்சனைகள், பாலியல் தொல்லைகள் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், தாங்கள் சுவாதி பிராமணப் பெண் என்ற ஒரே காரணத்திற்காக அந்த கொலை வழக்கை குறித்து பேசினீர்கள். 

3. 

தற்போதைய பிரச்சனை எடுத்துக்கொள்வோம். வெ.மதிமாறன் டி.வி விவாதத்தில் மத்திய அரசை கண்டித்து பல கருத்துகளை கூறியிருக்கிறார். மோடி எதிர்த்து விமர்சித்திருக்கிறார். அதற்காக பொங்காமல் “திரு.நாராயணனை பார்ப்பனன்” என்று கூறியதற்கு பொங்கியிருக்கிறீர்கள். அதற்கான கண்டன வீடியோவும் வெளியீட்டு இருக்கிறீர்கள். தாங்கள் சார்ந்த கட்சியை விட உங்களுக்கு சாதி முக்கியமாக இருப்பதை வெளிப்படையாக காட்டுகிறது. பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் வெறுப்பை விதைத்திருப்பதை உங்களால் மறுக்கமுடியாது. 

*
 4. 


 // இப்பொழுதும் என் வீட்டில் சமையல் வேலை செய்பவர், வீட்டு வேலை செய்பவர்கள், குழந்தைகளை பார்த்துக்கொள்பவர்கள் எவருமே என் ஜாதியினர் அல்லர்// என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

எதனால் என் நெருங்கிய நண்பர்கள், நலம் விரும்பிகள் என் ஜாதியினர் இல்லை என்று உங்களால் சொல்ல முடியவில்லை. நீங்கள் நடத்தும் நாடகத்திற்கு ஸ்பான்ஸர் வேறு சாதியிடம் இருந்து வந்திருக்கிறது. அதை குறிப்பிட்டு இருக்கலாமே ? உங்கள் வீட்டு வேலை செய்பவர்கள் பற்றி ஏன் குறிப்பிட வேண்டும் ? உங்கள் ஆதிக்க சாதி சிந்தனை தான் இதைக் காட்டுகிறது என்பதை நீங்கள் உணரவில்லையா ? 


5. // சுன்னத் பற்றிய கேள்வியை தென் வட மாவட்டங்களில் நீங்கள் நேரில் போய் கேட்க துணிச்சல் உள்ளதா நண்பரே ? “ // என்று கேட்டிருப்பதை பார்த்தேன். 

பல நூற்றாண்டுகளாக கல்வி கற்று அறிவாளி என்று காட்டிக் கொள்ளும் பிராமணர்கள் புத்தியில் இருந்து ‘சாதி’யை நீக்குவதில் தி.கவினர் தோல்வியடைந்திருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக வேல் கம்பு, வீரம் என்று இருப்பந்தவர்கள் தற்போது தான் கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். தோல்வியுற்ற தி.கவினர் எப்படி தென் மாவட்டத்தினரிடம் ”சாதி இல்லை” என்று சொல்லி அவர்களால் புரிய வைக்க முடியும். 

கல்விச்சாலையில் பட்டம் பெற்ற நீங்களே “சாதி தாய், தந்தை போன்றது” என்று குறிப்பிடும் போது, கல்வி அறிவற்றவர்களிடம் “சாதி தவறு” என்று யாரால் புரிய வைக்க முடியும். 


6. 
// என் நண்பர் திரு.ஸ்டாலின் அவர்களது தொடர் உழைப்பால் வரும் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்று முதல்வராகும் வாய்ப்பு இருக்கிறது. // 

திராவிடக்கட்சியை ஒழிப்போம் என்று சபதம் செய்த பா.ஜ.க கட்சியில் இருக்குறீர்களை என்பதை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இதுவரை அ.தி.மு.க., காங்கிரஸ்., பா.ஜ.க என்று மூன்று கட்சியிலும் இருந்துவிட்டீர்கள். அடுத்து தி.மு.கவுக்கு தாவும் சந்தர்ப்பத்தை பார்த்துக்கொண்டிருப்பதாக தற்போதைய பா.ஜ.க உறுப்பினர்கள் நினைப்பார்கள். 

 “இதுக்கு தான் இந்த பார்ப்பனர்கள் நம்ம கட்சியில சேர்க்கக்கூடாது” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்வார்கள். இவர்கள் திராவிடக் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. பா.ஜ.கவினர். 

அதை நீங்கள் எப்படி எதிர்க்கொள்ளப் போகிறீர்கள் என்பது கவலையாக இருக்கிறது. 

7. 

தி.க., தி.மு.கவினரை விட மூன்று வேளை கோயிலுக்கு சென்று கடவுளை வழிப்படும் மற்ற சாதியினரிடம் ‘பிராமண வெறுப்பு’ அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு பெரியார் என்ன சொன்னார் என்பது தெரியாது. பகுத்தறிவு குறித்து புரிதல் கிடையாது. ஆனால், பிராமணர்கள் என்றால் இப்படி தான் நடந்துக்கொள்வார்கள் என்று எண்ணம் உடையவர்கள். எதனால் அவர்கள் மனதில் இப்படி எண்ணம் உருவானது என்றாவது சிந்தித்ததுண்டா ? 


8. 
// அடுத்த வாரம் நடக்க இருக்கும் உங்கள் இல்ல திருமணத்தில் சாதிப் பெயருடன் அழைப்பிதழ் அச்சடித்திருப்பதை ஏற்கனவே சொன்னேன் அல்லவா...// 

 ஒரு சம்பவம் சொல்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு, நடிகர் தனுஷ் திருமணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். திரு. ரஜினியும், தனுஷ் தந்தை கஸ்தூரிராஜாவும் பிராமணர்கள் அல்ல. ஆனால், திருமணம் பிராமண முறைப்படி நடந்தது. எதற்காக பிராமண முறைப்படி நடத்தப்பட்டது என்று நான் கேட்கப் போவதில்லை. அந்த திருமணத்திற்கு கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்பட்டதா ? பகுத்தறிவாளிகளும், கடவுள் மறுப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ? 

அதேப் போல், கடவுள் மறுப்பாளர் கலைஞர் இல்ல நிகழ்ச்சிக்கு கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கலந்துகொள்வதில்லையா ? நம்மை சார்ந்துள்ளவர்கள், உறவினர்கள் நமது கொள்கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் அவர்களின் அன்புக்கு அடிப்பணிவது மனித இயல்வு. அன்பை விட கொள்கை முக்கியமில்லை. அந்த அடிப்படையில் சுப.வீ வாணியச் செட்டியார் அறக்கட்டளையில் உறுப்பினராகியிருக்கலாம். பெற்றோர்கள் மீது கொண்ட அன்பால் அவர்கள் காட்டியப் பெண்ணை திருமணம் செய்திருக்கலாம். உரிமையோடு அவருடைய பெயரை உறவினர்கள் பத்திரிக்கையில் அச்சடித்திருக்கலாம். 

பிரச்சனை சாதி அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் இல்லை. தன்னுடைய சாதியை தூக்கிப்பிடித்து பேசுவது தான் பிரச்சனை. சுப.வீயின் திறந்த மடலில் அவரது சாதியை தூக்கிப்பிடித்து எழுதியதுப் போல் இல்லை. உங்களின் திறந்த மடலை பார்த்தப் பிறகு தான் அவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது பலருக்கு தெரிய வந்திருக்கும். 

 *

 9. 

// உங்களால் மட்டுமல்ல... யாராலும் சாதியையும் மதத்தையும் ஒழிக்க முடியாது. இதுதான் யதார்த்தம்// 

இந்த உண்மையை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிறப்பு, திருமணம், இறப்பு இந்த மூன்றுக்கும் சாதி அடையாளம் இல்லாமல் நடப்பதில்லை என்பதை நான் அறிவேன். ஆனால், பேச்சு, உடை, நட்பு என்று எல்லா விஷயத்திலும் பிராமணர்களை போல் யாரும் சாதியை தூக்கி சுமந்து செல்வதில்லை. அதனால் தான் நீங்கள் மற்றவர்களை விட வேறுப்பட்டு தனித்து நிற்குறீர்கள். 

பேசத் தொடங்கியதும் “இவர் பிராமணர்” என்று எளிமையாக கண்டுப்பிடிக்கும் அளவிற்கு உங்களை போல் யாரும் சாதி அடையாளத்தை காட்டுவதில்லை. 

மதத்தையும் ஒழிக்க முடியாது என்று குறிப்பிடும் நீங்கள் ஏன் கிறிஸ்துவம், முஸ்லீம் எதிராக கருத்துக் கூறும் கட்சியில் இருக்கிறீர்கள் ? 

 ** 

10. 

ஒன்று புரிந்துக்கொள்ளுங்கள். பிராமண வெறுப்பு என்பது தி.கவோ, தி.மு.கவோ விதைத்தது அல்ல. பிராமணர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கையால் விதைத்தது. அதை தி.மு.க அருவடை செய்து அரசியல் லாபம் பார்த்திருக்கிறது. இது மறுக்கமுடியாத உண்மை. இன்னும் எத்தனைக்காலம் இந்த உண்மை புரியாமல் தி.கவினரையோ, தி.மு.கவினரையோ குறைக்கூறி உங்கள் தவறை தொடர்ந்துக்கொண்டு இருப்பீர்கள் என்று நீங்கள் வணங்கும் கடவுளுக்கு கூட தெரியாது. 

நீங்கள் நல்ல நடிகன். ஆனால் திரையில் நடிப்பது போல் நிஜத்தில் உங்கள் அடையாளத்தை மறைத்து உங்களால் நடிக்க முடியவில்லை. உங்கள் திருந்தச் சொல்வதற்காக இந்த மடல் எழுதவில்லை. 

சோவையும், கலைஞரையும் பார்த்து பழகிய நீங்கள் என்ன பேசுகிறோம் என்பதை புரிந்துகொள்ளாமல் பேசுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அந்த வருத்தத்தை ஒரு ரசிகனாக எழுதியிருக்கிறேன். 

நன்றி.

Wednesday, June 14, 2017

உலக சினிமா - ஓர் பார்வை

சரியாக 5 வருடங்களுக்கு முன்பு வந்த புத்தகம். 'உலக சினிமா' என்ற பெயரைக் கேட்டாலே டூ-ஸ்டெப்-பாக் போய்க்கொண்டிருந்த என் போன்றவர்களிடமும் ஈரான், சௌத் கொரியா, லத்தீன் அமெரிக்கா என்று கொஞ்சம் கொஞ்சமாக தரமான சினிமா படிப்படியாக பிரபலமாகத் தொடங்கியிருந்த காலகட்டம். கடை கடையாக ஆங்கிலப் பட டி.வி.டி-களைத் தேடிக்கொண்டிருந்த நான், உலக சினிமா டி.வி.டி-களை சேகரிக்கத் தொடங்கியிருந்தேன். ப்ளாகராக நான் தொடர்ந்து வாசித்து திரு. குகன் கண்ணன் ( www.wecanshopping.com ) சென்னைப் புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வெளியிடும் தகவல் அறிந்து ஆன்-லைனில் வாங்கினேன். உலக சினிமா கட்டுரைகளை எளிய நடையில் எழுதி வந்த வெகுசில ப்ளாகர்களில் குகனும் ஒருவர். ஸினாப்சிஸ் அளவில் தான் கதையைச் சொல்வார் என்பதால் வளவளவென்று பெரிய பதிவுகளாக இல்லாமல் படம் பார்க்கும் முன் நமக்கு என்ன தெரியவேண்டுமோ அதை மட்டும் தரும் சிறிய பதிவுகளாகவே இருக்கும்.கமர்ஷியல் சினிமா தாண்டி உலக சினிமா என்று வகைபடுத்தப்படும் இது தான் தரமான, நல்ல சினிமா நீங்கள் பார்க்கும் கமர்ஷியல் மசாலா குப்பைகள் அல்ல என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த வகை சினிமாக்களில் அப்படி என்ன தான் ஸ்பெஷலாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு அருமையான அறிமுக கைடு. எடுத்த எடுப்பிலேயே பெலினி, கோடார்டு, பெர்க்மென் என்று முயற்சி செய்தால் அடுத்து உலக சினிமா என்றாலே மிரளத் தொடங்கிவிடுவீர்கள். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பயணிப்பது போன்ற ஆபத்தான முயற்சி அது (பெர்சனலான என்னைக் கேட்டால் குப்ரிக், குரசோவா, ஹிட்ச்காக், மஜித் மஜிதி படங்களிலிருந்து தொடங்கலாம்). மெல்ல மெல்ல உங்களைத் தயார் படுத்ததிக்கொள்ள இந்தப் புத்தகத்தில் திரு. குகன் அறிமுகப்படுத்தியிருக்கும் 19 படங்கள் நல்லதொரு ஆரம்பம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிக முக்கியமான திரைப்படங்கள். The Stoning of Saroya M என்ற அற்புதமான படத்தை இந்த புத்தகத்திலிருந்து தான் தெரிந்து கொண்டேன். 

எழுத்தாளர் குகன் இதுவரை - 'உலகை உழுக்க வைத்த இனப்படுகொலைகள்', இந்திய உளவுத்துறை, தேவர், முசோலினி, கலைஞரின் நினைவலைகள், பெரியார் ரசிகன், என்னை எழுதிய தேவதைக்கு, எனது கீதை, உலக சினிமா, கார்ப்பரேட் சாமியார்கள், உளவு ராணிகள், கலாம் கண்ட கனவு, கவிதை உலகம், நடைபாதை (சிறுகதைகள்) என்று சினிமா தவிர்த்து கட்டுரைத் தொகுப்பு, கவிதை, அரசியல் என்று வெவ்வேறு ஏரியாக்களில் புத்தகங்கள் எழுதியுள்ளார். 

இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டால் ஒரே ஒரு சிறிய குறை. பார்த்தவுடன் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்து உடனே வாங்கத் தூண்டும் ஃபினிஷிங் இல்லை. நல்ல கன்டென்ட் இருக்கிறது ஆனால் கண்டவுடன் கவர்ந்திழுக்கும் 'கவர்ச்சி' இல்லை. என்ன செய்வது, a book cannot be judged by it's cover என்பது உண்மை தான். a good book should also have a good cover என்பது நிதர்சனம். கவர் கவரவில்லை என்றால் நம்மாட்கள் வாங்க மாட்டார்கள்.

நன்றி பிரதீப் செல்லத்துரை. 

** 
பதிப்பகம் - கௌதம் பதிப்பகம் 
விலை - ரூ. 50/-

Monday, June 12, 2017

Sachin : A Billion Dreams ( Documentary film)

ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகளாகிறது. 2002 பிறகு இவர் ஆடிய ஆட்டம் பெரும்பாலும் சுயநல ஆட்டமாகப் பார்க்கப்பட்டது. இன்றைய தோனி, கோலி போல் வெற்றிப் பெற்ற கேப்டன் கூட இல்லை. அப்படியிருக்கும் போது சச்சின் ஆவணப்படம் பெரிய முக்கியமானப் படமா என்று சினிமா ரசிகர்களுக்கும், இன்றைய கிரிக்கெட் இளைய தலைமுறை ரசிகர்களும் நினைக்கலாம். 

ஒரு முக்கியமான விஷயம் இந்த ஆவணப்படம் இன்றைய இளைய தலைமுறைக்கு தகவல் சொல்வதற்காக மட்டுமல்ல… 30 வயது தாண்டிய எங்களைப் போன்றவர்களுக்கு 90களை மீட்டெடுத்துக் கொடுத்த டைம் மிஷினாக இந்தப்படம் இருக்கிறது. 

சச்சினின் ஆட்டம் சுயநலமானது என்று விமர்சிப்பவர்கள் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். 90களில் சச்சின் ஆடும் போது அவருடைய ரசிகர்கள் அதை விட சுயநலமானவர்களாக இருந்தார்கள். இந்தியா 50/2 என்று ஸ்கோர் சொன்னால், ‘சச்சின் களத்தில் இருக்கிறாரா?’. அப்படியென்றால் பிரச்சனையில்லை. சச்சின் களத்தில் இருக்கும் போது நாங்கள் இந்தியாவின் ஸ்கோர் பற்றி கவலைப்பட்டதில்லை. அதேப் போல், சச்சின் களத்தில் இருக்கும் வரை எதிரணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டதில்லை. 

தோனி, கோலி, அஸார் வாழ்க்கை வரலாறு படத்தில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், சச்சின் வாழ்க்கை வரலாற்றில் வேறு யாரும் நடிக்க முடியாது. ஒரு போலியான சச்சினை திரையில் பார்ப்பதை சச்சின் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள். சச்சின் போல் நடிக்க வேண்டும் என்றால் சச்சின் தான் வர வேண்டும். அதை தான் இந்த ஆவணப்படம் காட்டுகிறது. ** 

அன்று சச்சின் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை இன்றைய தோனி, கோலி மீது கூட யாரும் வைக்க முடியாது. அன்றைய தேதியில் இந்தியாவின் வெற்றியும், சச்சின் ஆட்டத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது ஒன்று. சச்சின் விக்கெட் விழுந்து, கடைசி நம்பிக்கை இழந்தப் பிறகு இந்தியா வெற்றிப் புகழ்ப் பெற்ற ஆட்டமாக இரண்டு தான் என் நினைவுக்கு வந்தது. இந்த ஆவணப்படத்தில் காட்டப்பட்ட ஒவ்வொரு ஆட்டமும் எனது பாலியக்காலத்தை நினைவுப்படுத்தியது. குறிப்பாக, 96ல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தப் போது அழுததை அசைப்போட வைத்தது. 

** 

இந்த ஆவணப்படத்தில் எனக்கு இருந்த இரண்டு வருத்தம் இருக்கிறது. 

முதல் வருத்தம். வினோத் காம்பிளியை காட்டியதோடு சரி. அவரைப்பற்றி ஒரு வரிக்கூட குறிப்பிடவில்லை. சச்சினின் ஆரம்ப நாட்களில் மிக நெருங்கிய கிரிக்கெட் நண்பன் வினோத் காம்பிளி. பள்ளி நாட்களில் இருவரும் சேர்ந்த செய்த பாட்னர்ஷிப் சாதனை இன்று வரை முறியடிக்க முடியாமல் இருக்கிறது. 

1992-95களில் இவர்கள் இருவரும் களத்தில் இருக்கும் போது ’Running between wickets’ அருமையாக இருக்கும். அமிதாப், லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் பேசும் போது வினோத் காம்பிளி சச்சின் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கலாம். 

இரண்டாவது. இந்த ஆவணப்படம் சச்சினின் பேட்டிங் மட்டுமே பேசுகிறது. அவர் ஒரு Last Over Specialist bowler என்பதை இந்த ஆவணப்படம் பேசவில்லை. அதுவும் சச்சின் பவுலிங் போடும் போது Off break/ Leg Spin/ Medim Space என்று அவரது பெயருக்கு கீழ் குறிப்பிடப்படும். அவர் என்ன விதமான பவுலிங் போடப்போகிறார் என்பது பந்துவீசி முடிக்கும் வரை யாருக்கும் தெரியாது. 

நெருக்கடியான நேரத்தில் சச்சின் கடைசி ஓவர் பந்துவீச்சு இந்தியாவின் தோல்வி விழும்பில் இருந்து காப்பாற்றியிருக்கிறது. உதாரணத்திற்கு கீழ் காணும் ஆட்டத்தை பார்க்கவும்…

** 

ஒரு காட்சியில் சச்சின் வீட்டின் முன் கூடிய ரசிகர் கூட்டம் காட்டப்படுகிறது. அதைப் பார்த்த என் மகன், “சச்சின் ரஜினியை விட பெரிய ஆளா ? இவ்வளவு பேன்ஸ் இருக்காங்காளா… ?” என்று கேட்டான். 

சினிமாவின் உண்மையான ரசிகர்கள் பெரும்பாலும் ரஜினி, அபிதாப் போன்றவர்களின் ரசிகர்களாக இருப்பதில்லை. ஆனால், கிரிக்கெட்டின் உண்மையான ரசிகன் சச்சின் ஆட்டத்தை கண்டிப்பாக ரசிப்பான். 

இராமாயணத்தில் இராவணனின் மகனான இந்திரஜித்தை கொல்ல வேண்டும் என்றால் பதினான்கு வருடம் உறங்காத ஒருவனால் மட்டுமே கொல்ல முடியும் என்ற வரம் பெற்றவனாக இருப்பான். கடைசியில் பதினான்கு வருடம் உறங்காத லட்சுமணனால் கொல்லப்படுவான். 

சச்சின் என்ற இந்திரஜித்தை வீழ்த்த இன்னும் U16, U19ன் டீம்மில் லட்சுமணன் பிறக்கவில்லை என்பது தான் நிஜம். 

பல கோடி இந்தியர்களுக்கு கிரிக்கெட் கனவு கொடுத்த சச்சினுக்கு Sachin : A Billion Dreams என்ற ஆவணப்படம் ஒரு சிறு பதிவு மட்டுமே !!

Friday, June 2, 2017

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ஆண்டில் எழுதப்பட்டது என்று சரியான குறிப்புகள் இல்லை. 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

பல நூற்றாண்டு முன் இலக்கியமல்லாத ஒரு புத்தகம் இவ்வளவு முக்கியத்துவம் பெரும் காரணம், இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை எப்படி சீர்குழைக்க வேண்டும் என்று பிரிட்டன் பேரரசு இரகசியமாக சேகரித்த முக்கியமான ஆவணமாக இருப்பதால் தான். 18ஆம் நூற்றாண்டில் ஓட்டோமன் பேரரசை சீர்குழைக்க இஸ்லாமிய வேடத்தில் பிரிட்டிஷ் உளவாளியான ஆலிவர் ஹெம்பர் ஊடூருவினார். அங்கு அவர் மேற்கொண்ட அனைத்து வழிமுறைகளை தனது நினைவுக்குறிப்புகளாக இந்த நூலில் எழுதியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இஸ்லாமிய நாடுகளை தகர்க்க பிரிட்டன் அரசு ஆவணப்படுத்தியிருக்கும் ரகசிய அறிக்கையும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அந்த அறிக்கையில் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதற்கு ஒரு நூற்றாண்டு காலம் தேவைப்பட்டாலும், தங்களுக்கு அடுத்து வரும் பிரிட்டன் அதிகாரிகளுக்கும், பேரரசுக்கும் உதவியாக இருக்கும் என்பது தான் அந்த உளவாளியின் நோக்கம். ஏற்கக்குறைய அவர்களின் நோக்கப்படி சில இஸ்லாமிய தேசங்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாகிஸ்தான் அமெரிக்க அனுதாபியாக இருக்கிறது. ஓட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் இஸ்ரேல் தேசம். இன்னும் சில இஸ்லாமிய தேசங்கள் அமெரிக்காவுக்கு அஞ்சி அமைதியாக இருக்கிறது. 

பிரிட்டனுக்கு பதிலாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இதில் பிரிட்டன் தயாரித்த இரகசிய அட்டவனையில் எந்த மாற்றம் செய்யாமல் திட்டம் போட்டு செயல்படுத்திவருகிறார்கள். 

இஸ்லாமிய தேசம் ஒன்றுப்படாமல் இருப்பதற்கு ஏகாப்பத்திய நாடுகளில் இரகசிய அறிக்கையாகவே இந்தப் புத்தகம் இருக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்… !!! 


***
பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் 
- ஆலிவர் ஹெம்பர் ( தமிழில் : நாஞ்சிலான்)
- அடையாளம் வெளியீடு
 - ரூ.80

இணையத்தில் வாங்க...

Monday, May 29, 2017

கக்கூஸ் ( ஆவணப்படம்)

பார்க்க வேண்டிய முக்கியமான ஆவணப்படம். 

இதை ஏன் முதலில் சொல்கிறேன் என்றால் இந்த கட்டுரையை பாதியிலேயே வாசிக்காமல் நீங்கள் கடந்து செல்லலாம். தலைப்பு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதனால், நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம் என்பதை முன்பே சொல்லிவிடுகிறேன். 

நமது தினசரி வாழ்க்கையில் காலைக்கடன் கழிப்பது என்பதை நிகாரிக்க முடியாத ஒன்று. உண்ட உணவு உடலில் தங்கிவிட்டால் நோய் அண்டிவிடும் என்ற அச்சத்தில் டீ, காபி என்று எதையாவது குடித்து ல்லது ஒரு சிலர் சிகரெட் பிடித்தாவது உடல் கழிவை வெளியேற்றி விடுகிறோம். ஆனால், நமது உடலின் கழிவு எங்கோ சென்று ஒரு இடத்தில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. சுற்றுசூழலை பாதித்து கொண்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தும் மனிதர்களை பற்றி நமக்கு தெரியாது. அவர்களுக்கான வாழ்க்கையை நாம் சிந்தித்திருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் ? அவர்கள் மனிதர்கள் என்பதை கூட நாம் யோசிக்காமல் கடந்து சென்று இருக்கிறோம். காலையில் கார்ப்ரேஷன் அலுவலகத்தின் முன்பு நில உடை அணிந்து செல்பவர்களை மட்டும் நமக்கு தெரியும். பொது கழிப்பிடத்தில் மலத்தை கைகளால் அள்ளும் மனிதர்களை இந்த ஆவணப்படம் காட்டுகிறது. பொது கழிப்பிடம் பக்கமே போகாதவர்களுக்கு “manual scavenging” எதோ சில இடங்களில் நடப்பதாக வாதிடலாம். சிங்கார சென்னையில் ப்ராட்வே, தி.நகர் போன்ற பகுதிகள் இன்னும் நடப்பதை தலையில் சுத்தி வைத்தி அடிப்பது போல் காட்டுகிறது. 

துணி துவைப்பதில் இருந்து சமையல் வரைக்கும் பல இயந்திரங்கள் வந்துவிட்டது. ஆனால், மனிதனின் மலத்தை சுத்தப்படுத்தும் இயந்திரம் ஏன் கண்டுப்பிடிக்கவில்லை ? ஒரு வேளை அப்படி ஒரு இயந்திரம் இருந்தால், கார்ப்ரேஷன் எதற்காக வாங்கவில்லை ? 

பல மரணங்கள் தவறிவிழுந்த விபத்தாகவே சித்தரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகைக் கூட கிடைப்பதில்லை. எல்லையில் இராணுவ வீரன் நாட்டுக்காக உயிரை விடுகிறான் என்று சொல்வதை Trending ஆக இருக்கிறது. ஆனால், நமது மலத்தை அள்ளுவதில் பலர் இறந்திருக்கிறார்கள் என்பதை ஒரு வரி ஸ்டேடஸாக கூட இல்லாமல் நாம் கடந்து செல்லும் வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். 

மலத்தை அள்ளுபவர்களின் உயிர் மலிவாகக் கருதப்படுகிறது என்பது அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக அமைகிறது. 

ஆவணப்படம் முடியும் போது பல கேள்விகளுடன் கனத்த மனதோடு செல்வோம். அவர்களின் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியவில்லை என்றாலும் அவர்களை மனிதர்களாக மதிப்போம். 

ஆவணப்படம் இயக்கிய தோழர் திவ்யாவுக்கு வாழ்த்துகள் !!

Thursday, April 13, 2017

May 18 ( 2007 - Korean film )

அதிகார வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தில் அதிகார வர்க்கம் கொடுக்கும் ஒரே பரிசு மரணம் தான். ஒருவருக்கு கொடுக்கும் மரணம் மற்றொரு போராட்டத்திற்கான விதையாக அமைந்துவிடும். இது போராட்டக்காரர்களுக்கு தெரியும். அதிகார வர்க்கத்திற்கும் தெரியும். அதனால், பெரும்பாலான போராட்டத்தை ஒடுக்கும் போது போராட்டக்காரர்களோடு, பொது மக்களையும் சேர்த்து தாக்குவது அதிகார வர்க்கத்தின் வழக்கம். அப்போது தான் பொது மக்கள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக வர மாட்டான் என்பது அதிகார வர்க்கம் நினைப்பது தான் காரணம்.

இந்த ஒடுக்குமுறையை தாண்டிப் போராடிய போராட்டங்கள் பல நூற்றாண்டு காலமானாலும் தனித்து நிற்கும். அப்படி, தென் கொரிய நாட்டில் தன்னெழுச்சி கண்ட க்வான்ஜு மக்கள் இராணுவ வீரர்களுக்கு எதிராகப் போராடி வீர மரணம் அடைந்த உண்மை சம்பவத்தை உணர்வு பூர்வமாக காட்டியப்படம் தான் ”May 18”. க்வான்ஜுவில் கல்லூரியில் படிக்கும் தனது சகோதரனோடு அமைதியான வாழ்க்கை வாழ்பவன் மின் – வூ. சகோதரனின் தோழியான நர்ஸ் மீது ஒரு தலைக்காதல். அவளை கவர்வதற்காக அவள் மருத்துவப் பயணம் செல்லும் இடத்திற்கு செல்கிறான். தனது காதலை சொல்ல முடியாமல் தவிக்கிறான். ஒரு கட்டத்தில் அவளுக்கும் மின் – வூவுக்கு பிடிக்க இருவரும் திரைப்படத்திற்கு செல்கிறார்கள். படம் பார்க்கும் போது அவளிடம் தனது காதலை சொல்லலாம் என்று மின் – வூ நினைக்க, அரசியல் மாற்றங்கள் அவனது வாழ்க்கையை திசைமாற்றுகிறது. அவனது வாழ்க்கையை மட்டுமல்ல க்வான்ஜு மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. ஒரு சிலரது வாழ்க்கையை முடித்துவிடுகிறது. 

அப்படி என்ன க்வான்ஜு நகரத்தின் நடந்தது ? அதற்கு, தென் கொரிய அரசியல் பின்னனியை தெரிந்துகொள்ள வேண்டும். 

அக்டோபர் 29, 1979 அன்று அரசியல் விருந்தில் கலந்துக்கொண்ட தென் கொரிய அதிபர் பார்க் ச்ஹூங் கொரிய உளவுத்துறை அமைப்பால் கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்த கிம் ஜெ-க்யூவும் கைது செய்யப்படவில்லை. பல குழப்பத்திற்கு பிறகு ச்யோய் க்யூ என்பவர் தற்காலிக அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஆனால், புதிய அதிபரின் ஆணையில்லாமல் கொரிய உளவுத்துறையில் இருக்கும் முக்கியமான நான்கு உளவு அதிகாரிகள் இராணுவத்தினர் கைது செய்கிறார்கள். அதற்கு பின் இருந்தவர் ச்ஹுன்-டூ-வான் என்ற இராணுவ தளபதி. 

கொரிய உளவுத்துறை தனித்து இயங்கவும் தடை விதிக்கப்படுகிறது, அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார் ச்ஹுன்-டூ-வான். தென் கொரியாவின் குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்திய வட கொரியா மக்களை அரசுக்கு எதிராக தூண்டிவிடப்பார்க்கிறது என்ற வதந்திப்பரவியது. அதை தடுப்பதற்கு முன் ஏற்பாடாக பல பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர ச்ஹுன்-டூ-வான் நினைத்தார். போராட்டக்காரர்கள் என்று சந்தேகப்படுபவர்கள் இராணுவம் கைது செய்வதும் மட்டுமல்ல, மரணத் தண்டனை கொடுக்கவும் ஆணையிட்டார். 

மே 17 அதிகாரத்தை கைப்பற்றிய ச்ஹுன்-டூ-வான், மே 18 இராணுவத்தை க்வான்ஜு நகரத்திற்கு அனுப்புகிறார். இராணுவத்தினர் பொது மக்கள் மீது அராஜகமாக தாக்குதல் நடத்த பல அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். இராணுவத்தினர் கற்களும், பாட்டிலும் வீசி தங்கள் எதிர்ப்பை காட்டிவந்தனர். ஆரம்பத்தில் சில நூறு பேராக இருந்தப் போராட்டம், மே 20 அன்று 10,000 கொண்ட போராட்டமாக மாறுகிறது. 

அடுத்த நாள் ( மே 21), போராட்டத்தை ஒடுக்குவதற்காக தூப்பாக்கி சுடு நடத்தப்படுகிறது. இராணுவத்தின் எதிர்பாராத தாக்குதலால் மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள சிதறி ஓடுகிறார்கள். அன்று மாலை போராட்டம் நடந்த சாலை வெரிச்சோடி காணப்படுகிறது. ஆனால், க்வான்ஜு மக்கள் இராணுவத்திற்கு பயப்படவில்லை. காவலர் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி இராணுவத்தின் மீது பதில் தாக்குதல் நடத்துகிறார்கள். 

தற்காலிகமாக பின்வாங்கிய தென் கொரிய இராணுவம் அடுத்த நாள் எதிரி நாட்டு இராணுவத்தை தாக்குவது போல் சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. பெரும் இராணுவப்படையினர் நகரத்திற்குள் வருகிறது என்று தெரிந்தும், சில பேர் கைப்பற்றிய இராணுவ கட்டிடத்தின் இருந்து இராணுவத்திடம் போராடி இறந்தார்கள். 

க்வான்ஜுவில் மே 18 அன்று தொடங்கிய எழுச்சியை இராணுவத்தினர் மே 27 அன்று முழுமையாக ஒடுக்கினர். இதில் ஈடுப்பட்ட இராணுவ வீரர்களுக்கு பல பதக்கங்கள் கொடுத்து ச்ஹுன்-டூ-வான் அரசு அழகுப் பார்த்தது. இராணுவ சர்வதிகாரம் நீண்ட நாள் நிலைப்பதில்லை என்பது வரலாறு. 

1988ல் அதிபர் பதவியை இழந்த ச்ஹுன்-டூ-வான் மீது பல ஊழல் புகாரும், வழக்கங்களும் சந்தித்தார். அதுமட்டுமில்லாமல் க்வான்ஜு படுகொலை காரணமாக இருந்ததற்காக அவருக்கு மரண தண்டனையும் வழக்கப்பட்டது. ஆனால், அப்போதைய அதிபர் அவரது மரணத் தண்டனையை ரத்து செய்தார். 

இராணுவத்திற்கு எதிராக போராடிய க்வான்ஜு மக்களுக்கு ஒரு நினைவு சின்னமாக க்வான்ஜு நகரில் எழுப்பப்பட்டது. க்வான்ஜு படுகொலை ஈடுப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொடுத்த பதக்கங்களை தென் கொரிய அரசு திரும்பப் பெற்றது. 

இராணுவ அதிகாரத்தை துணிந்து எதிர்த்து போராடிய க்வான்ஜு மக்களின் போராட்டம் தென் கொரிய வரலாற்றில் மறக்க முடியாத சகாப்தமாக இருக்கிறது.

Tuesday, April 11, 2017

Edge of Seventeen ( 2016 - English Movie)

பதின்ம வயது என்பது ஆபத்தான வயது என்று பலர் சொல்வார்கள். காரணம், அந்த வயதில் தவறாக வழியில் செல்வார்கள், தவறாக பழக்கத்தை கற்றுக்கொள்வார்கள் என்பதற்காக மட்டுமல்ல, கற்றுகொள்ள வேண்டிய நல்ல விஷயங்களை தவறவிடக்கூடிய வயது என்பதாற்காகவும் தான். அந்த பதின்ம வயதில் உடல் ரிதியான மாற்றங்கள் மட்டுமல்ல, உளவியல் ரிதியான பல மாற்றங்களையும் சந்திக்க வேண்டியது இருக்கும். அதை எப்படி திறமையாக கையாண்டு, Balance ஆக வாழ்பவர்கள் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முடியும்.

அப்படி, பதின்ம வயதில் இருக்கும் ஒரு பெண் உளவியல் ரிதியான சந்திக்கும் சிக்கலை மையமாக கொண்ட கதை. நைடின், சிறுவயதில் இருந்தே யாருடனும் இனக்கமாக இருக்காதவள். சகோதரன், அம்மா கூட அந்நியமாக பார்ப்பவள். எந்த விஷயத்திலும் உற்சாகமோ, ஆர்வமோ இல்லாதவள். மற்றவர்களை போல் கலகலப்பாக இருக்க நினைத்தும் அவளால் அப்படி இருக்க முடியவில்லை. அவளுக்கு ஒரே ஆதரவு அப்பாவும், அவளது தோழி கிரிஸ்டா மட்டும் தான். 

அவளின் பதிமூன்று வயதில் அப்பாவும் இறந்துவிட, தோழி கிரிஸ்டா தவிர்த்து அவளுக்கு நெருக்கமாக யாருமில்லை. அவளின் பதின்ம வயது வந்தப் போது கூட அவளது அம்மாவும், சகோதரனும் அவளிடம் அக்கரையோடு நடந்துக்கொள்ளாமல் தங்கள் வாழ்க்கையில் சுயநலமாக வாழ்கிறார்கள். இதனாலையே நைடினுக்கு தனது சகோதரனை பிடிக்காமல் போகிறது. 

ஒரு கட்டத்தில் அவளது தோழி கிரிஸ்டாவும், சகோதரனும் காதலர்களாக மாற, கிரிஸ்டாவுடன் இருந்த நட்பையும் முறித்துக்கொள்கிறாள். தன் மீது யாரும் அன்பு செலுத்தவில்லை என்ற விரக்தியில் விபரீதமான முடிவு எடுக்கிறாள். அதில் இருந்து எப்படி மீண்டு வந்து, எப்படி மற்றவர்கள் போல் இயல்பானவளாக நடந்துக்கொள்கிறாள் என்பது தான் கதை. 

 பொதுவாக ஆங்கிலப்படத்தில் இதுப் போன்ற சப்ஜெட்டில் படம் வருகிறது என்றால் செக்ஸுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆனால், செக்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உளவியல் ரிதியாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் பதின்ம வயதுப் பெண் எப்படி அதில் இருந்து மீண்டு வருகிறாள் என்பது படமாக எடுத்திருப்பதை பாராட்டியாக வேண்டும். 

குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, இரட்டை மடங்காக வியாபாரமானப்படம். அமெரிக்காவில் விருதுகள், நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல், டோரண்டோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. 

 கொஞ்சம் பட்டைத்தீட்டி, டிங்கரிங் செய்து தமிழ் கலாச்சாரத்திற்கு மாற்றினால் தமிழ் படத்திற்கு நல்ல கதையாக அமையும்.

Tuesday, April 4, 2017

The Classified Files ( 2015 – Korean Crime Thriller)

பொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் ? குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக பணத்தை பெற்றோர்களிடம் பெற்று, குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கிறோமோ தங்களுக்கு பாதுகாப்பு என்று கடத்தல்காரர்கள் நினைப்பார்கள். அதே சமயம் பணத்தை கொடுக்க முடியாத பெற்றோர்கள் போலீஸிடம் சென்று, பணம் கொடுக்கும் போது பிடித்தால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களுக்குள் இருக்கும். 

இந்த அடிப்படை உண்மையை தெரிந்த கடத்தல்காரர்கள் வழக்கமான யுக்தியை மாற்றுகிறார்கள். குழந்தையை கடத்தி, பதினைந்து நாள் வரை குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார்கள். போலீஸ் குழந்தை இறந்திருக்கும் என்று தங்களின் அடுத்த வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோரிடம் மிரட்டி பணம் கேட்கலாம் என்று புதிய யுக்தியை கையாள்கிறார்கள். 

கோரியாவில் நடந்த உண்மை கடத்தல் சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ” The Classified Files”. 


கோரியாவில் இருக்கும் புசான் நகரத்தில் பள்ளி சிறுவ/சிறுமிகளை கடத்தும் நிஜ கடத்தல்காரர்களிடம் இருந்து 33 நாட்களுக்கு பிறகு ஒரு சிறுமியை மீட்ட உண்மை சம்பவத்தை கொண்டப் படம். 

பள்ளியில் இருந்து ஈன் – ஜூ என்ற சிறுமி கடத்தப்படுகிறாள். கடத்தப்பட்ட சிறுமியைக் குறித்து எந்த விதமான தகவல் இல்லை. போலீஸுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஒரு வேளை சிறுமியை கொன்றிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. சிறுமியின் அம்மா தனது மகள் நிஜமாகவே இறந்துவிட்டாளா என்பதை தெரிந்துகொள்ள ஆரூடம் சொல்லும் கிம் ஜோங்-சனிடம் செல்கிறாள். அவளது மகள் உயிரோடு இருப்பதாக ஆரூடன் சொல்கிறான். கடத்தப்பட்ட வழக்கு ஜோங்-கில் என்ற காவலாளியிடம் வருகிறது. 

எந்த துப்பும் இல்லாத சமயத்தில் கடத்தியவர்கள் 15 நாள் கலித்து பெற்றோர்களை தொடர்பு கொண்டு பணம் கேட்கிறார்கள். பெற்றோர்களில் போன் கால்களை இடைமறைத்து கேட்கும் ஜோங்-கில், அவனுக்கு உதவியாக ஆரூடம் சொல்லும் கிம் ஜோங்-சன் இருக்கிறான். 

 சக காவலர்கள் அந்த சிறுமி இறந்திருப்பாள் என்று முடிவில் இருக்க, ஆரூடன் கிம் ஜோங்-சன் வார்த்தை மீது இருந்த நம்பிக்கையில் சிறுமியின் தேடலில் ஜோங்-கில் தீவிரமாக இயங்குகிறார். அவர்கள் இருவரும் சிறுமியை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை. 

பகுத்தறிவுக்கு ஒப்பாத ஆரூடமும், காவலர்களுக்கு உதவும் பாத்திரமாக வருவது தான் ஏற்க முடியவில்லை. இத்தனைக்கும் உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்டப் படம் என்று சொல்லும் போது ஆரூடம் க்ரைம் இன்வஸ்டிகேஷனுக்கு உதவுமா போன்ற கேள்வி தோன்றுகிறது. 

படம் முடியும் போது நிஜமான ஜோங்-கில் , கிம் ஜோங்-சன் படங்களை காட்டி இறுதி வரையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததாக காட்டப்படுகிறது. 

Must Watch Movie என்று சொல்ல மாட்டேன். ஆனால், காவலர்களுக்குள் இருக்கும் உள் அரசியல் விசாரணையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதில் இந்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜோங்-கில் சிறுமி மீட்பதற்காக போராடும் போது சக காவலர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால், வெற்றி கிடைக்கும் போது அவனது பெயரை பின்னுக்கு தள்ளி பதக்கங்களை வாங்கிகொள்கிறார்கள். 

எல்லா ஊரிலும், அலட்சியம், ஈகோ, அடுத்தவன் உழைப்பில் குளிர்காய்யும் காவலர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Friday, March 31, 2017

சாப்பாட்டு இதிகாசம் : மதுரை பாண்டியன் மெஸ்

அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் அ.தி.மு.க தலைமை செயலகம் அருகில் இருக்கிறது மதுரை பாண்டியன் மெஸ்


 
மதியம் சாப்பாடு ரூ.90 மட்டும் தான். அசைவ உணவகத்தில் வெறும் சாப்பாடு மட்டும் எப்படி சாப்பாடுவது ? கொஞ்சம் சிக்கன், மட்டன் சேர்த்து கொண்டால் தானே முழுமையான சாப்பாட்டாக இருக்கும். 

இங்கு ஒரு விஷயம். அன்று சனிக்கிழமை. Officialy நான் Non-Veg சாப்பிடவதில்லை. இருந்தாலும், சைவ சாப்பாடு சாப்பிடவா இங்கு வந்தோம். மட்டன் சுக்கா, மட்டன் கோலா உருண்டை சொன்னேன். சாப்பிடும் போது எதோ குறையுதே என்று தோன்றியது. ஆமாம், ஒரு ஆம்லேட் ப்ளிஸ். 

இருவர் சாப்பிடுவதை நான் ஒருவன் சாப்பிடுகிறேன் என்பதை பக்கத்தில் இருப்பவரின் ரியாக்‌ஷேனில் தெரிந்தது. இருந்தாலும், கவலையில்லாமல் ஒரு கட்டுகட்டினேன். மொத்தம் பில் ரூ.335 மட்டும் தான். 

ராயப்பேட்டை வழியாக செல்பவர்கள் ஒரு முறை மதுரை பாண்டியன் மெஸ் சென்று சுவைத்துப் பாருங்கள்.

Office ( 2015 – Korean Thriller movie )

ஒருவனுக்கு அலுவலகத்தில் வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாம் கிடைத்த மாதிரி. அதில் வரும் வருமானத்தில் தனது குடும்ப சந்தோஷத்தை கவனித்து கொள்ள முடியும். தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியும். கடைசிக் காலத்திற்கு திட்டமிட முடியும். ஆனால், அதே அலுவலக வேலை அவனுக்கு மன அழுத்தத்தையும் கொடுக்கும். குடும்ப சந்தோஷத்தையும் கெடுக்கும். இன்றைய காலக்கட்டத்தில் அலுவலக வேலை, குடும்ப வாழ்க்கையை சிதைத்து கொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இரண்டையும் சமமாக நடத்துபவனால் மட்டுமே வெற்றிக்கரமாக வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும். 

அப்படி பலரது வாழ்க்கையை தீர்மானிக்கும் அலுவலகத்தை சுற்றி நடக்கும் கதை தான் “Office”. 

அலுவலகத்தில் வீட்டுக்கு வரும் கிம் தனது அம்மா, மனைவி, மகன் என்று மொத்த குடும்பத்தையும் சுத்தியலால் அடித்து கொலை செய்து தலைமறைவாகிறான். 

அடுத்த நாள் காவலர்கள் அவன் வேலை செய்த அலுவலகத்தில் அவனைப் பற்றி விசாரிக்கிறார்கள். யாரும் அவனைப் பற்றி தவறாக சொல்லவில்லை. எந்த விதமான கெட்டப் பழக்கமோ, கள்ளத் தொடர்போ இல்லை. அலுவலகத்தில் அடுத்த சீனியர் மேனேஜராக வரக்கூடிய லிஸ்டில் இருப்பவன். பணியின் அழுத்தம் காரணமாக இப்படி செய்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் போலீஸ் சந்தேகப்படுகிறது. 

அதே அலுவலகத்தின் ஒப்பந்த ஊழியராக இருக்கும் மி-ரே தனது வேலை நிரந்தத்திற்காக கடுமையாக உழைப்பவள். விசாரணையின் போது தனது வேலையை காப்பாற்றிக் கொள்ள மி-ரே கிம்மைப் பற்றி எதுவும் சொல்லாமல் மறைக்கிறாள். 

சீனியர் மேனேஜர் சேலஸ் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டிய வேலையை கிம்மிடம் கொடுத்திருந்தார். இப்போது அவன் இல்லாததால் கிம்முக்கு அடுத்தப்படியாக இருப்பவனிடம் இந்த வேலையை கொடுக்கிறார். 

காவலர்கள் விசாரணையின் போது கொலை நடந்த அன்று அலுவலகத்தின் ரெக்கார்ட்டான சி.சி.டி.வி காமிரா புட்டேஜ்யை பார்க்கிறார்கள். அதில், தனது குடும்பத்தை கொலை செய்த கிம் மீண்டும் அலுவலகத்திற்கு வந்தது தெரிகிறது. ஆனால், மீண்டும் அலுவலகத்தை விட்டு செல்லவில்லை. அப்படியென்றால் அவன் அலுவலகத்திற்குள் எங்கையோ மறைந்திருக்கிறான். அந்த சமயத்தில் சேல்ஸ் ரிப்போர்ட் தயாரிக்க வேண்டியவன் கொல்லப்படுகிறான். மீட்டிங் நடக்கும் இடத்தில் அவனது பிணம் கிடக்கிறது. தொடர்ந்து சேல்ஸ் ரிப்போர்ட் தயாரிக்கச் சொன்னப் பெண்ணும் இறக்கிறாள். கிம் தான் கொலை செய்திருப்பான் என்று அலுவலகத்தில் இருப்பவர்கள் சந்தேகப்படுறார்கள். தொடர்ந்து கொலை செய்யும் கிம் மி-ரேவை பார்க்கும் போது அன்போடு பேசுகிறான். அவனை பார்க்கும் போது வரும் அதிர்ச்சியில் காவலர்களையோ, மற்றவர்களையோ தொடர்பு கொள்ள முடியவில்லை. 

கிம் எதற்காக இத்தனை கொலை செய்ய வேண்டும் ? நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட்டுக்கும், கொலைக்கும் என்ன சம்மந்தம் ? ஒப்பந்த ஊழியரான மி-ரேவிடம் மட்டும் எதற்காக பேசுகிறேன் ? என்பதை அறிந்துகொள்ள படத்தை டவுன்லோட் செய்து/ DVD வாங்கி பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 

வழக்கமான சைகோ த்ரில்லர் வகை கதை தான். ஆனால், திரையில் காட்டிய விதத்தை பாராட்டியாக வேண்டும். படத்தில் பெரிய முடிச்சுகள் கிடையாது. யார் கொலை செய்கிறார் என்பதை ஒரு கட்டத்தில் எளிதில் யுகித்துவிடலாம். ஆனால், படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களுக்குள்ளே ஆயிரம் முடிச்சு அவர்களாகவே போட்டுக்கொள்வார்கள். அதை எப்படி அவிழ்க்கப் போகிறார் என்ற ஸ்வாரஸ்யத்தையும் வளர்த்துகொள்வார்கள். ஆனால், அது முடிச்சு அல்ல, சாதாரண ஒரு Coincidence என்பதை போல படம் செல்லும். 

உதாரணத்திற்கு, காலை அலுவலகத்தில் எல்லோரும் 9 மணிக்குள் வந்துவிட வேண்டும். நடக்கும் கொலை இரவு 9 மணியாக இருக்கிறது. இதற்குள் எதாரவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அப்படி எதுவும் இல்லை. அதேப் போல் மீட்டிங் ரூம்மில் அவ்வப்போது தண்ணீர் ஒழுகிறது. அந்த ஓட்டையில் இருந்து தான் ஒரு பிணம் விழுகிறது. அதன் வழியாக தான் கிம் அலுவலகத்திற்குள் வருகிறார் என்று நினைத்தால்… அதுவும் இல்லை. இப்படி நாமே யுகித்துகொண்டு ஸ்வாரஸ்த்தை வளர்த்துக்கொள்ளும் காட்சிகள் நிரம்ப இருக்கிறது. 

அலுவலத்திற்குள் த்ரில்லர் கதையை தேடிக் கொண்டிருக்கும் இயக்குனர், உதவி இயக்குனர் கண்டிப்பாக இந்தப் படத்தை பார்க்க வேண்டும். வேலையில் மன அழுத்தத்தை ஏற்று கொண்டால் அலுவலகத்தில் சென்று வீட்டுக்கு வரும் வரை மட்டுமல்ல… வீட்டுக்கு வந்த பிறகும் அந்த அழுத்தம் நம்மையும், நம்மை சார்ந்து இருப்பவர்களையும் பாதிக்கும். 

வேலை என்பது வருமானதிற்கு மட்டுமே….நமது வாழ்க்கையை ஆள்வதற்கில்லை. 

Office  படத்தின் ட்ரெய்லர்


Thursday, March 30, 2017

கேளிக்கை இரவுகள் - நக்ஷத்ரா

சென்னையின் இரவு வாழ்க்கையைப் பற்றிய புத்தகம். குடி, செக்ஸ் பற்றி தான் அதிகம் பேசுகிறது. தலைவர் சாரு பேசாததா என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக சொல்லும் போது இந்தப் புத்தகம் அதிக முக்கியத்துவம் பெருகிறது. 

தான் குடிப்பதாக இருந்தால், தனது பார்டனை குடிக்கக்கூடாது என்று சொல்லிவிடுவாராம். செக்ஸின் போது இருவருமே போதையில் இருந்தால் முழுமையான உறவு பெற முடியாது என்பதை கூறுகிறார். ( நான் உடன்படாத கருத்து. செக்ஸ் இருவருமே சுயநினைவில் அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒருவர் போதையில் சுயநினைவில்லாமல் இருக்கும் போது செக்ஸ் என்பது கற்பழிப்புக்கு சமம்.) இப்படி நூல் முழுக்க கருத்தளவில் நீங்கள் மறுக்கும் பகுதிகள் ஏராளமாக இருக்கிறது. ஆனால், ஒரு பெண் குடியின் ரசனையோடு எழுதியதால் எனக்கு இந்தப் புத்தகம் பிடித்திருந்தது. வாசிக்கும் போது இரண்டு பேக் அடிக்க வேண்டும் என்று கூட தோன்றியது. 

 ஒரு முறை ஜெயமோகன் தமிழை ஆங்கிலத்தில் எழுதலாம் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியது நினைவில் இருக்கலாம். ‘கேளிக்கை இரவுகள்’ ஆங்கிலத்தை தமிழில் எழுதிய நூல். அதிகமான ஆங்கில வார்த்தை தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். முகம் தெரியாத ’ நக்ஷத்ரா’ வுக்கு என் வாழ்த்துகள். 

**

கேளிக்கை இரவுகள்
- நக்ஷத்ரா
- Rs.50
- மின்னம்பலம் வெளியீடு

நூலை இணையத்தில் வாங்க....

LinkWithin

Related Posts with Thumbnails